Monday, April 6, 2009

' எங்கோ படித்த சில கவிதைகள் (ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை) '

ஈ மயில்!

இணையத்தில் சந்தித்த மயிலே!
உன் பெயர் எழுதி அனுப்பு ஒரு மெயிலே!

ஜாதி

வட்டத் தொட்டியில் குட்டை ஆலமரம்;
வாரிய வீடுகளிலும் ஜாதி குணங்கள்!

தாராளமயமாக்கல்

அதிர்ந்து போனாள் ஆயா!
அரைக்கீரை விற்கிறான் அம்பானி!

Saturday, April 4, 2009

'கால் சென்டர் கலாசாரம்!'

கடந்த மூன்றாண்டுகளில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதிலும் , இந்த BPO எனப்படும் கால் சென்டர் விஷயத்தில் மத்திய சுகாதார அமைச்சர் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை! சொல்லப் போனால் அவர் சொன்னது கொஞ்சம், எவரையும் புண்படுத்த வேண்டாமென்று சொல்லாமல் விட்டது மிக அதிகம்!

கால் சென்டர்களை ஆதரிப்பவர்களின் தரப்பு வாதம் என்னவென்றால்
“ எந்த ஒரு நன்மையும் சமூகத்தில் காலடி எடுத்து வைக்கும் போது கூடவே நாலு தீமையும் நுழையத்தான் செய்யும் ! நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமே தவிர ஒரேயடியாக அந்த நன்மைக்கே முட்டுக்கட்டை போடுவது கடைந்தெடுத்த பத்தாம் பசலித் தனம் !” ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் ’ வரவேற்க வேண்டியவையே என்று நம் பெரியவர்களே சொல்லவில்லையா ?’ “Work hard, Party hard! (கடினமாக உழை ! மிகக் கடினமாக பார்ட்டி கொண்டாடு !) என்ற கொள்கை உடையவர்கள் இந்தத் துடிப்பு மிகு இளைஞர்கள் ! இதில் என்ன தவறு? இரண்டு மூன்று தலைமுறை பழசாய்ப் போனவர்களெல்லாம் பொறாமையில் மூக்கைச் சிந்தி ஒப்பாரி வைக்கலாமா ?”

மேலெழுந்தவாரியாக நியாயம் போல் தோன்றும் இந்த வாதங்களில் பூசி மெழுகப்படும் விஷ(ய)ங்களை நாம் கூர்ந்து நோக்க வேண்டும் ! வேலைக்குச் சேர்ந்த முதல் மாதத்திலேயே , தன் தந்தையின் மாத சம்பளத்தை விட அதிகம் வாங்கும் ஒரு பையனோ பெண்ணோ , சற்று மிதப்புடன் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான் ! ஓரிரு வருடங்களில் சரியாய்ப் போய் விடக்கூடிய ஒரு சில்லறைக் குற்றம்தான் ! ஆனால் , வார இறுதியில் கொண்டாடப் படும் week end பார்ட்டிகள்தான் இந்த BPO க்களின் மாபெரும் சாபக்கேடு ! சிகரெட் , மது (பொதுவாக பீர் , பல சமயங்களில் விஸ்கி , ரம் எனக் கொள்க !) என்றால் இயல்பாகவே நம் பெண்களுக்குள்ள அருவருப்பு , வெறுப்பு , அச்சம், கூச்சம் , தயக்கம் அத்தனையையும் குண்டுக்கட்டாகத் தூக்கி வங்காள விரிகுடாவில் வீசிய புண்ணியத்தை இந்தக் கால் சென்டர்கள் தேடிக் கொண்டுள்ளன ! இந்திய (குறிப்பாகத் தமிழ் ) சமூகத்தில் கடந்த பல நூறு ஆண்டுகளாக நெறிகளில் மெல்ல மெல்ல ஏற்பட்ட சீரழிவை , நான்கைந்து வருடங்களிலேயே அசுரத்தனமாக மிஞ்சிக் காட்டிய பெருமையும் இவற்றையே சாரும் ! புகை , பீர் மற்றும் ரம் , விஸ்கி போன்றவை தண்ணீர் போலப் புழங்கும் ஒரு சூழலில் , ஆண்கள் பெரும்பாலானோர் தன் வயம் இழந்த சூழ்நிலையில் , திருமணம் ஆகாத பெண்கள் வளைய வருவது மேல்தட்டு வர்க்கத்துக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரலாம் ! என்னதான் கை நிறைய சம்பாதித்தாலும் இந்தப் பெண்ணுக்கு நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டுமே என்ற அக்கறையுள்ள மத்யமர்களுக்கு எந்நாளும் ஒத்து வராது !

மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை எழுதியது போல் ‘நம் ஆட்களுக்கு அளவாகக் குடிக்கவும் தெரியாது !’ இன்றுதான் உலகின் கடைசி நாள் என்பது போல் அரக்கத் தனமாகக் கொண்டாடப் படும் இந்த வார இறுதிப் பார்ட்டிகளில் பெண்கள் பலரும் குடித்து விட்டு ‘அவுட் ’ ஆகி விழுவதும் , ‘கால் சென்டரில் இதெல்லாம் சகஜமப்பா !’ என்று சில தடியன்கள் அவர்களை ‘க்வாலிஸ் ’ வண்டியில் தூக்கி வந்து வீட்டில் பெற்றோரிடம் நடு நிசியில் தள்ளி விட்டுப் போவதும் எத்தனையோ வீடுகளில் நடக்கின்றன ! காலையில் அதே பெண் எழுந்து , தேள் கொட்டிய திருடனாய் இருக்கும் பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளிடம் தன் உரிமைகளைப் பற்றி ஆவேசமாய் சர்ச்சை செய்வதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறதே ! பெண்களின் ஒழுக்க உணர்வு தளர்ந்தால் சமூகம் குட்டிச் சுவராக சில பத்தாண்டுகளே போதுமே ! பொருளாதார மேதைகள் நமக்குக் காட்டும் ரசவாதமான 10% GDP வளர்ச்சிக்கு நாம் கொடுத்துத் தொலைக்க வேண்டிய விலை இது என்று புறந்தள்ளி விட்டுப் போக முடியுமா பண்பாட்டின் இந்த அதல பாதாளச் சீர்கேட்டை ? நாளை சமூகத்தை மீட்டெடுக்க எத்தனை மகான்கள் முயன்றாலும் முடியுமா ? துரதிர்ஷ்டவசமாக , இது போன்ற சமுதாயச் சிக்கல்களுக்கெல்லாம் ‘RESET’ பட்டன் இன்னமும் கண்டு பிடிக்கப் படவில்லையே !!!

சினிமா விரும்பி

(வடக்கு வாசல் நவம்பர் 2007 இதழில் சில சிறிய மாற்றங்களோடு வெளி வந்தது)

'நடிகை பாவனாவைப் பற்றி ஒரு 'பாவ்லா' கவிதை!'

தாரகையே பாவனா,
உன் பற்றி கவிதை எழுதுமா என் பேனா?!
திரையுலகில் உண்டு ஏற்கனவே ஒரு மீனா,
அவருக்கு சரியான போட்டி இனி நீதானா?!
உன்னை ஒரு நாள் நேரிலே சந்திப்பேனா?
"மேடம், சூப்பர் உங்க படம்" என்று புகழ்வேனா?
இல்லை வெறும் வெள்ளித்திரையில் மட்டும் பார்ப்பேனா?
தினம் தினம் காண்பேனா ஒரு பகல் கனா?
உன்னை நேரில் காணும் ஆசையெல்லாம் போகுமா வீணா?!

சினிமா விரும்பி

Friday, April 3, 2009

'அரிச்சந்திரனின் செல்பேசி'

அரிச்சந்திர மகாராஜா,
இறங்கி வந்தார் பூமிக்கு.
வாங்கினார் ஒரு நோக்கியா.
கடையிலிருந்தே போட்டார் போன் சந்திரமதிக்கு;
“ஐ ஆம் இன் எ மீட்டிங்! திரும்பி வர லேட்டாகும்!”

சினிமா விரும்பி

(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது)

' பாரதி என்றொரு கவிஞன் '
சமீபத்தில் ஒரு இணையதளத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரைப் பற்றி சில விமரிசனங்கள் எழுதப் பட்டிருந்தன. நான் எழுதிய பதில்கள் அதே தளத்தில் உடனே வெளியிடப்பட்டன. அவை இதோ கீழே:

பாரதி என்ற ஈடிணையற்ற கவிஞன் ஆங்கிலேயரை எதிர்க்காமல் சுக வாழ்வு கண்டிருக்கலாம். ராவ் பஹதூர் பட்டத்தை வாங்கிக் கொண்டு பங்களா, கார் என்று இக பர சுகங்களையெல்லாம் அனுபவித்திருக்கலாம். வாழ்நாள் முழுக்க பிடுங்கித் தின்ற வறுமையையும் இறுதி ஊர்வலத்தில் இருபது பேருக்கும் குறைவாய் இருந்த அவலத்தையும் தவிர்த்திருக்கலாம். ஏன், நல்ல மருத்துவம் பார்த்து அந்தப் பாழாய்ப் போன மரணத்தையே கூட இன்னும் சில பத்தாண்டுகள் தள்ளிப் போட்டிருக்கலாம். தன் ஒரே பெண் குழந்தையின் திருமணத்துக்குக் கூட சேகரித்து வைக்காத பிழைக்கத் தெரியாத மூடனாய் இருந்திருக்க வேண்டாம்! யாராவது கேட்டால் எனக்கு தேச சுதந்திரம் முக்கியமல்ல! அதை விட முக்கியம் சமுதாய மறுமலர்ச்சி அதற்காகப் போராடுகிறேன் என்று சொல்லி ஆங்கிலேயரிடமிருந்து சாமர்த்தியமாகத் தப்பியிருக்கலாம். சுதந்திரம் கிடைத்த பிறகும் தன் கவித்திறனைக் கொண்டு ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கலாம். பழைய ஆவணங்களைத் தோண்டி எடுக்க ஆரம்பித்தால் எந்த வரலாற்று நாயகனும் அப்பழுக்கற்று வெளி வருவது கடினம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து தப்பி ஒருவர் பாண்டிச்சேரிக்குச் செல்வதை ஒரு யுத்த தந்திரமாகத்தான் கொள்ள வேண்டும். அனைவருமே சிறை சென்று மடிந்து இயக்கமும் மண்ணாய்ப் போக வேண்டுமென்ற அவசியமில்லை. மகா கவிஞன் மீது சுலபமாக சுட்டு விரலை நீட்டுவோர் தானோ தன் மூதாதையரோ சுதந்திர வேள்வியில் என்ன பங்கேற்றோம் என்று சற்றே சிந்திக்கட்டும்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க , பாரதியின் பாடல்களில் உள்ள விடுதலை வேட்கையையோ அவை தமிழரிடம் ஏற்படுத்திய யுகப் புரட்சியையோ இந்த ஆவணங்கள் எள்ளளவும் குறைக்கப் போவதில்லையே!

**************************************************************************

நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாரதியின் வகுப்பினரிடம் இயல்பாகவே இருந்த வடமொழி வாஞ்சை பாரதியிடமும் இருந்திருந்தால் அது பஞ்சமா பாதகம் இல்லை! அது தமிழுக்கு அவர் செய்த துரோகமும் இல்லை! மேலும் , பாரதி போன்ற ஒரு கவிஞனுக்குத் தாய்மொழி தவிர நான்கைந்து மொழிகளில் பரிச்சயமும் புலமையும் இருப்பது சகஜம்தான். அப்படி இல்லையென்றால்தான் அது அதிசயம்! பாரதி வாரணாசி, பாண்டிச்சேரி போன்ற பல இடங்களில் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ’ என்று ஆணித்தரமாக உரைத்திருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

*************************************************************************
நான் முன்பே சொன்னது போல் நிஜ மாந்தர்கள் சற்றே ஏறக்குறையத்தான் இருப்பார்கள். நாம் விரும்பும் சகல விதமான கல்யாண குணங்களும் ஒருங்கே அமைந்த ஒரு கவிஞன் வேண்டுமென்றால் அது கற்பனையில் மட்டுமே சாத்தியம்!

**************************************************************************

ஜஸ்டிஸ் கட்சியோ அல்லது அதற்கு முந்தைய பிராமணரல்லாதார் பிரகடனமோ முதல் முதல் துவங்கப்பட்ட போது அதே இயக்கம் பின்னாளில் திராவிட இயக்கமாகப் பரிணாம வளர்ச்சியுற்று சமுதாய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இவ்வளவு மகத்தான வெற்றிகளைப் பெறும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, பாரதியைப் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஆங்கிலேயரை ஆதரிக்கும் இந்த இயக்கம் விரைவில் மங்கி விடும் என்றும் சுதந்திரப் போராட்டம்தான் நிலைத்து நிற்கும் என்றும் மனப்பூர்வமாக நம்பினார்கள். அன்றைய சூழ்நிலையில் அது அவர்களின் கணிப்பு . அவ்வளவுதான்! கணிப்புகள் தவறாகலாம்! இதில் பாரதியை மட்டும் தனிமைப் படுத்தி அவர் தலையை மட்டும் ஏன் ஐயா உருட்டுகிறீர்கள்?!

**************************************************************************

பாரதி போன்ற உணர்ச்சிப் பிழம்பான படைப்பாளிகள் பல விஷயங்களில் எஃகு போன்ற உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதில்லை! குறிப்பாக இந்தப் பெண்ணியம் சார்ந்த சிக்கலான விஷயங்களில் பாரதி ஒரு கால கட்டத்தில் மிகவும் புரட்சிகரமாகவும் பின்னாளில் சற்றே நடைமுறைக்குகந்த மாதிரியும் சிந்தித்திருப்பார் போல் உங்கள் கட்டுரையிலிருந்து தெரிகிறது. முழுக்க முழுக்க முரண்படாத வரையில், என்னைப் பொறுத்தவரை இது மன்னிக்கக் கூடிய சிறு குறைபாடுதான். அந்த நாளிலேயே ஒரு தமிழ்க் கவிஞன் பெண் விடுதலையின் பல்வேறு பரிமாணங்களை இவ்வளவு ஆழமாக ஆராய்ந்திருக்கின்றானே என்ற பிரமிப்புதான் எனக்கு ஏற்படுகிறது! அதை விடுத்து ‘ஆஹா பார்த்தீர்களா பாரதியின் போலித்தனத்தை?’ என்பது போன்ற தலைப்பும் வெறுப்பைக் கக்கும் சொற்பிரயோகங்களும் கட்டுரையின் நம்பகத்தன்மையைக் கணிசமாகக் குறைக்கின்றன.

சினிமா விரும்பி

' சனிமூலை! '

நண்பர் ஒருவர், திரு. யதார்த்தா பென்னேஸ்வரன், நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். கிட்டத்தட்ட சாமி வந்த உத்வேகத்துடன் ‘வடக்கு வாசல்’ என்ற மாத இதழைத் தன்னந்தனியாக தில்லியிலிருந்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சஞ்சயன்,வியாசன், அங்கதன், ராகவன் தம்பி என்ற பல புனை பெயர்கள் அவருக்கு உண்டு! வடக்கு வாசலின் கடைசி மூன்று பக்கங்களில் ராகவன் தம்பி என்ற பெயரில் அவர் எழுதும் ‘சனிமூலை’ கட்டுரை நான் மிகவும் விரும்பிப் படிப்பவற்றுள் ஒன்று. அது பற்றிய என் கவிதை கீழே:

சனிமூலை,

வாசகர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற தனி மூலை;
கருத்தாழத்தில் நுனிப்புல் மேயாத மூலை;
வடக்கு வாசலைப் பின் அட்டையிலிருந்து படிக்கத் தூண்டும் நவரசக் கனிமூலை;
Fast food விரும்பிகளுக்கு நல்ல நொறுக்குத் தீனி மூலை!

http://www.vadakkuvaasal.com/
http://sanimoolai.blogspot.com/

சினிமா விரும்பி

' இந்த BJP பெருசுங்க லொள்ளு தாங்க முடியலப்பா! (ஒரு கற்பனை உரையாடல்) '

( சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு idlyvadai.blogspot.com ல் ஒரு பதிவில் பின்னூட்டமாக என்னால் சில மாற்றங்களுடன் பதியப் பட்டது)

அத்வானி: எழவு , ஒரு பார்முலாவும் ஒர்க் அவுட் ஆவ மாட்டேங்குது ! போன வாட்டி ‘India Shining’ னு சொன்னோம்; நமக்கே ஷூ பாலிஷ் போட்டுட்டானுங்க! சாமியார் , சாமியாரிணி, சினிமா நடிகர்னு யாரைக் காமிச்சாலும் ஓட்டு விழ மாட்டேங்குது!

வெங்கையா நாயுடு : இந்த வாட்டி , தீவிரவாதம்னு பூச்சாண்டி காட்டினோம் ! மாப்பு, வச்சிட்டாங்கையா ஆப்பு!

அருண் ஜெட்லி: போன வாட்டியே ஆட்சியில் இருந்த ஆறு வருஷத்துல எல்லா அரசு நிறுவனத்தையும் தூக்கி தனியாருக்குத் தாரை வார்த்திருக்கணும்! கோட்டை விட்டுட்டோம்! இனிமே நாம என்னிக்கு ஜெயிச்சு, நான் என்னிக்கு disinvestment மந்திரி ஆகி … விடிஞ்சுரும்!

ராஜ் நாத் சிங்: நமக்கு ஜாதகம் சரியில்லைய்யா! என்ன சொன்னாலும் ஜனங்க நம்புவேனான்றாங்க! டெல்லில பத்து வருஷம் ஆனாலும் காங்கிரசே தேவலைன்றாங்க! பழைய வெங்காய வெலைய மறக்க மாட்றாங்க!

வெங்கையா நாயுடு : ராஜஸ்தான்ல யாரோ மகாராணியை எல்லாம் ப்ரொஜெக்ட் பண்ணிப் பார்த்தோம் , பாச்சா பலிக்கலை!

ஜஸ்வந்த் சிங்: யாரங்கே? கொஞ்சமா ஓப்பியம் போட்டு ஒரு டீ கொண்டா.

அத்வானி: குறுக்குச்சால் ஓட்டறது நம்ப பார்ட்டில ரொம்ப ஜாஸ்திய்யா ! மதன் லால் குரானா , உமா பாரதி ,கல்யாண் சிங், இப்போ மீணான்னு ஒரு ராஜஸ்தான் மந்திரி, சொல்லிக்கிட்டே போகலாம் .

வேறு ஒருவர்: (மனதுக்குள்) வாஜ்பாய்க்கு எதிரா நீங்க ஓட்டறா மாதிரியா?!

வெங்கையா நாயுடு : அது மட்டுமா? காரியம் ஆனதும் கழட்டி உடறது, ஊமைக் காயம் வர்றா மாதிரி அடிக்கறது , இதிலெல்லாம் நம்ப பார்ட்டி ஆளுங்க கில்லாடியாச்சே! குரானா, உமா பாரதி, கல்யாண் சிங் , பங்காரு லக்ஷ்மண் , கோவிந்தாச்சார்யா எல்லாரையும் எப்படி smooth ஆ கழட்டி உட்டோம்!

அருண் ஜெட்லி: அது என்ன ஜுஜுபி! ஓட்டுப் போட்டதும் ஒட்டு மொத்தமா ஜனங்களையே கழட்டி உட்டோமே அதை விடவா?!

சுஷ்மா ஸ்வராஜ்: கட்சிக்குள்ளே பெண்ணுரிமையே இல்ல! என்னைத் தலைவியா மத்த சிறுசுகள் ஏத்துக்கிட்டு எல்லாப் பெருசுங்களையும் ஓரங்கட்ட மாட்டுறாங்களே!

அருண் ஜெட்லி: எல்லாரும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! விக்கிலீக்ஸ் காரன் கிட்ட பேட்டி கொடுத்துட்டு வந்து கோதாவில் இறங்கறேன்!

ஆர். எஸ். எஸ்.: இவங்களை எல்லாம் அமுக்கத்தான் நாம நிதின் கத்கரியை உள்ள புகுத்தினோம்! இப்ப என்னடான்னா மொத்த கோஷ்டி தமிழ்நாடு காங்கிரசையும் மிஞ்சிடும் போலிருக்கு!

அத்வானி: ‘கிடக்கிறது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்கிற மாதிரி இந்த பைரோன் சிங் ஷெகாவத் வேற நான்தான் பிரதமர் என்கிறாரு ! 2009 க்கு என்னதான்யா வழி?!

யஷ்வந்த் சின்ஹா: அயோத்யா, ராமர் பாலம், மத மாற்றம், வெல வாசி, 123 ஒப்பந்தம், தீவிரவாதம் ….

வெங்கையா நாயுடு : …… ரியல் எஸ்டேட் ஏற்றம், ஷேர் மார்க்கெட் சரிவு , அது இது எல்லாத்தையும் போட்டுக் கலக்கி வைப்போம்! அதுக்குள்ள இந்தப் பாழாய்ப் போன ஜாதகமும் கொஞ்சம் மாறித் தொலைக்குதா பார்ப்போம் !

எல்லோரும்: ஜெய் ஸ்ரீ ராம்!

சினிமா விரும்பி

‘Dr CNA பரிமளம்’

பள்ளி நாட்களில் மேற்கு மாம்பலம் லேக் வியூ ரோடில் ‘Dr CNA பரிமளம் MBBS’ என்ற போர்டு தொங்கும் ஒரு எளிமையான கிளினிக்கைப் பார்த்ததுண்டு. டாக்டரை நேரில் பார்க்கா விட்டாலும் ‘அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனுக்கு இவ்வளவு ஆடம்பரமற்ற கிளினிக்கா?’ என்று நானும் நண்பர்களும் வியந்ததுண்டு. சமீபத்தில் , முதுமையில் , நோயின் உபாதை தாங்க முடியாமல் அவர் தன் வீட்டுக் கிணற்றில் விழுந்து உயிர் நீத்தார் என்று படித்த போது மனம் வலித்தது. நிச்சயமாக வறுமை ஒரு காரணமே இல்லை என்றாலும் MGR இன் ‘நேற்று இன்று நாளை’ படத்தில் வரும் ‘ தம்பீ நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று.. ‘ பாடல் நினைவுக்கு வந்தது:

‘நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்;
பொது நலத்தில்தானே நாள் முழுக்க கண்ணாயிருந்தார்;
ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையைத் தந்தார்;
தம் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையைத் தந்தார்! ‘

சினிமா விரும்பி

' காதோடுதான் நான் எழுதுவேன்! '

சமீபத்தில் ஒரே நாளில் இரண்டு காது (ஒரே நபருடையதல்ல! தனித் தனி!) சம்பந்தப் பட்ட செய்திகள் idlyvadai.blogspot.com ல் வெளி வந்தன.

‘சென்னையில் துப்புரவுத் தொழிலாளியின் காது கிழிபட்டது &
பந்தயத்தில் தோற்ற பின் ரூ 50/- தராததால் நண்பரின் (!) காதைக் கடித்துத் துப்பிய வாலிபர்’

இதற்கு நான் இட்ட பின்னூட்டம் கீழே:

இப்படியும் இருக்குமா?
சே! சே! இருக்காது !
இதில் ஏதோ சூது வாது கீது!
இதைப் படிப்பவர் மனம் நிஜமாகவே உருகாது?
அமைதி விரும்பும் தமிழ்நாட்டுக்கு இது அடுக்காது!
ஐயோ! இந்தக் கொடுமையை எல்லாம் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறதே என் காது!
ஞாபகம் வருதே தினம் தூங்கும் போது!
தெலுங்குக்காரர் யாராவது சொல்லக் கூடாதா? ‘இதி நிஜம் காது'
பிரச்னையைத் தீர்க்க யாராவது போனார்களா தூது?
சரி, இப்போ எப்படியிருக்கு கிழிஞ்ச ரெண்டு பேர் காது?

சினிமா விரும்பி

‘ஹோட்டல் மாமியா Deluxe A/C'

rprajanayahem.blogspot.com ல் சமீபத்தில் சில மாற்றங்களுடன் நான் இட்ட ஒரு பின்னூட்டம் :

சின்ன வயசில் (1971-72 இருக்கும் ), ஒரு நாள் இரவு, நானும் அப்பாவும் காலாற உஸ்மான் ரோடு, பாண்டி பஜார், ராஜகுமாரி தியேட்டர் என்று நடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்பா சொன்னார்: ” வாடா, ஹோட்டல்ல சாப்பிடலாம்”. நான் சொன்னேன்: ” அப்பா, நடிகர் A. கருணாநிதி ‘ஹோட்டல் மாமியா’ என்று ஒன்று இங்கேதான்பா எங்கேயோ நடத்தறார். இந்த வாரம் குமுதத்தில் பார்த்தேன்” . கொஞ்சம் கஷ்டப் பட்டுத் தேடிப் பிடித்துப் போனால், வாசலில் கலர் கலர் சாக் பீஸால் போர்டு போட்டிருந்தது : “கைம்மா உறுத்தல், ரஷ்ய உள்ளான் , காடை, கௌதாரி” என்று இன்னும் என்னென்னவோ! . அப்பா என்னை அடிக்காத குறைதான்! ” ஏண்டா நாசமாப் போறவனே! பேரப் பார்த்தாலே தெரியல, மிலிடரி ஹோட்டல் என்று?”. அப்புறம் ஒரு வழியாக ‘கீதா கபே’யோ ஏதோ ஒன்றில் மசால் தோசை முழுங்கி விட்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்! அந்த ரஷ்ய உள்ளானின் தலைவிதி , தமிழ்நாட்டில், தருமமிகு சென்னையில், தி.நகரில் வந்து மண்டையைப் போட வேண்டுமென்று! அதையோ, அதன் சந்ததியினரையோ , கபளீகரம் செய்யும் வாய்ப்பு பின்னாளில் கிடைக்காமலே போயிற்று! கெடுத்தார் அப்பா!

சினிமா விரும்பி

நேருவின் பேரனின் மகன்

அரசியலில் சிலர் சில சமயம் செய்வதறியாமல் என்னென்னவோ செய்து விட்டு மேலும் மேலும் தவறான பாதையிலேயே சென்று விடுகிறார்கள்! சமீபத்திய உதாரணம் வருண் ஃபிரோஸ் காந்தி! இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாகத் தென்னகத்தில் காந்தி, நேரு என்றால் தெய்வமாகக் கும்பிடும் பாரம்பரியம் பல்லாயிரம் குடும்பங்களில் உண்டு! துரதிர்ஷ்டவசமாக, 1980 இல் பிறந்த இவருக்கு இது தெரியாமலேயே போயிற்று! நேருவின் பேரன் என்ற ஒரே வாஞ்சைக்காக சஞ்சய் காந்தி செய்த நெருக்கடி காலக் கொடுமைகளையெல்லாம் 1977 இலும் 1980 இலும் அறவே புறந்தள்ளத் தயாராயிருந்தது கிட்டத் தட்ட முழு தென்னிந்தியாவும்! இன்றைய காங்கிரஸ் தலைமையுடன் ஒத்து வரா விட்டாலும் பரவாயில்லை, இவர் இந்திரா (போனால் போகிறதென்று சஞ்சய்!) பெயரால் ஏதாவது ஒரு லெட்டர் பேட் கட்சி நடத்தினால் கூட போதும்! நாளடைவில் மேலே வரலாம், மக்கள் வாய்ப்பளிப்பார்கள்! அதை விட்டு விட்டு ‘ நேருவின் பேரனின் மகன், இந்திராவின் பேரனா இப்படி?’ என்று பலரையும் முகம் சுளிக்க வைப்பதில் என்ன லாபம்? இவர் என்னதான் தலைகீழே நின்றாலும் இவரை ஒரிஜினல் BJP யாக யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! யாராவது இவருக்கு எடுத்துச் சொல்வார்களா?!

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...