Monday, November 30, 2009

தென் கொரியா, ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 5)

பாங்காக் ஏர்போர்ட் ஆகட்டும் அல்லது கொரியாவின் சியோல், செங்க்வான் நகரங்களாகட்டும், நான் பார்த்த வரையில், துப்புரவுத் தொழிலாளர்கள் (ஆண் பெண் இரு பாலரும்) "நான் ஏழையாக இருக்கலாம். ஆனால் இது என் தொழில், கண்ணியமான ஒன்று" என்ற உணர்வு வெளிப்பட சுயமரியாதையுடன் தன் வேலையைப் பார்க்கிறார்கள்.(கிட்டத் தட்ட McDonalds இல் பணி புரியும் ஸ்வீப்பர் இளைஞர்களைப் போல்). நம்மைப் போல் சில தொழில்களைத் தாழ்ந்தவை என்று முத்திரை குத்தி அதனை அவர்களையும் முழுமையாக நம்பச் செய்து கூனிக் குறுக வைக்கும் கொடுமை அங்கு தென்படவில்லை.

'முன்னே பின்னே செத்தால்தான் சுடுகாடு தெரியும்' என்பது போல் சில உன்னதமான முதல் முறைத் தவறுகளைச் செய்தேன். கொண்டு போன மொத்த ரூபாயையும் டாலராக மாறி, மறுபடியும் அவற்றைக் கொரியன் வோனாக மாற்றித் திரும்ப வருகையில் மிச்சம் இருந்தவற்றை டாலராகவும் கடைசியில் ரூபாயாகவும் மாற்றியதில் கிட்டத்தட்ட 700 ரூபாய் கமிஷனிலேயே போனது! நண்பர்கள் சிலர் என்னிடமிருந்து வோன் பெற்றுக் கொண்டு டாலர் கொடுத்ததால் நஷ்டம் இந்த அளவோடு போயிற்று!

ஆறு நாட்களில் ஒரே ஒரு கொரிய வார்த்தைதான் கற்றுக் கொண்டேன் . "கன்சாமிடா " ('கந்தசாமிடா' போல் இல்லை ?!) என்றால் 'நன்றி' என்று அர்த்தம் . கன்சாமிடாவில் 'டா' வைக் கொஞ்சம் இழுத்துச் சொல்ல வேண்டும். பிளைட்டில் உள்ளே நுழையும்போது நம்மை வரவேற்கும் ஏர் ஹோஸ்டஸ் 'லப்ப லப்பா ' என்று ஏதோ சொல்கிறார் . கொரியன் மொழி தெரிந்தவர்கள் விளக்குங்கள் !

'கிம்' என்ற குடும்பப் பெயர் மிகவும் அதிகம் புழங்குகிறது . தெருவில் போகும் போது "Mr கிம் " அல்லது "Mrs கிம்" என்று குரல் கொடுத்தால் நிச்சயம் நூறு பேராவது திரும்பிப் பார்ப்பார்கள் !

தொடரை முடிக்கும் முன் ஒரு கொசுறுத்தகவல்! நான் போயிருந்த செங்க்வான் (பூசான்) நகரிலிருந்து ஜப்பானில் உள்ள, அணுகுண்டு விழுந்த (அது தானாகவேயா விழுந்தது?!) நாகசாகி கடல் தாண்டி சில நூறு கி.மீ. தூரம்தான்!

சினிமா விரும்பி

Tuesday, November 17, 2009

தென் கொரியா, ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 3)

லிமோசின் எனப்படும் சொகுசு பஸ்ஸில் டிரைவர், கண்டக்டர், லக்கேஜை டிக்கியில் எடுத்து வைப்பது எல்லாம் ஒரே ஆள்தான்! பஸ் கிளம்பும்போது கைடு போல் நம்மை வரவேற்கவும் செய்கிறார்! Hyundai, Daewoo, Samsung, LG என்ற நமக்குப் பரிச்சயமான கொரிய பெயர்கள் எங்கெங்கும் காணக் கிடைக்கின்றன . சென்னையில் உள்ள பச்சை நிறத் தாழ் தள சொகுசுப் பேருந்து பச்சை மற்றும் நீல நிறங்களில் சியோல் நகரெங்கும் பரவிக் கிடக்கிறது.

சாப்பாட்டைப் பொறுத்த வரை சில அனுபவஸ்தர்கள் சொல்லி அனுப்பினார்கள். ஹோட்டலில் பிரேக்பாஸ்ட் , லஞ்ச் , டின்னர் எதுவாக இருந்தாலும் தலையில் தொப்பி போட்டுக் கொண்டு கையில் frying pan உடன் நிற்கும் குக்கிடம் நேராகப் போய் விடு; உனக்கு வேண்டுகின்ற ரைஸ், நூடுல்ஸ் மற்றும் காய்கறி ஐட்டங்களை எல்லாம் கையால் காண்பித்து ' No Meat' என்று தெளிவாகச் சொல்லிவிட்டு பிரை செய்து கொடுக்கச் சொல்லு; உன் பிரச்னை தீர்ந்தது என்றார்கள். இந்த அறிவுரையை காலை ஆம்லெட் முதல் கடைப் பிடித்தேன். மற்றவர்களை விட எனக்கு ஐந்து நிமிடம் அதிகமாகியதே தவிர மற்றபடி உணவு சுடச் சுடக் கிடைத்தது. மிகவும் உபயோகமான அறிவுரை. வாழ்க அந்த நண்பர்கள்! 'உலகம் சுற்றும் வாலிபனில்' நாகேஷ் திணறுவதைப் போல் மூங்கில் குச்சிகளோடு மல்லுக் கட்டாமல் போர்க், ஸ்பூன் உபயோகப் படுத்தியே சாப்பிட்டேன்!

Pepsi, Coke fountain களைப் போலவே சின்னச் சின்ன ஹோட்டலில் கூட Cass, Hite என்னும் கொரிய பியர் வகைகளுக்கும் fountain உள்ளது. ஒரு ஹோட்டலில் 'கிம்' எனப்படும் ஐட்டம் சைடு டிஷ்ஷாக வைக்கப் பட்டது. அது என்ன என்று சர்வரிடம் கேட்டுப் புரிந்து கொள்வதற்குள் தாவு தீர்ந்து விட்டது. Sea, Sea என்று அந்த ஆள் சொல்ல Seafood ஆ ? என்று நான் திரும்பத் திரும்பக் கேட்கக் கடைசியில் அந்தப் பேக்கட்டே எனக்குக் காட்டப் பட்டது. அதில் Sea Weed என்று எழுதி இருப்பதைப் பார்த்ததும் சாப்பிட ஆரம்பித்தேன். கடுகெண்ணையில் வதக்கிய கருவேப்பிலை வடாம் போல் இருந்தது அந்தக் கடல் பாசி! வீட்டுக்கு இரண்டு சின்ன பேக்கட் வாங்கி வந்து விட்டேன்!

உலக மயமாக்கலின் வீச்சையும் தாக்கத்தையும் முழுமையாக உணர்ந்து கொண்ட அரசு , மக்கள். நான் போன எல்லா கவுண்டர்களிலும் response time மின்னல் வேகத்தில் பிரமிக்க வைத்தது. என்னைத் தேடி வந்து பேசிய ஒரு பேராசிரியர் 'எங்கள் மாணவர்கள் படித்து முடித்து இந்தியாவில் இந்தியக் கம்பெனிகளில் வேலைக்குச் சேர முடியுமா ?' என்று கேட்டார் . 'யோவ்! எங்க பசங்க வயத்துல அடிக்காதய்யா!' என்று சொல்லத் தோன்றியது. 'இந்தியாவிலேயே கொரிய கம்பெனிகள் பல உள்ளனவே, அவற்றில் சேரலாமே' என்று சொல்லி சமாளித்தேன் !

ஆங்கிலமே தெரியாமல் தன் துறையில் சிறந்து விளங்குபவர்களைப் பார்த்த போது எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. 30 - 40 வருடம் முன்னால் யாரோ ஒரு சிலர் பொறியியல் , மருத்துவம் மற்றும் பல துறைப் பாடப் புத்தகங்களையும் ஆங்கிலத்திலிருந்து கொரியனுக்கு மொழி பெயர்க்கும் கடினமான வேலையைச் செய்து முடித்திருக்க வேண்டும் . அப்போதுதான் இது சாத்தியமாகும் .தாய்நாடு மற்றும் தாய்மொழி மீது இவர்களுக்கு இருக்கும் அதீதப் பற்று நம்மவர்களுக்கு (தமிழராகட்டும், ஹிந்திக்காரர்களோ அல்லது மற்றவரோ ஆகட்டும் ) உண்டா என்றால் பதில் சொல்லத் திணற வேண்டியிருக்கும்.

பாங்காக்கில் நான் Transit இல் இருந்த போது எல்லாப் பத்திரிகைகளிலும் ஒரே தலைப்புச் செய்திதான். ராகேஷ் சக்ஸேனா என்ற இந்தியாவில் பிறந்த தொழிலதிபர் 1995 இல் ஒரு பெரிய வங்கி ஊழலில் சிக்கி, கனடாவுக்குச் சென்று அங்கே 13 வருடங்களாக வீட்டுக் காவலில் வைக்கப் பட, நீண்ட போராட்டத்துக்குப் பின் வெற்றிகரமாக அவரை தாய்லாந்துக்கு அன்றுதான் extradition செய்திருந்தார்கள். அவரும் நம்ப ஊர் போல் லேசாக ஜெயிலில் தலை காட்டி விட்டு நேரே மருத்துவமனைககுத்தான் சென்றார்!

பாங்காக்கிலிருந்து தில்லி வரும்போது பிளைட்டில் பெருமளவு இந்தியர்கள்தான். வசதியாக சீட் கிடைத்ததென்று நான்கு பேர் 'Taash khelenge!' என்று சத்தம் போட்டு சீட்டாட ஆரம்பித்து விட்டார்கள். சூழ்நிலை நாசமாக்கப் பட்டதால் (நம் ஆட்கள்தான் இதில் உஸ்தாது ஆயிற்றே!) தாய் விமானப் பணியாளர்களும் இவர்களுக்கு இது போதுமென்று எதுவுமே serve செய்யாமல் விட்டு விட்டார்கள்! ஒரு கிளாஸ் தண்ணீர் கூடக் கேட்டு வாங்க வேண்டி இருந்தது.

Cliche ஆக இருந்தாலும் சொல்கிறேன். அமரர் மணியன் முதல் இன்று வரை எல்லோரும் சொன்னதுதான் . அங்கு எல்லாவற்றிலும் தென்படும் ஒழுங்கும் நேர்த்தியும் நம் நாட்டில் என்றாவது ஒரு நாள் வருமா என்றால் சந்தேகம்தான்.

சினிமா விரும்பி

Wednesday, November 11, 2009

தென் கொரியா , ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 2)

பாங்காக்கிலிருந்து சியோல் ஐந்தரை மணி நேரப் பயணம். நமக்கும் தென் கொரியாவுக்கும் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேர வித்தியாசம். பரப்பளவில் தமிழ்நாட்டை விடச் சிறியது. (தென் கொரியா ஒரு லட்சம் Sq. KM , த.நா. 1.30 லட்சம் Sq.KM). தமிழ்நாட்டு மக்கள் தொகை ஆறு கோடிக்கும் மேல். தென் கொரியாவில் 4.8 கோடி. சியோலில் மட்டுமே ஒரு கோடி. சியோல், இன்சியான் & க்யோங்கி- டோ வைச் சேர்த்தால் (சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் போல்) தேசத்தின் ஜனத்தொகையில் கிட்டத்தட்ட பாதி! என்னடா, கேப்டன் படம் போல் புள்ளி விவரமா என்று பார்க்காதீர்கள்! போவதற்கு முதல் நாள்தான் நெட்டில் படித்தேன்!

சியோலின் இன்சியான் ஏர்போர்ட்டுக்கு 2009 இல் உலகின் மிகச் சிறந்த ஏர்போர்ட் என்ற விருது கிடைத்திருக்கிறது என்றார்கள். " Incheon International Airport (Seoul, S Korea) has been named World's Best Airport for 2009, in the World Airport Survey results published by Skytrax. "

அனுபவத்தில் தெரிகிறது. நான் ஒரு டெர்மினலில் தவற விட்டு விட்ட tag எதுவும் எழுதாத சிறிய hand baggage ஒன்றை கவுண்டரில் முறையிட்ட 13 நிமிடங்களில் என்னிடம் கொண்டு வந்து தந்தார்கள்! நம்ப ஊரில் நடக்குமா என்றெல்லாம் கேட்காதீர்கள்! நடக்கும் என்று என்னைப் பொய் சொல்ல வைக்காதீர்கள்!

நவம்பரிலிருந்து மார்ச் வரை குளிர் பிளந்து விடும் என்றார்கள். நல்ல வேளையாக, நான் போன அக்டோபர் கடைசியில், கிட்டத்தட்ட தில்லியைப் போலவே இருந்தது. ஒரு நாள் மழையில் நனைந்ததும் இதமாகவே இருந்தது.

முன்னேறிய நாடுகளின் பட்டியலில் தென் கொரியாவைக் கண்ணை மூடிக் கொண்டு சேர்க்கலாம். மெட்ரோ ரயிலில் எந்த இளைஞனிடமும் வழி கேட்டால் உடனே மொபைலை எடுத்து க்ளிக் செய்து மெட்ரோ மேப்பைப் பார்த்து உங்களுக்கு விளக்கி விடுவான் "பல்லாவரம் தாண்டியதும் குரோம்பேட் வரும், இறங்கிக்குங்க" என்று! வடிவேலு சொல்வது போல் ரோட்டிலேயே முகம் பார்த்துத் தலை சீவிப் பொட்டு வைத்துக் கொள்ளலாம்!

எல்லா டாக்சிகளிலும் கொரியனில் எழுதப் பட்ட GPS system உண்டு. டாக்சியில் மீட்டர், கிரெடிட் கார்டு வசதி, ரசீது கொடுப்பது எல்லாம் உண்டு. (இருந்தாலும் , ட்ராபிக் சிக்னலிலும் மீட்டர் ஓடுவதால், ஓரிரு முறை ட்ராபிக்கை சாக்காக வைத்து மீட்டரில் அதிக ரீடிங் காட்டியது போல் எனக்குத் தோன்றியது.) ஆனால் ஆங்கிலம்தான் சுட்டுப் போட்டாலும் வர மாட்டேன் என்கிறது. போன தலைமுறையை விடுங்கள், இளைஞர்களிலேயே ஒரு சிலர் மட்டும்தான் நல்ல சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள். அப்படி ஒரு ஆள் கிடைப்பது உங்கள் அதிர்ஷ்டம்! மற்றபடி 'NO' என்பதற்கு அழகாக இரண்டு கையையும் குறுக்காக 'X' போல் காட்டுவார்கள் . 'த்ரீ' என்பதற்குக் கட்டை விரலில் இருந்து ஆரம்பித்து மூன்று விரலை ஸ்டைல் ஆகக் காட்டுவார்கள்! ஒரு இளைஞன் "நான் இந்தியாவுக்கு வந்து பூனாவில் ஒரு வருடம் ஆங்கிலம் படித்தேன்" என்றான். பெருமையாக இருந்தது. 'Free Interpretation available' என்று டாக்சியில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் டிரைவருக்கு கொஞ்சூண்டு ஆங்கிலம் தெரியும் என்று அர்த்தம். இல்லாவிட்டால் சைகை பாஷையும் மீட்டர் காட்டும் அமௌண்டும்தான்!

'Work Hard,Party Hard' என்ற கொள்கையில் முழு நம்பிக்கை கொண்ட தேசம், குறிப்பாக இளைய தலைமுறை. செய்யும் எந்தக் காரியத்திலும் ஒரு தீவிர முனைப்பு, கவனம், முழுமை. ஏனோ தானோ போக்கு மருந்துக்கும் கிடையாது. வெளிநாட்டவர்களுக்கு மெனக்கெட்டு உதவும் மனப் பான்மை, இல்லாவிட்டால் நம் நாட்டு இமேஜ் கெட்டு விடுமே என்ற அக்கறை. எனக்குத் தவறாக வழி சொல்லி விட்ட ஒரு பள்ளி மாணவன் மூச்சு இரைக்க ஓடி வந்து தவறை சரி செய்தான்! இவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது.

1910 இலிருந்து இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடையும் வரை ஜப்பானின் காலனியாதிக்கத்தில் இருந்தார்களாம் , இரண்டாய்ப் பிளக்காத கொரியா தேசத்தினர் . அதனால்தானோ என்னவோ, ஜப்பானை எல்லாத் துறையிலும் மிஞ்சிக் காட்ட வேண்டுமென்ற ஒரு உத்வேகம் தெரிகிறது. ஏற்கனவே மிஞ்சி விட்டார்கள் என்றே சொல்லுவேன்! 'ஐயோ, என்ன இருந்தாலும் நாம் இருவரும் (வட, தென் கொரியாக்கள்) ஒரே தேசம்தானே, இப்படிப் பிளவு பட்டுக் கிடக்கிறோமே! ' என்ற ஆதங்கமும் பேச்சில் அவ்வப்போது தெரிகிறது.

Internet டின் மேல் அலாதிப் பிரியம் இவர்களுக்கு! எல்லாக் கட்டடங்களின் உச்சியிலும் கம்பெனி பெயருடன் அதே size font இல் Web address ஐயும் எழுதித் தள்ளி இருக்கிறார்கள்!

சியோலில் இருந்து செங்க்வானுக்கு ஒரு மணி நேர பிளைட்டில் சென்றிருந்தோம். பிளைட்டில் நாம் தூங்கும்போது refreshment serve செய்து முடித்து விட்டால் நம் முன்னால் ஒரு குட்டி ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறார்கள். " When you were resting, we had served refreshments. Pl. call us when you wake up" என்று. என்ன அருமையான ஐடியா!

தேசத்தின் கட்டுமானத்தில் பெண்களின் பங்களிப்பு நன்றாகவே தெரிகிறது. நகர்ப் புற 'White Collar Job' மட்டுமல்லாமல் நான் போயிருந்த தொழிற்சாலையில் யூனிபார்ம் போட்ட எத்தனையோ பெண் தொழிலாளர்களைப் பார்க்க முடிந்தது.

பிச்சைக்காரர்களே கண்ணில் தென்படவில்லை என்று சொல்வதற்கு இருந்தேன், தொப்பி போட்ட கண் தெரியாத ஒரு வயோதிக தம்பதி பாட்டுப் பாடிப் பிச்சை எடுத்ததைப் பார்க்கும் வரையில். பாட்டும் நம்ப ஊர் சரஸ்வதி சபதத்தின் 'தாய் தந்த பிச்சையிலே.. ' அல்லது ராஜபார்ட் ரங்கதுரையின் 'அம்மம்மா, தம்பி என்று நம்பி.. ' போலத்தான் காதில் கேட்டது! கோட்டு சூட்டு எல்லாம் போட்டுக் கொண்டு மெட்ரோவில் ஏதோ ஒரு பெட்டியைத் திறந்து வீடியோ கேசட் போல் ஒரு வஸ்துவை 'பிதாமகன் ' சூர்யா பாணியில் விற்கும் சிலரையும் பார்த்தேன். அப்படி ஒரு ஆளைப் புகைப்படம் எடுக்க முயன்ற போது நாசூக்காக நகர்ந்து விட்டான்.

மற்றவை அடுத்த பகுதியில்.

சினிமா விரும்பி

Saturday, November 7, 2009

தென் கொரியா , ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 1)

வேலை நிமித்தம் ஆறு நாட்கள் தென் கொரியா ( சியோல் மற்றும் செங்க்வான் ) செல்ல நேர்ந்தது. முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே செல்கிறேன். 'ஐயையோ, டின்னர்ல நாய்க்கறி கொடுத்துடப் போறாண்டா' என்று பயமுறுத்திய பங்காளிகள் உண்டு! வழியில் பாங்காக்கில் இறங்கி காய்கறி விற்கும் படகில் தலைவரைப் போல் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்று பாடப் போகிறாயா என்று கிண்டலடித்த புண்ணியவான்களும் உண்டு. நேர்மையாக சாப்பாடு மற்றும் உடைகளைப் பற்றி அறிவுரை கொடுத்தவர்களும் உண்டு. (இது மிக உதவியாய் இருந்த கதை பின்னால்)

பாஸ்போர்ட்டில் ஒரு சர்தார்ஜியிடம் முதல் முறையாக ' Departed Delhi' என்ற முத்திரையை வாங்கிக் கொண்டு பாங்காக் செல்லும் தாய் விமானத்தில் அமர்ந்தேன். இந்தியன் வெஜிடேரியன் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததால் சுமாரான சாப்பாடு கிடைத்தது. (மற்ற பிளைட்களில் அப்படிக் குறிப்பிடாமல் போனதால் வேக வைத்த பீன்ஸையும் முட்டைக் கோசையும் தொண்டையில் திணித்தது தனிக்கதை ! )

பாங்காக் ஏர்போர்ட். திறந்து மூன்றே வருடங்கள் ஆன , உலகின் மிகப் பெரிய ஏர்போர்ட்களில் ஒன்று. 'சுவர்ணபூமி' என்ற சௌந்தர்யமான பெயருக்கேற்ப மிக அழகாகப் பராமரிக்கப் படுகிறது. தூரம் அதிகமென்பதால் லக்கேஜைத் தள்ளிக் கொண்டு நடக்க வசதியாக Travelator எனப்படும் படுக்கப் போட்ட எஸ்கலேட்டர் எக்கச்சக்கமாகப் பரப்பி வைத்திருக்கிறார்கள். சிலர் அதில் நிற்காமல் நடந்து செல்லும்போது சினிமாவில் ட்ராலி ஷாட் போல் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது!

நம்ப ஊர் தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்த பிரம்மாண்டமான சிற்பம் ஒன்று இருக்கிறது . வாசுகி என்ற பாம்பு, மேரு மலை எல்லாமே தத்ரூபம்! . மலையின் மேல் தாய்லாந்து கிரீடத்துடன் சிவபெருமான் போல மீசையுடன் ஒருவர்; . ஆனால் நான்கு கைகளில்தான் திரிசூலம் , சங்கு , சக்கரம் , வஜ்ராயுதம் எல்லாம் இருக்கின்றன ! கொஞ்சம் தள்ளி நம் கருடாழ்வார் போல ஒரு மிகப் பெரும் துவாரபாலகன் சிற்பம் கொள்ளை அழகு ! பாங்காக்கில் 'Visa on entry' எளிதில் கிடைக்குமென்றாலும் வெளியே போய் விட்டுத் திரும்ப நேரம் மிகக் குறைவாக இருந்ததால் வெளியே போகவில்லை.

டில்லியில் தாய் விமானத்தில் நமஸ்தே போட்டு வரவேற்றார்கள். சரி இந்தியா என்பதால் செய்கிறார்கள் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அவர்களும் உலகமெங்கும் ஏர் இந்தியா போல் வணக்கம்தான் போடுகிறார்கள் என்று!

பாங்காக்கிலிருந்து சியோல் போன கதை அடுத்த பகுதியில். கொஞ்சம் காத்திருக்கவும்.

சினிமா விரும்பி

Thursday, November 5, 2009

அண்ணலே!

விரதமிருந்தே
வெள்ளையனை
வெளியேற்றிய
காந்தி அண்ணலே!

உன் புகழ் போற்றிப்
படமெடுக்கவே
எங்களுக்கோர்
வெள்ளையன்
தேவைப்பட்டானே!

சினிமா விரும்பி
(இந்த காந்தி ஜெயந்தி அன்று எழுதியது )

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...