Monday, August 14, 2017

கோமுப்பாட்டி



கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆண்டுகள் முன்பே விதவையானவர். அந்நாளைய வழக்கப்படி மொட்டை அடித்து, பிரவுன் கலர் சேலையால் தலையை மூடி இருப்பார் (தசாவதாரம் கிருஷ்ணவேணிப் பாட்டி போல!) பாட்டியின் மகள் வயிற்றுப்  பேத்தி ஜலஜா.  சிறு வயதிலேயே தாயை இழந்து, தகப்பனும் பொறுப்பில்லாமல் இருக்கவே பாட்டியுடனும் தாய் மாமன் (ஜலஜாவின் அம்மாவுக்குத் தம்பி), மாமியுடனும் இருக்கத் தொடங்கியவள்.  பாட்டிக்கும் பேத்திக்கும் அவ்வளவு ஓட்டுதல்! மாமாவும் பாசக்காரர். ஜலஜாவுக்குக் கல்யாணத்துக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சரியாக அமையவில்லை. "எல்லாத்துக்கும் நேரம்னு ஒண்ணு வர வேண்டாமா?" என்பாள் பாட்டி.

ஒரு நாள் மாம்பலத்திலிருந்து ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு என்று கொஞ்சம் ஷாப்பிங், கொஞ்சம் விண்டோ ஷாப்பிங் செய்யப் போனார்கள் பாட்டியும் ஜலஜாவும். உஸ்மான் ரோடைக் கடக்கும் போது, பின்னாலிருந்து வேகமாக வந்த ஒரு சைக்கிள்காரன் பாட்டியின் மீது மோதி விட்டான்.  கீழே விழுந்து பாட்டிக்கு  மண்டையில் அடிபட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. திராணியற்ற பாட்டி மயங்கி விட்டாள். கூட்டம் கூடி சைக்கிள்காரனை நையப் புடைத்தது. கையெடுத்துக் கும்பிட்ட சைக்கிள்காரன் பாட்டியையும் பேத்தியையும் ஒரு சைக்கிள் ரிக்-ஷாவில் ஏற்றி விட்டுத் தான் பின்னாலேயே வீடு வரை வருவதாய் சத்தியம் செய்ததும் கூட்டம் விலகிற்று.


ஐந்து நிமிடத்துக்குள் சாமர்த்தியமாக அல்வா கொடுத்து விட்டான் சைக்கிள்காரன். ஏற்கனவே வெகுளி! பதட்டத்திலும் இருந்ததால் வீடு வரும் வரை ஜலஜாவுக்கு இது தெரியவில்லை. அந்தக் கால வழக்கப்படி பாட்டியை  ஜி. ஹெச் சில் சேர்த்தார்கள். மருத்துவர்கள் பிராணவாயு  கொடுத்தார்கள்.  ஆனால் பாட்டிக்குப் பிராணன் திரும்பி வரும் என்று நம்பிக்கை  கொடுக்கவில்லை! ஜலஜாவுக்குத் துணையாகப் பிற பெண்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லி விட்டு ஆண்கள் மட்டும் மருத்துவ மனையிலேயே இரவு முழுவதையும் கழித்தார்கள். தெரிந்தவர் ஒருவர் வீட்டில் அவ்வப்போது ஜலஜாவுக்கு போன் வரும், பாட்டிக்கு நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்று. ஒவ்வொரு முறையும் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடுவாள்!

கோமுப்பாட்டியின் உடல் மறுநாள் விடிந்ததும் ஆம்புலன்சில் வந்தது. பேத்தி அரற்றிய கொடுமையை யாருமே பார்க்கக் கூடாது. பெரியவர் ஒருவர் கிசுகிசுத்தார் “பாட்டி ஆஸ்பத்திரில கொண்டு போய்ச் சேர்த்ததுமே போய் விட்டாள்! இந்தப் பேத்தி ஒண்ணு இங்க இருக்கே, கிழவி மேல உசிரையே வச்சுண்டு, இதுக்காகத்தான் சளைக்காமல் பொய் சொன்னோம்". மதியம் பாட்டி எரியூட்டப் பட்டாள்!

சினிமா விரும்பி

Monday, June 5, 2017

ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மிகப் பெரிய நடிகர்களுடன் முதன்முறையாக நடிக்க வாய்ப்புக் கிடைத்த நடிகர் நடிகைகளுக்கான ரெடிமேட் டெம்ப்ளேட்!


ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற மிகப் பெரிய நடிகர்களுடன் முதன்முறையாக நடிக்க வாய்ப்புக் கிடைத்த நடிகர் நடிகைகளுக்காகவே இந்த ரெடிமேட் டெம்ப்ளேட் உருவாக்கப் பட்டுள்ளது. எந்த ஒரு பத்திரிக்கை அல்லது  தொலைகாட்சி நேர்காணலுக்கு வேண்டுமானாலும் இந்த டெம்ப்ளேட்டை  தாராளமாகவும் உடனடியாகவும் உபயோகப் படுத்திப் பயனடையலாம்!

நிருபர் கேள்வி : இத்தனை பெரிய நடிகருடன் ஒரு நாள் நடிப்போம் என்று என்றாவது நினைத்ததுண்டா?

நடிகர்/நடிகை பதில்: "மை காட்! சிறு வயதிலிருந்து அவருடைய பரம  ரசிகன்/ ரசிகை ஆன எனக்கு இப்படி ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் கனவு கூடக் கண்டதில்லை! இன் பாக்ட், போனை என் தம்பிதான் எடுத்தான். விஷயத்தை அவன் என்னிடம் சொன்ன போது கூட " நக்கல் பண்றியாடா?" என்றேன். அவன் " சத்தியமா" என்றதும் மேகத்தில் பறக்க ஆரம்பித்து விட்டேன்! ஒரு வாரம் ஆன பிறகும் தரைக்கு வரவில்லை!"

நிருபர்: முதல் நாள் பெரிய நடிகருடன் நடிக்கும் போது எப்படி இருந்தது?

நடிகர்/நடிகை: "ஷூட்டிங் அன்றுதான் அவரை முதலில் பார்த்தேன். பயத்தில் நாக்கு மேலே ஒட்டிக் கொண்டு விட்டது. உதவி இயக்குனர் சொல்லிக் கொடுத்த எல்லா வசனமும் மறந்தே போச்! இயக்குநர் "ஸ்டார்ட் கேமரா ஆக்-ஷன்" சொன்ன பிறகும் அப்படியே ஷாக் அடித்தது போல் நின்று கொண்டிருந்தேன்! "கட்! கட்!" என்றார் கோபத்துக்குப் பெயர் போன டைரக்டர். அவர் திட்ட ஆரம்பிப்பதற்குள் பெரிய நடிகர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டுத் தட்டிக் கொடுத்தார். " நான் என்ன பூதமா? பிசாசா? உன்னைப் பிடித்து சாப்பிடவா போகிறேன்? பயத்தைத் தூக்கிக் கடாசி விட்டு சகஜமாகப் பேசி நடி! ஆல் தி பெஸ்ட்!" என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.  இவ்வளவு பெரிய நடிகர் என் லெவலுக்கு இறங்கி வருகிறாரே?! என்று எனக்கு ஒரே ஆச்சரியம். இவர் நம்பிக்கையைக் கெடுத்து விட்டால் நான் இந்த பீல்டுக்கே லாயக்கில்லை என்ற உண்மை பொட்டில் அறைந்தது. அப்படியே மூச்சைப் பிடித்துக் கொண்டு நடித்துக் கொடுத்தேன். மொத்த யூனிட்டும் எழுந்து கை தட்டிய போதுதான் தெரிந்தது ஒரே டேக்கில் முடிந்து விட்டது என்று!   இது வரை வந்த எல்லாப் புதுமுகங்களும் சாருடன்  நடிக்கும் போது பத்து டேக் வாங்காமல் விட்டதில்லை என்று அவர்கள் சொன்ன போது " அப்பாடா! இனிமேல் எப்படியும் ஒப்பேற்றி விடலாம் என்ற தைரியம் வந்தது! ஹீ இஸ் ரியலி கிரேட்!“ என்று உற்சாகத்துடன் பேட்டியை முடித்துக் கொண்டார்!

சினிமா விரும்பி

Thursday, August 18, 2016

நா. முத்துகுமார்

நா. முத்துகுமார்

நாற்பத்தோராயிரம் பாடல் எழுத வேண்டியவன் நீ!
நாற்பத்தொன்றில் அநியாயமாய்ப் போய்ச் சேர்ந்தாயே!

சினிமா விரும்பி
 

Monday, May 30, 2016

"நான் ஒரு விளையாட்டு பொம்மையா?"

"நான் ஒரு விளையாட்டு பொம்மையா?"

1985-87 இல் நான் பரீதாபாதில் பணியில் இருந்த போது மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தன் மூத்த மகனுடன் என் வீட்டருகில் வசித்து வந்தார். சிறு வயதில் அயோத்யா மண்டபம் நிகழ்ச்சிகளில் அவரைப் பல முறை பார்த்ததுண்டு என்பதனால் நானே சென்று அறிமுகப் படுத்திக் கொண்டேன். பெரியவர்  சமீபத்தில்தான் பக்கவாதத்தால் தாக்கப்பட்டு முழு வலது புறம் செயல் இழந்து விட்டிருந்தார். பேச்சும் குழறும்.

"மாம்பலத்தில்  உங்க மாடி வீடு என்ன ஆச்சு சார்?" என்றேன். "பொண்ணுங்க கல்யாணத்துக்காக பில்டரிடம் வித்துட்டேம்பா!" என்றார். விட்டு விட்டு அவர் பேசிய வார்த்தைகளில் பெரும் ஆதங்கம் தெரிந்தது.

எங்கள் நண்பர் குழாத்தில் ஒருவன் நன்றாகப் பாடுவான். கர்நாடக இசையில் கேள்வி ஞானமும் உண்டு. "நவரச கானடாவில் வரும் பாபநாசம் சிவன் பாடலான 'நான் ஒரு விளையாட்டு பொம்மையா, ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு?" எனக்காகப் பாடுவாயா?' என்றார். நண்பனுக்கு முழு வரிகளும் தெரியாது என்றதும் "பரவாயில்லை! தெரிந்த வரை பாடு போதும்!" என்றார்.

அவன் பாடி முடிப்பதற்குள் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். அப்படி ஒரு அழுகை! அவர் அழுது முடித்த பின் நாங்கள் அமைதியாக  வெளியேறினோம்.

அடுத்த பத்து நாட்களில் பெரியவர் அந்த ஜகன் நாயகி உமையிடமே போய்ச் சேர்ந்து விட்டார் என்று தகவல் வந்தது! இசை அவரைப் பிழைக்க வைக்கா விட்டாலும் அவருடைய மன பாரத்தைப் பெருமளவு குறைத்திருக்கும் என்றே எனக்குத் தோன்றியது!
சினிமா விரும்பி

Thursday, October 9, 2014

மாண்டலின் ஸ்ரீனிவாஸ்


1980 இல் கிண்டி பொறியியற் கல்லூரியில் படித்து முடித்த பின் ஜம்ஷெட்பூரில் டாடா நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருந்த நேரம். 'அய்யாக்கண்ணு மெஸ் ' என்ற எங்கள் செல்லமான தமிழ் மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, 9-10 வயதுள்ள ஒரு பையன் அப்பாவுடன் வந்து அமர்ந்தான். அங்குள்ள தமிழ்ச் சங்கத்தின் ( பெயர் என்ன தெரியுமா? மதராஸி சம்மேளனி ! இப்போது மாற்றி விட்டார்களா தெரியவில்லை! ) அமைப்பாளர் ஒருவரும் கூட வந்தார். 'நாளைக்கு என்ன சார் கச்சேரி?' என்றேன். 'இதோ இருக்கானே இந்தத் தெலுங்குப் பையன்தான் மாண்டலின் வாசிக்கப் போகிறான்' என்றார். நான் அதற்கு முன் மாண்டலினை 'ஷோலே' படத்தில் 'மெஹ்பூபா, மெஹ்பூபா ' பாடலில் ஜலால் ஆகா வாசித்துதான் பார்த்திருக்கிறேன். அதில் கர்நாடக இசையைக் கொண்டு வர முடியும் என்பதே  எனக்குத் தெரியாது!

பின்னாளில் தன் காந்தர்வ இசையால் மகுடியில் மயங்கிய பாம்பாக ரசிகர்களை உலகெங்கும் கட்டிப் போட்ட அந்தத் 'தெலுங்குப் பையன் 'இவ்வளவு சீக்கிரம் மறைவான் (ர்) என்று கனவிலும் நினைக்கவில்லை!

என்றாவது ஒரு நாள் திரும்பி வர மாட்டாயா ஸ்ரீனிவாஸ்?

சினிமா விரும்பி  

Wednesday, July 17, 2013

தேடிச் சோறு நிதந் தின்று!



பாரதியாரின் உணர்ச்சிப் பிழம்பான கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயற்சித்துப் பார்த்தேன்! முடிவுகள் கீழே!:

தேடிச் சோறு நிதந் தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து -மனம்

வாடித் துன்ப மிக உழன்று - நரை

கூடிக் கிழப் பருவ மெய்திக் - கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

மகாகவி சுப்ரமணிய பாரதி

Oh! Maa Shakti!

Did you think I will also perish like many of those silly folks

who hunt around for their daily food,

indulge in lots of petty gossip,

cause harm to others by their actions,

undergo mental agony themselves,

develop grey hair and grow old and

subsequently become fodder to the cruel Yama?

Mahakavi Subramania Bharati


Monday, April 22, 2013

குதுப் மினார்- சில புகைப்படங்கள்



தில்லியில் இத்தனை ஆண்டுகளாக இருந்தும் குதுப் மினாரை அவசரமில்லாமல் அமைதியாகப் பார்த்ததில்லையே என்ற ஆதங்கம் பல வருடங்களாக இருந்தது. போன சனிக்கிழமை அதற்கான நேரம் வாய்த்தது.

நிதானமாக , ஆற அமர, ஒவ்வோர் தூணையும் ரசித்துப் பார்க்க முடிந்தது. மொபைலில் பற்பல புகைப் படங்களையும் எடுத்தேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

சினிமா விரும்பி

Wednesday, March 6, 2013

சுஜாதாவைச் சந்தித்தேன்!



பிப்ரவரி 27 அமரர் சுஜாதாவின் நினைவு நாள்.

பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் எழுத்தாளர் சுஜாதாவின் அசுர ரசிகன் நான்!

ஜம்ஷெட்பூரில் சில காலம் பணி புரிந்த போது நண்பர்கள் சொல்வார்கள்: "சுஜாதாவே அசந்து விடுவார்டா, இப்படி ஒரு வெறியன் இருப்பதைப் பார்த்து!"

1993 இல் தில்லியில் 'ஸ்கோப்' வளாகத்தில் எங்கள் அலுவலகத்தின் கீழேதான் ஆறாவது மாடியில் BEL தில்லி அலுவலகம் இருந்தது. ஒரு நாள் லிப்ட் திறக்கும் போது உள்ளே பார்த்தால் BEL மணல் நிற சீருடை அணிந்த ஐந்தாறு பேர் ( ஓரிருவர் தமிழரல்லாதோர் போல் தோன்றியது). நடு நாயகமாக ஒருவர், சுஜாதாவின் பாஸ் போல. பக்கத்தில் மிக உயரமாஆஆஆஆஆஆஆஆன சுஜாதா! ஜிலீர் என்று நாக்குக்கடியில் ஷாக் அடித்தாற்போல் இருந்தது! பாஸ் சுஜாதாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார் "Sometime back, I read an article in 'Manjari''என்று.

தரைத்தளத்தில் இறங்கி அவர்களுடன் கூடவே 'தேனா வங்கி' வாசலில் நிறுத்தப் பட்டிருந்த வெள்ளை நிற அம்பாஸடர் வரை போனேன்.

"சார் நீங்கள் எழுத்தாளர் சுஜாதாதானே?"

"தான்".

என்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டேன். பிரபல நாடகாசிரியரான என் சித்தப்பா பெயரையும் சொன்னேன். ''அவரை நல்லாத் தெரியுமே எனக்கு" என்றார்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நானே BEL அலுவலகம் போனேன் . புதுவரவுகளின் நேர்முகத் தேர்வுக்காக பெங்களூரிலிருந்து இரண்டு நாள் பயணமாக வந்திருக்கிறார் என்று அறிந்தேன். அவருடைய தில்லி (பெங்காலி) உதவியாளருக்கு ஒரே ஆச்சரியம்!

"தமிழ்நாட்டில் சிவாஜி, எம்ஜியாருக்குப் பிறகு இவர்தான் பிரபலம் என்பார்கள். நீங்கள் அதை நிரூபிக்கிறீர்களே! அவரை எப்படி அடையாளம் கண்டீர்கள்?"

"என்னப்பா இது? நாங்கள் பார்க்காத சுஜாதா போட்டோவா!" .

சுஜாதாவை அறைக்குள் போய்ப் பார்த்து மறு நாள் மதியம் அப்பாயிண்ட்மென்ட் வங்கிக் கொண்டேன். ஆனால் இரண்டாம் நாள் இண்டர்வியூ சீக்கிரமே முடிந்து விட அவர் கிளம்பிப் போய் விட்டார். கன்னாட் ப்ளேசில் அவர் அண்ணன் MTNL உயர் அதிகாரி திரு ராஜகோபாலனிட்ம் பேசப் போயிருக்கிறார் என்று அறிந்தேன். டைரக்டரியில் அவர் P&T (அந்தக் காலத்தில் மொபைல் எல்லாம் ஏது?!) நம்பரைத்தேடிப் பேசியதில் " யாரோ உன் வாசகராம் "என்று சுஜாதாவிடம் கொடுத்தார் அவர். எனக்குக் கொடுத்த அப்பாயிண்ட்மென்டைத் தவற விட்டதற்கு வருந்தினார். அடுத்த முறை சந்திப்போமே என்றார். கடைசி வரை அந்த அடுத்த முறை வரவேயில்லை! சில நாட்களிலேயே BEL இல் இருந்து பணி மூப்பு அடைந்து சென்னை வாசியாக மாறி விட்டார்.

அதன் பிறகு 'அம்பலம்' இணைய இதழில் தவறாமல் எழுதுவார். ஓரிரு முறை என்னுடைய ஈ மெயில் கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறார்.

மிகப் பெரிய பில்ட் அப்புக்குப் பிறகு வெறும் ஆன்டி கிளைமாக்ஸாக முடிந்து விட்டாலும் , என்னால் என்றுமே மறக்க முடியாத ஒரு வி.ஐ.பி. சந்திப்பு இது! கிட்டத் தட்ட ஒரு மாதம் வரை இந்தக் கதையைச் சொல்லி நண்பர்களிடம் மொக்கைப் பட்டம் வாங்கிக் கொண்டிருந்தேன்!

சினிமா விரும்பி

Wednesday, February 22, 2012

அது என்ன நொய்டா?

புது தில்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் நகரம் மிகவும் தொலைவாக இருந்ததால் தில்லியின் ஓக்லா தொழிற்பேட்டைக்கு அருகே நொய்டா (New Okhla Industrial Development Authority-Noida) என்ற ஒரு இடத்தை எண்பதுகளின் ஆரம்பத்தில் துவங்கினார்கள். தொழிற்பேட்டை மற்றும் வீட்டு வசதி வாரியம் போன்ற ஒரு அமைப்பு. தமிழில் நாய்டா என்றோ அல்லது நோய்டா என்றோ எழுதினால் விபரீதமாக அர்த்தம் வருவதால் நொய்டா என்று தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதுவது வழக்கமாகி விட்டது! ஒரு காலத்தில் ஓக்லாவின் அருகில் உ.பி.யின் சில பசும் வயல்வெளி கொண்ட கிராமங்களில் இருந்து உருவாக்கப் பட்ட நொய்டா இன்று சூரஜ்பூர் வரை நொய்டா மற்றும் கிரேடர் நொய்டா என்று பல்கிப் பெருகி விட்டது! இவற்றை காஸியாபாத் மாவட்டத்தில் இருந்து வெட்டி எடுத்து கௌதம் புத்(தா) நகர் என்று ஒரு புது மாவட்டத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் தாண்டினால் புலந்த் ஷஹர் மாவட்டமே வந்து விடுகிறது!

இன்று எப்படியோ, ஆரம்ப காலத்தில் மிகவும் திட்டமிட்டுக் கட்டப் பட்ட ஒரு துணைக்கோள் நகரம் நொய்டா. நகருக்குள்ளே கிட்டத்தட்ட எல்லா சாலைகளுமே ஒன்றுக்கொன்று இணையானவை அல்லது செங்குத்தானவை (Grid அமைப்பு). எனவே, போக வேண்டிய இடத்துக்குக் குறுக்கு வழியில் சீக்கிரம் போய்ச் சேருவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை! காஸியாபாதை ஒப்பிடும்போது இங்கு போலீசார் கண்காணிப்பு அதிகம், குற்றங்கள் குறைவு என்பார்கள். ஆனால் இன்றைய தேதியில் கிரைம் ரேட்டில் இரண்டுமே சமமாகத்தான் உள்ளன. விலைவாசியோ தில்லியை விட ஒரு மாற்று அதிகம்! ஒரு முறை முலாயம் சிங்க் யாதவ் மற்றும் ஷீலா தீட்சித் அரசுகளுக்கிடையே கடும் மோதல் ஏற்பட, பல மாதங்கள் தில்லியின் DTC பஸ்கள் நொய்டாவுக்கு உள்ளேயே தலை காட்ட முடியவில்லை! இப்போது DTC யின் பச்சை நிறத் தாழ் தள சொகுசுப் பேருந்துகளும் காமன்வெல்த்துக்குப் பின் வந்த சிவப்பு நிற அதி சொகுசுப் பேருந்துகளும் நொய்டாவெங்கும் விரவிக் கிடக்கின்றன.

குற்றங்களைப் பற்றி எழுதும் போது, குற்றங்களில் மெகா குற்றங்கள் இரண்டு நொய்டாவில்தான் நடந்தன என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டே ஆக வேண்டும். நான்காண்டுகளுக்கு முன், ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் வீட்டு சொந்தக்காரரும் பணியாளனும் சேர்ந்து வீட்டு வேலைக்காக வந்த பல சிறுமிகளையும் இளம் பெண்களையும் பாலியல் கொடுமைக்குப் பின் கொலையும் செய்து கூலாகப் பாதாள சாக்கடையில் தள்ளியதாகக் குற்றம் சாட்டப் பட்ட நிடாரி என்னும் இடம் நொய்டாவின் மத்தியில் உள்ளது. தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் வந்து கொண்டே இருந்ததை டிவியில் பார்த்திருப்பீர்கள். தவிர, இன்று வரை சிபிஐக்கே சவால் விடும் வழக்கான பதினான்கு வயது ஆருஷி என்ற பள்ளிச் சிறுமி கொலை வழக்கு. அதிகாலையில் தன் வீட்டிலேயே இந்தச் சிறுமி கொலையுண்டு கிடந்தது, கூடவே ஹேம்ராஜ் என்ற வீட்டுப் பணியாளும் கொலையுண்டு கிடந்தது என்று சிக்கல்கள் பல நிறைந்த இந்த வழக்கு குற்றவியல் வல்லுநர்களையே ஸ்தம்பிக்க வைக்கிறது.

நொய்டாவின் தண்ணீர் மிகவும் புகழ் வாய்ந்தது! வெவ்வேறு செக்டரில் வெவ்வேறு சுவை தரும் நிலத்தடி நீர்தான் நொய்டாவின் மொத்த நீராதாரம். இந்தக் கிணறுகளுக்கு 'ரேனே வெல்' என்று பெயர் (யாராவது அர்த்தம் தெரிந்தால் சொல்லுங்கள்!).எவர்சில்வர் பாத்திரம் கூட சட்டென்று ஓட்டை விழும் அளவுக்கு ஆபத்தான நீர்! இதில் துணி துவைப்பதை மறந்து விடுங்கள் ! கடந்த ஐந்து வருடங்களாக கங்கை நீர் பைப்லைன் மூலம் கொண்டு வரப் பட்டு இந்த லோக்கல் நீரோடு கலக்கப் பட்டு விநியோகிக்கப் படுவதால் நிலைமை சற்றே மேம்பட்டது. 'தினமும் கங்கா ஸ்நானம் செய்வதனால் புதிது புதிதாய் தினமும் பாவம் செய்கிறாயா?' என்று நண்பன் கிண்டலடிப்பான்! இதைத்தவிர இண்டேன், பாரத் கேஸ் போன்ற நிறுவனங்கள் வழங்கும் சிலிண்டர்களுக்கு மாற்றாக 'இந்திரபிரஸ்தா கேஸ்' நிறுவனம் குழாய் மூலம் உங்கள் சமையலறைக்குள்ளேயே கொண்டு வந்து தரும் சமையல் எரிவாயுவும் உண்டு. பல செக்டர்களில் பரந்து கிடக்கும் தொழிற்பேட்டைப் பகுதியில் பார்த்தால், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக HCL போன்ற சில தனியார் நிறுவனங்கள் நொய்டாவில் அலுவலகங்கள் அமைப்பதில் முழு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒரு காலத்தில் நம்ப ஊர் மேற்கு மாம்பலம் 'நேஷனல்' தியேட்டர் போன்ற 'அல்கா சினிமா' மற்றும் சற்றே பெரிய 'தரம் பேலஸ்' என்ற இரண்டே திரையரங்குகள் மட்டுமே இருந்த நொய்டாவில் இன்று பற்பல 'மால்'கள் (சிறப்பு அங்காடி என்பது சரியான தமிழ்தானா?!). ஒவ்வொரு மாலிலும் 'ஸ்பைஸ்', 'பிக் சினிமா', 'வேவ்' என்று மல்டிப்ளெக்ஸ்கள்! 'தில்லித் தமிழ்ச் சங்கம்' மிகவும் தொலைவாக இருப்பதால் இங்கேயே 'அவ்வை தமிழ்ச் சங்கம்' என்ற பெயரில் முனைப்புடன் நடத்தி வருகிறார்கள். 'தி கிரேட் இந்தியா பிளேஸ்' என்ற சிறப்பு அங்காடியில் இவர்கள் அவ்வப்போது நடத்தும் நிகழ்ச்சிகள் பிரபலமானவை.

'தில்லி மெட்ரோ' நொய்டாவுக்கும் வரப் போகிறது என்று பத்திரிகையில் படித்த போது 'வரும்..... ஆனா வராது!' என்று வடிவேலு- 'என்னத்த' கன்னையா போல் இழுத்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் பிரமிக்கத்தக்க வேகத்தில் மெட்ரோ நொய்டாவுக்கு வந்தே விட்டது. செக்டர் 15, 16, 18, பொடானிகல் கார்டன், கோல்ப் கோர்ஸ் , செக்டர் 32 என்று ஆறு ஸ்டேஷன்கள் . தினமும் தில்லி சென்று வரும் அரசு மற்றும் தனியார் அலுவலர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, மெட்ரோ ஒரு வரப்ரசாதம். முதல் பெட்டியைப் பெண்களுக்கென்றே ஒதுக்கி விட்டார்கள். ஒரு சிக்கலான பார்முலாவை உபயோகித்து தில்லி மெட்ரோவும் நொய்டா நிர்வாகமும் வருமானத்தைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். (நான் போன முதல் ட்ரிப்பிலேயே மொபைல் போன் சுலபமாகப் பிக்பாக்கெட் ஆனது வேறு கதை!). இன்றைய தேதியில் நொய்டாவின் ஓரங்களில் வீட்டு மனை / அபார்ட்மென்ட் விற்கும் எல்லா வீட்டுத் தரகரும் தலையிலடித்துச் செய்யும் சத்தியம் ' அடுத்ததாக மெட்ரோ இந்த வழியாகத்தான் போகப் போகுது; ரேட்டு எகிறிடும் பாருங்க!'. சமீபத்தில் நொய்டா எக்ஸ்டென்ஷன் என்னும் பகுதியில் குறைந்த விலையில் கிடைக்கும் குடியிருப்புகளை நம்பி மத்திய வர்க்கத்தினர் பலரும் பெரும் தொகை முன் பணம் கட்டி இருந்தனர். நில ஆர்ஜிதம் பற்றிய விவசாயிகள் போராட்டமும் அதைத் தொடர்ந்து வந்த நீதி மன்ற உத்தரவுகளும் இவர்களின் மூலதனத்தைக் கேள்விக் குறியாக்கி விட்டன . இவர்கள் எல்லோரும் இப்போது கிரேடர் நொய்டா நிர்வாகம் முத்தரப்புக்கும் (நுகர்வோர், பில்டர் மற்றும் விவசாயிகள்) ஒரு சுமுகமான தீர்வு கொடுக்குமா என்று கவலையுடன் காத்திருக்கிறார்கள். கிரேடர் நொய்டாவின் மற்றொரு கோடியில் பட்டா பர்சோல் என்ற கிராமத்தில் இதே போன்ற விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் திக்விஜய் சிங்கும் களமிறங்கத் தேர்தல் அரசியல் உடனே சூடு பிடித்து விட்டது!

சாலை வழியாக தில்லி ஆஸ்ரமிலிருந்து DND என்று செல்லமாக அழைக்கப் படும் டெல்லி- நொய்டா-டைரக்ட் வளைவுப் பாலத்தைப் பிடித்தால் பத்தே நிமிடத்தில் நொய்டாவைத் தொட்டு விடுவீர்கள்! கிரேடர் நொய்டா இதை விட ஹை டெக்! நம்ப ஊர் சோழவரத்தைத் தூக்கிச் சாப்பிடும் பார்முலா ஒன் ட்ராக் (இதற்கும் புத்தர் பெயர்தான்!), இருபத்தைந்து கிலோமீட்டர் 'எக்ஸ்ப்ரெஸ் வே' என்று அதகளம்தான்!

சமீபத்தில் பெஹன் (சகோதரி) மாயாவதி அரசினால் பாபா சாஹேப் அம்பேத்கர் பெயரில் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் 'தலித் பிரேரணா ஸ்தல் அண்ட் கிரீன் கார்டன் ' ('தலித் எழுச்சி இடம்' என்று பொருள் கொள்ளலாம்) ஆகியவை திறக்கப் பட்டன. விசித்திரம் என்னவென்றால் சொல்லி வைத்தாற் போல் நொய்டா மற்றும் தில்லிக்காரர்கள் யாரும் அந்தப் பசுமைப் பூங்காவிற்கு வருகை தருவதாகத் தெரியவில்லை! வாரக் கடைசியில் வரும் எல்லாக் கூட்டமும் வெளியூர்க் கூட்டம்தான்! உள்ளே அண்ணல் அம்பேத்கர், சமூக சீர்திருத்தச் செம்மல்களான சாஹுஜி மகாராஜ், நாராயண குரு, மகாத்மா ஜ்யோதிபா புலே மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் மறைந்த திரு. கான்ஷிராம் ஆகியோரின் சிலைகள் உண்டு. முதல்வர் மாயாவதியின் சிலைகளும் ஏராளமான சிறிய, பெரிய யானை சிலைகளும் இப்போது தேர்தல் கமிஷன் உத்தரவினால் ஊதா நிறப் பாலிதீன் துணியால் மூடப் பட்டுள்ளன. துணியால் போர்த்தினாலும் வளைந்த தும்பிக்கையைப் பார்த்தாலே தெரிந்து விடுகிறது, இது யானை என்று! இந்தத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் உயிருள்ள யானை தெருவில் நடந்து போனால் என்ன செய்வார்களோ! பூங்கா எப்படியோ, மருத்துவமனை உணமையிலேயே உ.பி. யின் பல மாவட்டங்களில் இருந்து வரும் ஏழை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று. இதைத் தவிர, நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காகக் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேரை சட்ட பூர்வமாகக் குடியேறியவர்கள்தானா என்று சரிபார்க்கும் இமாலயப் பொறுப்பும் நொய்டா போலீஸின் தலையில் விழுந்துள்ளது!

மொத்தத்தில் காஸியாபாத் , பரீதாபாத் போன்று தூரமும் இல்லாமல், குர்கானைப் போல் மத்திய வர்க்கத்துக்கு எட்டாக் கனியாகவும் இல்லாமல் தில்லிக்கருகில் கச்சிதமான ஒரு துணைக்கோள் நகரம் நொய்டா. நொய்டாவாசிகள் எவரிடமாவது பேசிப் பாருங்கள் , சளைக்காமல் வர்ணிப்பார்கள் அதன் அருமை பெருமைகளை!

சினிமா விரும்பி

('வடக்கு வாசல்' பிப்ரவரி 2012 இதழில் சிற்சில மாற்றங்களுடன் வெளியானது)

Monday, February 6, 2012

இந்த வார அலப்பரை 5- 'கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா மொழிபெயர்ப்பை!'

சமீபத்தில் சென்னை சென்று வர நேர்ந்தது. விமான நிலையத்தில் ' மெய்ப் புல அறைகூவலர் ' என்று ஒரு அறிவிப்புப் பலகை மிரட்டியது! தலைகால் புரியவில்லை! பிறகுதான் புரிந்தது, 'Physically Challenged' என்பதைத்தான் யாரோ ஆர்வக் கோளாறில் இவ்வாறு மொழி பெயர்த்துத் தள்ளி விட்டார்கள்! அதாவது, மாற்றுத் திறனாளியின் மெய் மற்றும் புலன்களை, அவற்றின் செயல்பாட்டைக் கடவுள் (அல்லது சமூகம்) சோதித்து விட்டாராம், 'சமாளி, பார்க்கலாம்' என்று அறைகூவல் (சவால்) விட்டு விட்டாராம். அப்படியே இருந்தாலும் அடுத்தவர் விட்ட அறைகூவலை ஏற்றுக் கொண்டவர் அல்லவா இவர், இவரை எப்படி அறைகூவலர் என்று அழைக்க முடியும்? வேண்டுமானால் 'உடல்/ மன ரீதியாக சவாலை எதிர் கொள்வோர்' என்று மொழி பெயர்க்கலாம். ஓரளவு சரியாக இருக்கும்.

கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா மொழிபெயர்ப்பை!

சினிமா விரும்பி

Thursday, December 22, 2011

அக்டோபர் 2004 இல் 'எந்திரன்' பற்றி சுஜாதா!


அக்டோபர் 2004 இல் ஆனந்த விகடன் 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் ஷங்கரின் 'ரோபோ' ப்ராஜக்ட் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது தற்செயலாகப் படிக்கக் கிடைத்தது (நன்றி: http://sujatha-kape.blogspot.com). படித்து விட்டு அவர் மறைந்த பின் 2010 இல் வெளி வந்த 'எந்திரன்' படத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்!

>>>>>ஷங்கருடன் ‘ரோபோ’ என்று ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. அதில் வரும் ரோபாட் இன்றைய தினங்களில் சாத்தியம் இல்லை. கதைக்காக அதற்கு அதிக சாதனை களும், புத்திசாலித் தனமும், மனித உணர்வு களும் தந்தோம். ரோபாட் இயலில் இன்றைய நிலை என்ன என்பதைச் சொல்லி விடுகிறேன். இன்றைய ரோபாட் ஓர் அறைக்குள் நுழைந்து வெளிவரும். தான் எங்கே இருக்கிறோம் என்பதை இரு பரிமாண வரைபடம் செய்து தெரிந்துகொள்ளும். இதற்கே அது ஆயிரக்கணக்கில் செய்தித் துணுக்குகளை உள்ளே பெற்றுக் கொள்ள வேண்டும் குழப்பம் ஏற்பட்டால், ஒரு மூலையில் போய் நின்றுவிடும். இல்லையேல், அடுத்த ஃப்ளாட்டில் திரிந்து, அங்கேயுள்ளவர் களை அலறவைக்கும்.

2010-ம் ஆண்டுக்குள் நீங்கள் இதைவிடச் சற்று புத்திசாலியான வீட்டு ரோபாவை எதிர்பார்க்கலாம். அது தன்னைச் சுற்றியுள்ள உலகை முப்பரிமாணத்தில் பார்க்கும் திறமை பெற்று, இன்றைய ரோபாட்டைவிட ஆயிரம் மடங்கு அதிக தகவல்கள் சேகரித்து அலசும்.

எதிர்கால ரோபாட்டுகளின் சில முன்மாதிரிகள் இன்றே ஆராய்ச்சி சாலைகளில் கிடைக்கின்றன. வாக்குவம் க்ளீனர் பார்த்திருப்பீர்கள். ஆளுதவி இல்லாமல் தானே வீட்டைத் துப்புரவாக தூசுறிஞ்சி சுத்தமாக்கும் வாக்குவம் க்ளீனர்கள் இன்று சாத்தியம். அவற்றால் மாடிப்படி எது, சுவர் எது என்பதைக் கண்டுகொள்ளமுடியும். போகப்போக தன்னிடமுள்ள வரைபடத்தைப் புதுப்பித்துக்கொண்டு, விவரம் சேர்த்துக்கொள்ளும். சுவரில் போய் தானாகவே சார்ஜ் வாங்கிக் கொள்ளும்.

முதல் தலைமுறை முழு ரோபாட்டுகள் மனித வடிவில் இருக்கும். கை கால்கள் வைத்துக்கொண்டு நடக்கும். பல காரியங்கள் செய்யும். ஆனால், உங்களுக்கு நண்பனாக இருக்காது. அதன் மூளையை ஒரு பல்லியின் மூளைக்குச் சமமாகச் சொல்லலாம். சுமார் நூறு ஆணைகள் தெரிந்திருக்கும். ஃபாக்டரியில் வடிவமைத்ததைத் தவிர, புதிய காரியம் எதையும் அதனால் செய்யமுடியாது. புரியவில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு, ஓர் ஓரத்தில் போய் நின்றுகொள்ளும். அதைத் திட்டினால் தெரியாது. திட்டலாம்.

2030-க்குள் இரண்டாம் தலை முறை ரோபாட்டுகள் வந்துவிடும். பல்லியின் மூளையிலிருந்து எலியின் மூளைக்கு உயரும். உதாரணமாக, ஒரு பொருளைக் கையில் எடுக்குமுன், அதன் எடைக்கேற்ப ஒரு கை, இரண்டு கை... ஏன், மூன்று கைகளைக்கூடப் பயன்படுத்தும். போகப்போகக் கற்றுக்கொள்ளும் விதமாக‘ கண்டிஷனிங் மாட்யுல்ஸ்’ என்னும் நிரலின்படி நல்ல காரியங்கள், வேண்டாத காரியங்கள் என்றுவிருப்ப அளவை வைத்துக் கற்றுக் கொள்ளும். அதற்கு எஜமானனின் குரல் பரிச்சயம் உண்டு. அவர் சொல்லும் good, bad போன்ற வார்த்தைகளுக்கேற்ப ஒரு செயலைத் தொடரவோ, நிறுத்தவோ செய்யும். நீங்கள் தூங்கும் சமயத்தில் சப்தமெழுப்பாமலிருக்க அதற்குக் கற்றுக் கொடுக்கலாம்..

மூன்றாம் தலைமுறை ரோபாட், ஒரு குரங்கின் திறமையைக் கொண்டிருக்கும். நாம் செய்வதைப் பார்த்து அதுவும் செய்யும். 'மங்கி ஸீ மங்கி டூ!' உங்கள் வீட்டை முழுமையாக அறிந்திருக்கும். வெளியுலகைப்பற்றி அதற்குத் தெரியாது.

நான்காம் தலைமுறை ரோபாட்டுகள்தான் மனிதனுக்கு அருகே வரும். உதாரணமாக,ஒரு இங்க் பாட்டிலைக் கவிழ்த்தால், இங்க் கொட்டி தரை பாழாகிவிடும் என்பதை அறிந்திருக்கும். அதேபோல் பல எளிய திறமைகளை ஒத்திகை பார்த்துவிட்டுக் கற்றுக்கொள்ளும். இந்த நிலைமை வர 2040 வரை ஆகலாம்.

ரோபாட்டுகள் உங்கள் மகளைக் காதலிக்க, இன்னும் அரை நூற்றாண்டாவது ஆகும்.<<<<<<

சினிமா விரும்பி

Tuesday, December 6, 2011

இந்த வார அலப்பரை 4- 'கொல வெறியைப் பற்றி நாலு வரி!'

இந்த வார அலப்பரை 4- 'கொல வெறியைப் பற்றி நாலு வரி!'

நேற்று இரவு வரை யூ டியூபில் 'ஒய் திஸ் கொல வெறி டி?' பாடல் பதினாறு மில்லியன் ஹிட்ஸ் பெற்றிருக்கிறது ( still counting!). அதன் தயாரிப்பாளர்களே கூட பதினைந்து மில்லியன் எங்கள் லட்சியம் என்றுதான் சொன்னார்கள்! இதனிடையே ஒரு பெண் குரல் வெர்ஷனும் ஒரு (அழகான ) தமிழ் வெர்ஷனும் யூ டியூபில் வெளி வந்து விட்டன. இந்தக் 'கொல வெற்றி' எப்படி சாத்தியமாயிற்று? என் கணிப்பு கீழே:

1. ரஜினி, மற்றும் கமலின் அடுத்த தலைமுறையினர் கை கோர்த்திருப்பதால் நிச்சயம் ஏதோ பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கேட்க (பார்க்க) வருபவர்கள் அதிகம். (எழுத்தாளர் ஞாநியும் ஏறக்குறைய இதே கருத்தை எழுதியிருந்தார், அவர் 'டச்'சுடன்!)
2. அப்படியொரு foot tapping rhythm! லேசான folk கலந்த மெலோடி மற்றும் 'நையாண்டி மேளம் ' போல ஒரு ஸ்டைல்!
3. இளைஞர்களுக்கு என்றுமே சலிக்காத 'காதல் தோல்வி' யால் 'தண்ணி'யடிக்கும் concept!
4. ஆங்கிலம் & தமிழ் கலந்த 'Tanglish' format தமிழ் இளைஞர்களை உடனே சென்றடைந்து விட்டது, 'ஐயோ பத்திக்கிச்சு' என்று! அதே போல் தெற்கே மற்ற மாநிலங்களிலும், வட இந்தியாவிலும் இது ஒரு ஜாலியான ஆங்கிலப் பாடலாகவே பார்க்கப் படுகிறது. தில்லியில் இப்போது கல்யாண சீசன்; ஊர்வலங்களில் எல்லாம் இந்தப் பாட்டைப் போட்டுப் பட்டையைக் கிளப்புகிறார்கள்! (தமிழ் வார்த்தைகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்பதையும் கவனியுங்கள்)
5. தனுஷ் குரல் மட்டுமில்லாமல், அவர் காட்டும் முக பாவங்கள், மற்றும் ஸ்ருதி ஹாசன் காட்டும் ஓரிரு முக பாவங்கள், கண்ணசைவுகள் எல்லாமே இளைஞர்களைக் கவர்கின்றன. 'மாமா, நோட்ஸ் எடுத்துக்கோ; அப்படியே கைல ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ!, சரியா வாசி!' போன்ற பொருளற்ற வாக்கியங்கள் கூட ரசிக்கும்படியாகவே இருக்கின்றன.
6.எல்லாவற்றுக்கும் மேலாக Diego Maradona, 1986 இல் சொன்னது போல் ' Hand of God' ஏதோ இருக்கும் போல!

சினிமா விரும்பி

Saturday, November 12, 2011

இந்த வார அலப்பரை 3! (நோக்கு வர்மம்)

இந்த வார அலப்பரை 3! (நோக்கு வர்மம்)

நான் இது வரை 'ஏழாம் அறிவு ' பார்க்கவில்லை. அந்தப் படத்தில் 'ஹிப்னாடிஸம்' என்பது 'நோக்கு வர்மம்' எனப்படும் பழந்தமிழர் கலை என்று காட்டியிருப்பதாகப் படித்தேன். எனக்கென்னவோ ஆதிகாலத்தில் தமிழ் பிராமணர்கள்தான் இந்த நோக்கு வர்மத்தைக் கண்டு பிடித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது! ஏனென்றால் அவர்கள்தான் வீட்டில் 'நோக்கு, நேக்கு' என்று பேசிக் கொண்டிருப்பார்கள்! இது எப்படி இருக்கு?

சினிமா விரும்பி

Monday, November 7, 2011

'ரா ஒன்' (ஹிந்தி) திரை விமர்சனம்


ஒரு நல்ல திறமை வாய்ந்த இயக்குனர் ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் காட்டுகிறது. தமிழ் ' எந்திரனோடு ' ஒப்பிட்டே தீர வேண்டும். அங்கு மூன்று ரஜினி (விஞ்ஞானி வசீகரன், நல்ல சிட்டி, வில்லன் சிட்டி Ver 2.0) கேரக்டர்களும் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தார்கள். துவக்கத்தில் சிட்டி செய்யும் காமெடிகளும் பார்த்துப் பார்த்து செய்யப் பட்டிருந்தன. இங்கே அப்படி அல்ல. ஆரம்பக் காட்சிகளில் சேகர் சுப்ரமணியம் ஷாருக் கான் (சேகர் என்ற பெயர் ஷாருக் கானுக்கு மிகவும் பிடிக்கும் போல! நினைவிருக்கிறதா அந்த காலத்து தூர்தர்ஷனில் 'சர்க்கஸ்' சீரியலில் சேகரன் என்ற பெயரில் முதலாளியின் மகனாக வந்தது அவரேதான்!) ஏதோ 'மிஸ்டர் பீன்' போலத் தடுக்கி விழும் காமெடி நிறைய செய்கிறார் . பின்னணியில் ' பைத்தியக்காரா! பைத்தியக்காரா! பைத்தியக்காரா!' என்ற காமெடி மியூசிக் ஒலிக்கிறது. நூடில்ஸில் தயிரைக் கலந்து கையால் ஒரு வெட்டு வெட்டுகிறார். நான்கு ஆண்டுகள் முன்பு வெளி வந்த 'ஓம் ஷாந்தி ஓம்' இல் ஷாருக் ஒரு காட்சியில் தமிழ்ப் பட நடிகராக 'என்னடா ராஸ்கலா' என்று 'அய்யய்யோ ஜீ' தமிழ் பேசியிருப்பார். அதே போல் இங்கும் ஒன்றிரண்டு 'அய்யய்யோ ஜீ' தமிழ் வசனம் பேச முயற்சிக்கிறார். அங்கே பரவாயில்லை; இந்தப் படத்தில் ஒரு முழு தமிழ் கேரக்டருக்குத் தேவையான 'ஹோம் வொர்க்' செய்யவே இல்லை. என்னத்தைச் சொல்ல? மறைந்த காமெடி நடிகர் மெஹ்மூத், தான் ஆரம்பித்து வைத்த மதராஸி காமெடிகளின் மூலம் தமிழர்களுக்கு ஒரு தீராத நியூசன்சை உண்டாக்கி விட்டுப் போய் விட்டார்.

(Disclaimer: Spoilers ahead!) ஆனால் இவர் நல்ல திறமை வாய்ந்த வீடியோ கேம் டிசைனராம், 'கடைசியில் நன்மையே வெல்லும்' என்ற கொள்கையில் நம்பிக்கை உள்ளவராம்! விடியோ கேம் அடிமையான தன் மகன் வில்லன்களை வழிபடுகிறான் ( 'Villains are kickass!') என்பதற்காக அவனுக்காகவே ஹீரோவை விட வில்லன் பலம் வாய்ந்தவனாக அமைத்து ஒரு அட்டகாசமான விடியோ கேம் தயாரிக்கிறார். அவருடைய கேரக்டரைப் பற்றி ஒரு சரியான உருவம் நம் மனதில் பதியும் முன்னரே அவர் கொல்லப் படுகிறார்; கிட்டத்தட்ட இடைவேளை வந்து விடுகிறது. அந்த சமயத்தில் விடியோ கேமில் இருந்து உயிருடன் வெளி வந்த வில்லன் ரா. ஒன்னை (Random Access One அல்லது ராவண்) அழிப்பதற்காக சேகரின் மகன் பிரதீக் இரண்டாவது ஷாருக் கானை (Good One , ஜீ-ஒன் அல்லது ஜீவன் ) கேமிலிருந்து உயிர்ப்பிக்கிறான். இந்தச் சின்னப் பையனையும் (மும்பையில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் அர்மான் வர்மா) அவன் ஹேர் ஸ்டைலையும் பார்த்தால் சிறுவன் அல்ல சிறுமி போல் இருக்கிறது! ரா. ஒன் தான் விரும்பும் வடிவம் எடுக்கக் கூடியவன் என்பதால் இடைவேளைக்கு முன் ஒரு சைனீஸ்- அமெரிக்கன் நடிகரும் (டாம் வு) முடிவில் அர்ஜுன் ராம்பாலும் அந்த கேரக்டரைச் செய்திருக்கிறார்கள். அர்ஜுன் ராம்பால் கொஞ்ச நேரமே வந்தாலும் தத்ரூபமான வில்லன்; இவர் உதிர்க்கும் ஒரு 'நச்' வசனம்: 'வருஷா வருஷம் 'ராம்லீலா' கொண்டாடி ஏண்டா ராவணனை எரிக்கறீங்க? அவன் எப்போதும் சாவதில்லை என்றுதானே?' டாம் வு பார்வையில் உக்கிரம் கொப்பளிக்கிறது; அவ்வப்போது 'ஆளவந்தான் ' கமல் போல் கழுத்தை நொடிக்கிறார் .

இடைவேளையின் போது ரொம்ப நேரம் 'பாப் கார்ன்' வாங்கப் போனால் ரஜினி வரும் காட்சியை மிஸ் பண்ண வேண்டியதுதான்! சொல்லப் போனால் வலியத் திணிக்கப் பட்ட இந்தக் காட்சி ஒட்டவே இல்லை என்பது ஒரு புறம் இருக்க ரஜினி ரொம்ப வயதானவராகவும் களைப்பாகவும் தெரிகிறார். அவருடைய தீவிர ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றம்தான்! ரஜினி சார், 'ராணா' வோ 'கோச்சடையானோ' எப்போ ரிலீஸ்?

இடைவேளைக்குப் பிறகு படம் திடீரென்று சூடு பிடிக்கிறது! பொதுவாக கதை மும்பையிலிருந்து லண்டனுக்கு நகரும். இங்கு கதை லண்டனிலிருந்து மும்பைக்கு நகர, உடனே அசுர வேக 'சேஸ்' காட்சிகளுடன் ஒரு non- stop roller coaster ride தான்! இந்தப் பகுதியில் (ஏன் மொத்தப் படத்திலுமே!) முக்கியமானவை இரண்டு விஷயங்கள்தான்; செனிகலீஸ்- அமெரிக்கன் பாடகர் அகான் பாடியிருக்கும் 'சம்மக் சல்லோ ' பாடல் 'refreshingly different'. படத்தில் பார்ப்பதற்கும் ஒரு விஷுவல் ட்ரீட்! இவருடன் தமிழ் மற்றும் இந்தியில் சில வரிகளைப் பாடியிருப்பவர் ஹம்சிகா ஐயர். ரசிக்கக் கூடிய தமிழ் வரிகள் (எழுதியவர் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்) :

'என்னைத் தொட்டு என்னுள்ளத்தை நொறுக்க மாட்டியோ?
என்னைப் போலப் பெண்ணைப் பார்த்து மயங்க மாட்டியோ?
கண்ணில் கண்ணைப் பூட்டி விட்டால் சிரிக்க மாட்டியோ?
என்னில் உன்னைச் சூட்டி விட்டால் ஒட்டிக்க மாட்டியோ?'

இந்தக் காட்சியில் சிவப்பு டிரெஸ்சில் கரீனா கபூர் மிகவும் குளுமை! (ஒரு கொசுறு தகவல் - பல படங்களுக்குப் பிறகு இப்போதுதான் சேலையில் தோன்றுகிறாராம். சைஸ் ஸீரோவை எல்லாம் மூட்டை கட்டியாச்சாம்மா Bebo?!) மற்ற நேரங்களில் சுமாராக நடிக்கவும் செய்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை; கணவன் இறந்த பின் இவரது மகன் பிரதீக் ஜீவன் ஷாருக்கை நண்பனாக முழுமையாக ஏற்றுக் கொண்டு விட, இவர் ஜீவனை ஏற்கிறாரா இல்லையா என்ற குழப்பம் கரீனாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் இருக்கிறது, ஏன், இயக்குனருக்கே படம் முடியும் வரை இருக்கிறது!

அடுத்தது க்ளைமாக்ஸ்! 'எந்திரனை'ப் போலவே எடுக்கப் பட்ட எலெக்ட்ரிக் ட்ரெயின் காட்சியில் 'எந்திரனை' விட சூடு பறக்கிறது! கடைசியில் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் தூள் தூளாக இடிந்து விழும் காட்சியில் கிராபிக்ஸ் அசாத்திய மிரட்டல்! ஆனால் இவற்றைத் தவிர செலவழித்த கோடிகளுக்கு ஏற்ற கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இல்லை. 'எந்திரனில்' பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டிருந்த அழகான சின்னச் சின்ன கிராபிக்ஸ் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ஒரு காட்சியில் ஜீவன் ஷாருக்கின் மூக்கிலிருந்து ஏதோ நீல நிற வயர் வெளி வர, கரீனா அதைப் பார்த்து அதிர்ச்சி அடைய , ஷாருக் பொறுமையாக முழு வயரையும் எடுத்து வெளியே எறிகிறார். டைரக்டர் சார், எங்க ஊர் வடிவேலு சொல்வது போல் 'சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு?'

பட ஆரம்பத்தில் வரும் 'கல்நாயக்' சஞ்சய் தத் , 'தேசி கேர்ள்' பிரியங்கா சோப்ரா விடியோ கேம் காட்சியைக் குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் ரசிக்கிறார்கள்.(ஹிஹி , நானும்தான்!) ஹிந்தியில் மிக விரசமான அர்த்தம் தரும் ' இஸ்கீ லீ', உஸ்கீ லீ ' ,'சப்கீ லீ' என்ற பெயர்களை மூன்று சைனீஸ் விடியோ கேம் பெண்களுக்கு வைத்திருக்கிறார்கள்; இவர்கள் மூவரும் ப்ரூஸ் லீயின் சகோதரிகளாம்! 'கொஞ்சம் கொஞ்சம்' என்பதை 'காண்டோம் காண்டோம் ' என்று அபத்தமாகக் காமெடி செய்ய முயன்றிருக்கிறார்கள்! பத்து நிமிடமே திரையில் வந்தாலும் டாக்சி டிரைவர் சுரேஷ் மேனனின் காமெடி அதகளம்!

படத்தில் இடையிடையே ஷாருக் கானின் குழந்தை ரசிகர்களுக்காக அட்வைஸ், 'வீட்டில் இந்த ஸ்டண்டை எல்லாம் முயற்சிக்காதீர்கள்' என்று! நடுவே ஒரு காட்சியில் சிகரெட் பிடிப்பதற்கு எதிராகவும் ஒரு அட்வைஸ்! எப்படி? ஷாருக் கான் சிறுவனிடம் கேட்கிறார் ' ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கானோர் சிகரெட் பிடிப்பதை விட்டு ஒழிக்கிறார்கள்; எப்படி தெரியுமா?' பையன்- 'எப்படி? பேக்கட்டின் மேல் உள்ள எச்சரிக்கையைப் படித்து விட்டா? ' ஷாருக்-'இல்லை! தாங்களே செத்துப் போவதன் மூலம்!'

படம் பார்க்க வேண்டுமென்றால் '3D' இல் பாருங்கள்; 'எந்திரன்' என்று ஒரு படம் வரவேயில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்! அப்போதுதான் கொஞ்சமாவது ரசிக்கலாம்!

மொத்தத்தில் இயக்குனர் அனுபவ் சின்ஹா- 'அனுபவம் பத்தாத சின்ஹா! '

சினிமா விரும்பி

Tuesday, September 27, 2011

வாழ்க நீ எம்மான்!


சாமர்த்தியமாக, மிக சாமர்த்தியமாக ஒரு பெரிய கூட்டமே மகாத்மா காந்தியைக் குறைத்து மதிப்பிடவோ அல்லது வாய் கூசாமல் இழிவு செய்யவோ காத்திருக்கிறது! இன்று எனக்கு ஒரு SMS வந்தது ' எல்லோரும் காந்தி ஜெயந்தி கொண்டாடுகிறார்கள் ; ஆனால் பகத் சிங்கின் பிறந்த நாளை யாருமே நினைவு கூரவில்லையே! '. இது போல் எழுதுபவர்களுக்கு அப்படியொன்றும் பகத் சிங்கின் மேல் பரம அபிமானம் ஏதும் இல்லை! சந்தடி சாக்கில் காந்தியை நாலு சாத்து சாத்த முடியாதா என்று பார்க்கும் புண்ணியவான்கள்தான் இவர்கள்!

கொஞ்ச நாள் முன்னால் 'மீ நாதுராம் போல்தோய்' (நான் நாதுராம் பேசுகிறேன்) என்றொரு மராத்தி நாடகம் வந்தது. இந்த நாடகத்தில் ஏதோ ராவண வதம், சூரபத்மன் வதம் போல் 'காந்தி வதம்' என்ற சொல்லை அடிக்கடி உபயோகப் படுத்துவார்களாம்! பிறகு 'காந்தி மை பாதர்' என்று ஒரு ஹிந்திப் படம். சொல்லப் போனால் 'ஹே ராமில்' கூட இடையிடையே காந்தியை சன்னமாகக் கிண்டலடிப்பார்கள். முதல் இரவின் போது கமல் 'சத்திய சோதனை' படிக்கும் வசுந்தரா தாஸ் இடம் சொல்வார் ' எனக்குப் பாதிப் புனைகதைகளில் நம்பிக்கையில்லை!'. (I don't believe in semi fiction!) 'சத்திய சோதனை' இவர்களுக்குப் பாதிப் புனைவாம்!

இதைத் தவிர சில அறிவு ஜீவிகள் அவ்வப்போது ' இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் பிரிட்டிஷ்காரனே இந்தியாவை விட்டுப் போய் விடுவதாகத்தான் இருந்தான்' என்பார்கள், ஏதோ இவர்கள் போய் அவன் மனதைத் தோண்டிப் பார்த்தாற்போல! 35 ஆண்டுகளுக்குப் பிறகு 1982 இல் பாக்லாந்து போர் நடக்கும் போது இவர்கள் டீ குடிக்கப் போயிருந்தார்களோ என்னவோ!

காலம் காலமாக அவரை மகாத்மா என்றோ காந்தி அடிகள் என்றோ காந்திஜி என்றோ அண்ணல் என்றோ அழைக்காமல், வேண்டுமென்றே காந்தியார் என்று அழைப்போரும் உண்டு! (ஒரு சுவாரஸ்யமான தகவல் - அமரர் திரு.வி.க.தான் சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகளைப் போல் காந்தி அடிகள் என்ற பிரயோகத்தை உண்டாக்கினார்!). "அவரை தேசப் பிதா என்று சொல்வது தவறு, அது ஐரோப்பாவிலிருந்து கடன் வாங்கிய மரபு. அவர் இந்தியத் தாயின் தலைமகன்" என்று வாய் வக்கணை காட்டுவோரையும் பார்த்திருப்பீர்கள்!

ரொம்பவே நடுநிலையாய் காந்தியை விமர்சிக்கிறார்களாம் ! மகாத்மா காந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை சுகமாக அனுபவித்துக் கொண்டே அவரைத் தூற்றும் பிறவிகளை ' Time Machine' இல் பின்னோக்கிப் போய் 1947 க்கு முந்தைய அடிமை இந்தியாவில் கொண்டு போய் வீசி விட்டு நாம் மட்டும் திரும்பி வந்து விட வேண்டும் !

'நேற்று இன்று நாளை'யில் கவிஞர் வாலி எழுதியது போல் ' இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்!'

சினிமா விரும்பி

Sunday, August 7, 2011

இந்த வார அலப்பரை 2! நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !

நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !


சமீபத்தில் இருபத்தாறாவது முறையாக நாமும் 26/11/2008 அன்று மும்பையில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக அசைக்க முடியாத ஆதாரங்களை அவர்களிடமே கொடுத்திருக்கிறோம். இது வரை கொடுத்ததை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டு 'ஆதாரம் பத்தாது, இன்னும் கொஞ்சம் கொடுங்கய்யா!' என்று அவர்களும் வழக்கம் போல் நம்மைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்! நாமும் இன்னும் கொஞ்சம் ஆதாரம் கிடைக்காதா என்று அரக்கப் பறக்கத் தேடிக் கொண்டிருக்கிறோம்! 'வின்னர்' படத்தில் வடிவேலு சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது!

'நல்லாக் கேக்குறாங்கய்யா டீடெயிலு !'

சினிமா விரும்பி

Thursday, June 30, 2011

இந்த வார அலப்பரை 1!

இந்த வார அலப்பரை 1:

(ஒவ்வொரு வாரமும் வரும் என்று கம்பெனி கியாரண்டி கொடுக்காது!)

1 போட்டாரய்யா MOU!

தொழிலதிபர்கள் பெரிய பெரிய தொழிற்சாலை ஆரம்பிக்க அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போட்டுப் பார்த்ததுண்டு . ஹிந்தி நடிகர் ஓம் புரி தன் மனைவியிடம் 2008 இல் 'உடனடியாகப் பிரிய முடியாததால் இரண்டு ஆண்டுகளில் பிரிவோம், விவாகரத்து பெற்றுக் கொள்வோம்' என்று MOU போட்டிருக்கிறாராம்! அதனால் 'நான் இப்போ என்ன செய்தாலும் நீ கேட்க முடியாது' என்று வேறு பிட்டைப் போடுகிறாராம் ! வர வர எதுக்குத்தான் MOU போடுவதென்று ஒரு விவஸ்தையே இல்லாமப் போச்சுப்பா! புரிந்துணர்வே இல்லாததற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமா?!

2 ஒரு பிரபல வார இதழில் கவர் ஸ்டோரி :

"ரஜினி திரும்ப வருகிறார்! 'ராணா'வை மீண்டும் துவக்குகிறார்! வடிவேலுவை மன்னிக்கிறார்!"
' ஏம்பா வடிவேலுவை மன்னிப்பது என்றே வைத்துக் கொண்டாலும் அதைச் செய்ய வேண்டியவர் வேறு ஒருவராச்சே?! திரும்பத் திரும்ப மன்னித்துக் கொண்டே இருந்தால் சுலபமாக எல்லோரும் இவரிடம் வாலாட்டுவார்களே?!

3 திடீரென்று பரவி விட்ட ஒரு பேஷன்!

முதலில் சில மெட்ரோக்களில் மட்டுமே தலைகாட்டி இப்போது இந்தியா முழுவதும் பரவி விட்ட ஒரு கொடுமையான பேஷன்! அலுவலகம் செல்லும் பெண்கள், சேலையோ, பேன்ட் ஷர்ட்டோ, சுடிதாரோ, சல்வார் கமீஸோ எது அணிந்திருந்தாலும், கூடவே எக்ஸ்ட்ராவாக ஒரு துப்பட்டாவை எடுத்துக் கொண்டு முகம் முழுக்கப் பேய் மாதிரி போர்த்திக் கொண்டு, இரண்டு கண் மட்டும் தெரியும்படி டூவீலரில் போவது, அதுவும் பெரும்பாலும் Goggles போட்டுக் கண்ணையும் மறைப்பது! கேட்டால் ஹிந்தியில் சொல்வது போல் 'தூல், தூப்' (தூசி, வெயில்)பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்களாம்! பார்த்துப் போங்கம்மா! தீவிரவாதின்னு போலீஸ் புடிக்கப் போறாங்க!

சினிமா விரும்பி

Wednesday, December 8, 2010

வோடபோன் மற்றும் ஏர்டெல்

தெரிந்து செய்தார்களோ, தெரியாமல் செய்தார்களோ தெரியவில்லை. பார்த்தவர்களும் இன்று வரை இதைக் கூர்ந்து நோக்கியதாகத் தெரியவில்லை. சமீபத்தில் வெளியிடப் பட்ட ஏர்டெல்லின் புதிய லோகோவும் ஏற்கனவே பிரபலமான வோடபோனின் ரத்தச் சிவப்பு லோகோவும் அச்சு அசலாக ஒன்றாக இருப்பதைப் பாருங்கள்!


சினிமா விரும்பி



Monday, October 11, 2010

இந்திய நாணயத்துக்கு ஒரு சின்னம்



பொதுவாழ்வில் நாணயத்துக்கு ஒரு சின்னமாகப் பெருந்தலைவர் காமராஜ், அமரர் கக்கன் போன்றோரைச் சொல்வார்கள். இப்போது இந்திய நாணயத்துக்கே ஒரு சின்னம் வந்து விட்டது. கிட்டத்தட்ட 120 கோடி மக்கள் தொகை, தேசத்தின் உற்பத்தி 1.25 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள், ஒரு ட்ரில்லியனுக்கு மேல் GDP உள்ள பன்னிரண்டு நாடுகளில் ஒன்று; (பன்னிரண்டாவதுதான், இருந்தாலும் பரவாயில்லை, நூற்றுப் பன்னிரண்டு இல்லையே !) இன்றைய தேதியில் உலகின் அதிவேக வளர்ச்சி கொண்ட நாடுகளில் ஒன்று எனப் பல பெருமைகள் இருக்கும் போது நம் நாணயத்துக்கென்று ஒரு சின்னம் இருப்பது முறைதானே?

இதை உருவாக்கியவர் D. உதயகுமார் என்ற ஒரு தமிழர் என்பதிலும் நமக்குப் பெருமைதான். வெறும் ஹிந்தி 'ர' வில் மேலே இரண்டு கோடுதானே போட்டார், இது என்ன பெரிய விஷயமா? மறைமுகமாக அல்ல, கிட்டத்தட்ட நேரிடையாகவே ஹிந்தியைத் திணிக்கிறார்களே (கேட்டால் அது ஹிந்தி அல்ல, தேவநாகரி என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள்!) என்றெல்லாம் விமர்சனங்கள் உள்ளன. இவற்றில் ஓரளவு நியாயமும் உள்ளது. இருப்பினும், தேசத்துக்கென்று ஒரு மூவர்ணக் கொடியைப் போல், ஒரு ' ஜன கண மன ' வைப் போல், ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியைப் போல் இதுவும் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றுதான். புழக்கத்தில் உள்ள கரன்சி நோட்டுக்களின் எண்ணிக்கையில் நாம்தான் உலகில் முதலிடம் என்று நினைக்கிறேன். (தவறாக இருந்தால் திருத்தவும்) . அந்த நோட்டுக்களில் இந்தச் சின்னம் அச்சிடப்படாது என்பது சற்றே ஏமாற்றமளிக்கிறது! (இந்தக் கட்டுரை எழுதிப் பல மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 2011 இல் ' ' சின்னம் பதித்த இரண்டு ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வந்து விட்டன!) இது இல்லாமலே கூடக் கண்டிப்பாக இந்தச் சின்னம் உலக அளவில் விரைவில் பிரபலமாகியே தீரும். அமெரிக்கா (டாலர்), இங்கிலாந்து ( U.K பவுண்டு ) , ஜப்பான் (யென்) , ஐரோப்பிய யூனியன் (யூரோ) இவற்றுக்கு இணையாக நம் ரூபாய்க்கும் ஒரு சின்னம் வந்து விட்டது. மேலும் Rupee, ருப்பையா என்றெல்லாம் அழைக்கப்படும் நேபாளம், பாகிஸ்தான் , இலங்கை மற்றும் இந்தோனேசிய நாட்டுக் கரன்சிகளில் இருந்து நமக்கு ஒரு தனிப்பட்ட அடையாளம் இருக்கப் போகிறது. ஒரே ஒரு சிறு குறை! டாலருக்கு $ என்றும் சென்டுக்கு c இன் மேல் இரண்டு கோடு என்றும் வழங்குவது போல் நம்முடைய நயா பைசாவுக்கு ஒரு சின்னம் இல்லாமல் விட்டு விட்டார்கள்! பின்னாளில் உருவாக்குவார்களோ என்னவோ!

வரவேற்கிறோம்! வாழ்க !

சினிமா விரும்பி

Wednesday, October 6, 2010

'எந்திரன்' திரை விமர்சனம்



வலை உலகில் பலரும் முதல் இரண்டு நாட்களிலேயே விமர்சனம் எழுதித் தள்ளி விட்டார்கள். நானும் படம் பார்த்து விட்டு வந்து பதிவு எழுதாமல் விட்டால் ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவன் போல் என்னைப் பார்ப்பார்கள் என்பதால் இந்தப் பதிவு!

ரோபோ (அது ரோபோ அல்ல ரோபோட் என்று எனக்கு லயோலாக் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் சொல்லித் தந்தது வேறு விஷயம்!) பற்றிய படம் என்றதும் 'என்னடா, கான்செப்ட் ரொம்பப் பழசாகிப் போச்சே, எங்கே ஸ்கூல் பசங்க டிராமா போடுவது போல் கையையும் காலையும் 'விசுக் விசுக்'கென்று ஆட்டிக் கொண்டு நடந்து சொதப்பி விடுவார்களோ' என்று பயந்தேன். நல்ல வேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை! ரோபோவின் நடை,உடை ,பாவனை,பேச்சு மிகவும் அருமையாக வந்திருக்கிறது. படம் பார்க்கும் முன் நான் மொத்தம் இரண்டு ரஜினி (ஒன்று விஞ்ஞானி வசீகரன் , மற்றொன்று சிட்டி ரோபோ ) என்றுதான் நினைத்திருந்தேன் .பிறகுதான் தெரிந்தது , மூன்றாவதாக ஒரு வில்லன் ரோபோ ( சிட்டி வெர்ஷன் 2.0)வும் உண்டு என்று . ஒரிஜினல் சிட்டி cute என்றால் சிட்டி 2.0 deadly! அடேங்கப்பா ! என்னா வில்லத்தனம் ?! வாயைக் கோணிக்கொண்டு 'ரோபோ' என்று அவர் (அது?) சொல்லும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது. சண்டைக் காட்சிகளில் இப்படி ஒரு அனல் பறப்பதைத் தமிழ் சினிமா இது வரை கண்டதில்லை.Yuen Woo Ping க்கும் பீட்டர் ஹெயினுக்கும் கொடுங்கப்பா ஆளுக்கு ஒரு பாட்டில் ஒயின்!

வசீகரனின் காதலி சனாவாக ஐஸ்வர்யா ராய் . மெதுவா, மிக மெதுவா, வயதாகிக் கொண்டிருக்கும் ஒரு பேரிளம்பெண்! சந்தானம் மற்றும் கருணாஸின் காமெடி எடுபடவில்லை என்றால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? சிட்டி செய்யும் குறும்புகளே போதும் என்று இயக்குனர் விட்டு விட்டார் போல. ஆனால் உதவாக்கரை எடுபிடிகளாக இருக்கும் அவர்களிருவரும் திடீரென்று விஞ்ஞானி ரஜினிக்கு துரோகம் செய்வதை ஏற்க முடியவில்லை.

பச்சைமுத்து கேரக்டரில் பத்தே நிமிடம் வரும் கலாபவன் மணி தமிழர்களை மிகவும் இழிவு படுத்தும் வசனம் ஒன்றைப் பேசுகிறார். கண்டிப்பாகக் கண்டிக்கப்பட வேண்டிய இந்த வசனத்தைப் பற்றி இதுவரையில் யாரும் பெரிதாகக் கண்டனம் எழுப்பியதாகத் தெரியவில்லை

இடைவேளைக்குப் பின் இரண்டு மூன்று முறை ரோபோவும் சனாவும் டூயட் பாடுகிறார்கள். சற்றே அலுப்புத் தட்டுகிறது. விஞ்ஞானி வசீகரன் பாடும் பெருவில் படமாக்கப் பட்ட 'கிளிமாஞ்சாரோ' பாடல் ஒரு விஷுவல் ட்ரீட். தாளம் போடவும் வைக்கிறது.இந்தப் பாடலில் பா. விஜயின் வரிகள் சற்றே offbeat! அதே போல் இன்னொரு பாட்டு அந்த ரஜினியையே பாட வைத்திருக்கலாம். பாடல்களில் 'கிளிமாஞ்சாரோ'வுக்கு அடுத்ததாக 'அரிமா அரிமா'வைச் சொல்லலாம். மற்றதெல்லாம் OK ரகம்.


இயக்குனர் ஷங்கருக்கு ட்ராபிக் போலீசைக் கண்டால் என்ன கோபமோ தெரியவில்லை!
'இந்தியன்' முதல் ஒவ்வொரு படத்திலும் அவர்களைக் கலாய்க்கிறார். எந்திரனில் கான்ஸ்டபிளாக வருவது மறைந்த கொச்சி ஹனீபா. கொஞ்ச நேரமே வந்தாலும் ரகளை!

என்னதான் ரோபோடிக்ஸ் பற்றிய படம் என்றாலும் நாம் பார்ப்பது முழுக்க முழுக்கப் பொழுது போக்குக்காக ஒரு தமிழ்ப்படம், அதுவும் ரஜினி படம் என்பதை சில இடங்களில் மறந்து விட்டார்கள். வழக்கமாக ரஜினிக்குக் கொடுக்கும் grand entry இல்லாதது, விவேக்கோ அல்லது வடிவேலுவோ செய்யும் காமெடி ரகளை இல்லாதது, ரஜினி கலாபவனுடன் சண்டை போடாமல் தலை தெறிக்க ஓடுவது போன்றவற்றை ஏற்கவே முடியவில்லை. பட வசனங்களில் ஆங்கில நெடி அதிகம். சனாவிடம் சிட்டி ரஜினி சொல்கிறார் " நான் 72 language இல் lullaby பாடித் தூங்க வைப்பேன்". இதையே 'நான் 72 மொழிகளில் தாலாட்டுப் பாடுவேன் ' என்று சொல்ல முடியாதா ?

ரோபோவின் திறமைகளைக் காட்டச் சின்னச் சின்னதாகப் பல காட்சிகளைச் செதுக்கியிருப்பதை ரசிக்க முடிகிறது. சிட்டி ரோபோ அசுர வேகத்தில் பல பெண்களுக்குக் கையில் மெஹந்தி வரைந்து விடுவது, மிகப் பெரிய ஒரு ப்ரைம் நம்பரைத் திரையில் எழுதிக் காட்டி விட்டு 'இதை சரி பார்க்க விஞ்ஞானிகளுக்கு ஏழு வருஷம் ஆகும்' என்பது, சதுரமாக ஆம்லெட் போடுவது, நிச்சயதார்த்தத்தின் போது சளைக்காமல் jugglery செய்வது, கெட்ட ரோபோ குண்டடி பட்ட தன் இடது கண்ணிலிருந்து குண்டை எடுத்தெறிந்து விட்டுத் தானே கண்ணை ரிப்பேர் செய்து மீண்டும் மாட்டிக் கொள்வது மற்றும் பல. ஹிந்தி 'Three Idiots ' பாணியில் ரோபோ பிரசவம் பார்க்கும் காட்சி ஒன்று உள்ளது. ஒரிஜினலைப் பார்த்தவர்களுக்கு இதில் சுவாரஸ்யம் கம்மிதான். ஒரு காட்சியில் MBBS படிக்கும் ஐஸ்வர்யா சிட்டியின் உதவியுடன் பரீட்சையில் ஹைடெக்காக பிட் அடிக்கிறார் என்பதும் நெருடுகிறது.

இடைவேளைக்குப் பின் நாம் எதிர்பார்க்கும் முன்பே க்ளைமாக்ஸ் தொடங்கி விடுகிறது.ரொம்ப நீளமான க்ளைமாக்ஸ் என்றாலும் ஒரு நொடி கூடத் தொய்வு இல்லை. Nail biting finish!! தமிழில் இது வரை வந்த பிரம்மாண்டங்களை எல்லாம் 'ஜுஜுபி'ஆக்கி விடுகிறது இந்த அண்ட பிரம்மாண்டம்! ஏற்கனவே பலரும் எழுதியது போல் ரத்னவேலு கேமரா, ஆண்டனி கோன்சால்விஸ் படத்தொகுப்பு சாபு சிரிலின் கலை எல்லாமே கன கச்சிதம். போயும் போயும் மும்பையின் பழைய டேனி டென்சோங்பாவை விட்டால் வேறு புது வில்லனே இவர்களுக்குக் கிடைக்கவில்லையா?! கடைசியில் திரையில் 15 நிமிடம் கிரெடிட்ஸ் ஓடும் போது ' அடேங்கப்பா! கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துறையில் இத்தனை தமிழர்களா ! 'என்ற பிரமிப்பு ஏற்படுகிறது.

படம் முழுக்க மறைந்த எழுத்தாளர் சுஜாதா விரவிக் கிடக்கிறார் என்றால் அது மிகையில்லை . 'ஐயோ! இப்படி ஒரு கெட்ட ரோபோட்டின் கையில் உலகம் சிக்கி விடக் கூடாதே!' என்று நாம் மனம் பதைக்கும் போதே படம் முழு வெற்றி அடைந்து விடுகிறது! பாலிவுட் பாஷையில் சொல்வதென்றால் 'பைசா வசூல்!'

எந்திரன்- 2010 இன் எம்.ஜி.ராமச்சந்திரன்

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...