Monday, August 14, 2017

கோமுப்பாட்டிகோமுப்பாட்டி

கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆண்டுகள் முன்பே விதவையானவர். அந்நாளைய வழக்கப்படி மொட்டை அடித்து, பிரவுன் கலர் சேலையால் தலையை மூடி இருப்பார் (தசாவதாரம் கிருஷ்ணவேணிப் பாட்டி போல!) பாட்டியின் மகள் வயிற்றுப்  பேத்தி ஜலஜா.  சிறு வயதிலேயே தாயை இழந்து, தகப்பனும் பொறுப்பில்லாமல் இருக்கவே பாட்டியுடனும் தாய் மாமன் (ஜலஜாவின் அம்மாவுக்குத் தம்பி), மாமியுடனும் இருக்கத் தொடங்கியவள்.  பாட்டிக்கும் பேத்திக்கும் அவ்வளவு ஓட்டுதல்! மாமாவும் பாசக்காரர். ஜலஜாவுக்குக் கல்யாணத்துக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சரியாக அமையவில்லை. "எல்லாத்துக்கும் நேரம்னு ஒண்ணு வர வேண்டாமா?" என்பாள் பாட்டி.

ஒரு நாள் மாம்பலத்திலிருந்து ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு என்று கொஞ்சம் ஷாப்பிங், கொஞ்சம் விண்டோ ஷாப்பிங் செய்யப் போனார்கள் பாட்டியும் ஜலஜாவும். உஸ்மான் ரோடைக் கடக்கும் போது, பின்னாலிருந்து வேகமாக வந்த ஒரு சைக்கிள்காரன் பாட்டியின் மீது மோதி விட்டான்.  கீழே விழுந்து பாட்டிக்கு  மண்டையில் அடிபட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. திராணியற்ற பாட்டி மயங்கி விட்டாள். கூட்டம் கூடி சைக்கிள்காரனை நையப் புடைத்தது. கையெடுத்துக் கும்பிட்ட சைக்கிள்காரன் பாட்டியையும் பேத்தியையும் ஒரு சைக்கிள் ரிக்-ஷாவில் ஏற்றி விட்டுத் தான் பின்னாலேயே வீடு வரை வருவதாய் சத்தியம் செய்ததும் கூட்டம் விலகிற்று.


ஐந்து நிமிடத்துக்குள் சாமர்த்தியமாக அல்வா கொடுத்து விட்டான் சைக்கிள்காரன். ஏற்கனவே வெகுளி! பதட்டத்திலும் இருந்ததால் வீடு வரும் வரை ஜலஜாவுக்கு இது தெரியவில்லை. அந்தக் கால வழக்கப்படி பாட்டியை  ஜி. ஹெச் சில் சேர்த்தார்கள். மருத்துவர்கள் பிராணவாயு  கொடுத்தார்கள்.  ஆனால் பாட்டிக்குப் பிராணன் திரும்பி வரும் என்று நம்பிக்கை  கொடுக்கவில்லை! ஜலஜாவுக்குத் துணையாகப் பிற பெண்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லி விட்டு ஆண்கள் மட்டும் மருத்துவ மனையிலேயே இரவு முழுவதையும் கழித்தார்கள். தெரிந்தவர் ஒருவர் வீட்டில் அவ்வப்போது ஜலஜாவுக்கு போன் வரும், பாட்டிக்கு நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்று. ஒவ்வொரு முறையும் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடுவாள்!

கோமுப்பாட்டியின் உடல் மறுநாள் விடிந்ததும் ஆம்புலன்சில் வந்தது. பேத்தி அரற்றிய கொடுமையை யாருமே பார்க்கக் கூடாது. பெரியவர் ஒருவர் கிசுகிசுத்தார் “பாட்டி ஆஸ்பத்திரில கொண்டு போய்ச் சேர்த்ததுமே போய் விட்டாள்! இந்தப் பேத்தி ஒண்ணு இங்க இருக்கே, கிழவி மேல உசிரையே வச்சுண்டு, இதுக்காகத்தான் சளைக்காமல் பொய் சொன்னோம்". மதியம் பாட்டி எரியூட்டப் பட்டாள்!

சினிமா விரும்பி

Monday, June 5, 2017

ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மிகப் பெரிய நடிகர்களுடன் முதன்முறையாக நடிக்க வாய்ப்புக் கிடைத்த நடிகர் நடிகைகளுக்கான ரெடிமேட் டெம்ப்ளேட்!


ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற மிகப் பெரிய நடிகர்களுடன் முதன்முறையாக நடிக்க வாய்ப்புக் கிடைத்த நடிகர் நடிகைகளுக்காகவே இந்த ரெடிமேட் டெம்ப்ளேட் உருவாக்கப் பட்டுள்ளது. எந்த ஒரு பத்திரிக்கை அல்லது  தொலைகாட்சி நேர்காணலுக்கு வேண்டுமானாலும் இந்த டெம்ப்ளேட்டை  தாராளமாகவும் உடனடியாகவும் உபயோகப் படுத்திப் பயனடையலாம்!

நிருபர் கேள்வி : இத்தனை பெரிய நடிகருடன் ஒரு நாள் நடிப்போம் என்று என்றாவது நினைத்ததுண்டா?

நடிகர்/நடிகை பதில்: "மை காட்! சிறு வயதிலிருந்து அவருடைய பரம  ரசிகன்/ ரசிகை ஆன எனக்கு இப்படி ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் கனவு கூடக் கண்டதில்லை! இன் பாக்ட், போனை என் தம்பிதான் எடுத்தான். விஷயத்தை அவன் என்னிடம் சொன்ன போது கூட " நக்கல் பண்றியாடா?" என்றேன். அவன் " சத்தியமா" என்றதும் மேகத்தில் பறக்க ஆரம்பித்து விட்டேன்! ஒரு வாரம் ஆன பிறகும் தரைக்கு வரவில்லை!"

நிருபர்: முதல் நாள் பெரிய நடிகருடன் நடிக்கும் போது எப்படி இருந்தது?

நடிகர்/நடிகை: "ஷூட்டிங் அன்றுதான் அவரை முதலில் பார்த்தேன். பயத்தில் நாக்கு மேலே ஒட்டிக் கொண்டு விட்டது. உதவி இயக்குனர் சொல்லிக் கொடுத்த எல்லா வசனமும் மறந்தே போச்! இயக்குநர் "ஸ்டார்ட் கேமரா ஆக்-ஷன்" சொன்ன பிறகும் அப்படியே ஷாக் அடித்தது போல் நின்று கொண்டிருந்தேன்! "கட்! கட்!" என்றார் கோபத்துக்குப் பெயர் போன டைரக்டர். அவர் திட்ட ஆரம்பிப்பதற்குள் பெரிய நடிகர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டுத் தட்டிக் கொடுத்தார். " நான் என்ன பூதமா? பிசாசா? உன்னைப் பிடித்து சாப்பிடவா போகிறேன்? பயத்தைத் தூக்கிக் கடாசி விட்டு சகஜமாகப் பேசி நடி! ஆல் தி பெஸ்ட்!" என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.  இவ்வளவு பெரிய நடிகர் என் லெவலுக்கு இறங்கி வருகிறாரே?! என்று எனக்கு ஒரே ஆச்சரியம். இவர் நம்பிக்கையைக் கெடுத்து விட்டால் நான் இந்த பீல்டுக்கே லாயக்கில்லை என்ற உண்மை பொட்டில் அறைந்தது. அப்படியே மூச்சைப் பிடித்துக் கொண்டு நடித்துக் கொடுத்தேன். மொத்த யூனிட்டும் எழுந்து கை தட்டிய போதுதான் தெரிந்தது ஒரே டேக்கில் முடிந்து விட்டது என்று!   இது வரை வந்த எல்லாப் புதுமுகங்களும் சாருடன்  நடிக்கும் போது பத்து டேக் வாங்காமல் விட்டதில்லை என்று அவர்கள் சொன்ன போது " அப்பாடா! இனிமேல் எப்படியும் ஒப்பேற்றி விடலாம் என்ற தைரியம் வந்தது! ஹீ இஸ் ரியலி கிரேட்!“ என்று உற்சாகத்துடன் பேட்டியை முடித்துக் கொண்டார்!

சினிமா விரும்பி

Thursday, August 18, 2016

நா. முத்துகுமார்

நா. முத்துகுமார்

நாற்பத்தோராயிரம் பாடல் எழுத வேண்டியவன் நீ!
நாற்பத்தொன்றில் அநியாயமாய்ப் போய்ச் சேர்ந்தாயே!

சினிமா விரும்பி
 

Monday, May 30, 2016

"நான் ஒரு விளையாட்டு பொம்மையா?"

"நான் ஒரு விளையாட்டு பொம்மையா?"

1985-87 இல் நான் பரீதாபாதில் பணியில் இருந்த போது மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தன் மூத்த மகனுடன் என் வீட்டருகில் வசித்து வந்தார். சிறு வயதில் அயோத்யா மண்டபம் நிகழ்ச்சிகளில் அவரைப் பல முறை பார்த்ததுண்டு என்பதனால் நானே சென்று அறிமுகப் படுத்திக் கொண்டேன். பெரியவர்  சமீபத்தில்தான் பக்கவாதத்தால் தாக்கப்பட்டு முழு வலது புறம் செயல் இழந்து விட்டிருந்தார். பேச்சும் குழறும்.

"மாம்பலத்தில்  உங்க மாடி வீடு என்ன ஆச்சு சார்?" என்றேன். "பொண்ணுங்க கல்யாணத்துக்காக பில்டரிடம் வித்துட்டேம்பா!" என்றார். விட்டு விட்டு அவர் பேசிய வார்த்தைகளில் பெரும் ஆதங்கம் தெரிந்தது.

எங்கள் நண்பர் குழாத்தில் ஒருவன் நன்றாகப் பாடுவான். கர்நாடக இசையில் கேள்வி ஞானமும் உண்டு. "நவரச கானடாவில் வரும் பாபநாசம் சிவன் பாடலான 'நான் ஒரு விளையாட்டு பொம்மையா, ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு?" எனக்காகப் பாடுவாயா?' என்றார். நண்பனுக்கு முழு வரிகளும் தெரியாது என்றதும் "பரவாயில்லை! தெரிந்த வரை பாடு போதும்!" என்றார்.

அவன் பாடி முடிப்பதற்குள் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். அப்படி ஒரு அழுகை! அவர் அழுது முடித்த பின் நாங்கள் அமைதியாக  வெளியேறினோம்.

அடுத்த பத்து நாட்களில் பெரியவர் அந்த ஜகன் நாயகி உமையிடமே போய்ச் சேர்ந்து விட்டார் என்று தகவல் வந்தது! இசை அவரைப் பிழைக்க வைக்கா விட்டாலும் அவருடைய மன பாரத்தைப் பெருமளவு குறைத்திருக்கும் என்றே எனக்குத் தோன்றியது!
சினிமா விரும்பி

Thursday, October 9, 2014

மாண்டலின் ஸ்ரீனிவாஸ்


1980 இல் கிண்டி பொறியியற் கல்லூரியில் படித்து முடித்த பின் ஜம்ஷெட்பூரில் டாடா நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருந்த நேரம். 'அய்யாக்கண்ணு மெஸ் ' என்ற எங்கள் செல்லமான தமிழ் மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, 9-10 வயதுள்ள ஒரு பையன் அப்பாவுடன் வந்து அமர்ந்தான். அங்குள்ள தமிழ்ச் சங்கத்தின் ( பெயர் என்ன தெரியுமா? மதராஸி சம்மேளனி ! இப்போது மாற்றி விட்டார்களா தெரியவில்லை! ) அமைப்பாளர் ஒருவரும் கூட வந்தார். 'நாளைக்கு என்ன சார் கச்சேரி?' என்றேன். 'இதோ இருக்கானே இந்தத் தெலுங்குப் பையன்தான் மாண்டலின் வாசிக்கப் போகிறான்' என்றார். நான் அதற்கு முன் மாண்டலினை 'ஷோலே' படத்தில் 'மெஹ்பூபா, மெஹ்பூபா ' பாடலில் ஜலால் ஆகா வாசித்துதான் பார்த்திருக்கிறேன். அதில் கர்நாடக இசையைக் கொண்டு வர முடியும் என்பதே  எனக்குத் தெரியாது!

பின்னாளில் தன் காந்தர்வ இசையால் மகுடியில் மயங்கிய பாம்பாக ரசிகர்களை உலகெங்கும் கட்டிப் போட்ட அந்தத் 'தெலுங்குப் பையன் 'இவ்வளவு சீக்கிரம் மறைவான் (ர்) என்று கனவிலும் நினைக்கவில்லை!

என்றாவது ஒரு நாள் திரும்பி வர மாட்டாயா ஸ்ரீனிவாஸ்?

சினிமா விரும்பி  

Wednesday, July 17, 2013

தேடிச் சோறு நிதந் தின்று!பாரதியாரின் உணர்ச்சிப் பிழம்பான கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயற்சித்துப் பார்த்தேன்! முடிவுகள் கீழே!:

தேடிச் சோறு நிதந் தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து -மனம்

வாடித் துன்ப மிக உழன்று - நரை

கூடிக் கிழப் பருவ மெய்திக் - கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

மகாகவி சுப்ரமணிய பாரதி

Oh! Maa Shakti!

Did you think I will also perish like many of those silly folks

who hunt around for their daily food,

indulge in lots of petty gossip,

cause harm to others by their actions,

undergo mental agony themselves,

develop grey hair and grow old and

subsequently become fodder to the cruel Yama?

Mahakavi Subramania Bharati


Monday, April 22, 2013

குதுப் மினார்- சில புகைப்படங்கள்தில்லியில் இத்தனை ஆண்டுகளாக இருந்தும் குதுப் மினாரை அவசரமில்லாமல் அமைதியாகப் பார்த்ததில்லையே என்ற ஆதங்கம் பல வருடங்களாக இருந்தது. போன சனிக்கிழமை அதற்கான நேரம் வாய்த்தது.

நிதானமாக , ஆற அமர, ஒவ்வோர் தூணையும் ரசித்துப் பார்க்க முடிந்தது. மொபைலில் பற்பல புகைப் படங்களையும் எடுத்தேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...