Monday, August 14, 2017

கோமுப்பாட்டி



கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆண்டுகள் முன்பே விதவையானவர். அந்நாளைய வழக்கப்படி மொட்டை அடித்து, பிரவுன் கலர் சேலையால் தலையை மூடி இருப்பார் (தசாவதாரம் கிருஷ்ணவேணிப் பாட்டி போல!) பாட்டியின் மகள் வயிற்றுப்  பேத்தி ஜலஜா.  சிறு வயதிலேயே தாயை இழந்து, தகப்பனும் பொறுப்பில்லாமல் இருக்கவே பாட்டியுடனும் தாய் மாமன் (ஜலஜாவின் அம்மாவுக்குத் தம்பி), மாமியுடனும் இருக்கத் தொடங்கியவள்.  பாட்டிக்கும் பேத்திக்கும் அவ்வளவு ஓட்டுதல்! மாமாவும் பாசக்காரர். ஜலஜாவுக்குக் கல்யாணத்துக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சரியாக அமையவில்லை. "எல்லாத்துக்கும் நேரம்னு ஒண்ணு வர வேண்டாமா?" என்பாள் பாட்டி.

ஒரு நாள் மாம்பலத்திலிருந்து ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு என்று கொஞ்சம் ஷாப்பிங், கொஞ்சம் விண்டோ ஷாப்பிங் செய்யப் போனார்கள் பாட்டியும் ஜலஜாவும். உஸ்மான் ரோடைக் கடக்கும் போது, பின்னாலிருந்து வேகமாக வந்த ஒரு சைக்கிள்காரன் பாட்டியின் மீது மோதி விட்டான்.  கீழே விழுந்து பாட்டிக்கு  மண்டையில் அடிபட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. திராணியற்ற பாட்டி மயங்கி விட்டாள். கூட்டம் கூடி சைக்கிள்காரனை நையப் புடைத்தது. கையெடுத்துக் கும்பிட்ட சைக்கிள்காரன் பாட்டியையும் பேத்தியையும் ஒரு சைக்கிள் ரிக்-ஷாவில் ஏற்றி விட்டுத் தான் பின்னாலேயே வீடு வரை வருவதாய் சத்தியம் செய்ததும் கூட்டம் விலகிற்று.


ஐந்து நிமிடத்துக்குள் சாமர்த்தியமாக அல்வா கொடுத்து விட்டான் சைக்கிள்காரன். ஏற்கனவே வெகுளி! பதட்டத்திலும் இருந்ததால் வீடு வரும் வரை ஜலஜாவுக்கு இது தெரியவில்லை. அந்தக் கால வழக்கப்படி பாட்டியை  ஜி. ஹெச் சில் சேர்த்தார்கள். மருத்துவர்கள் பிராணவாயு  கொடுத்தார்கள்.  ஆனால் பாட்டிக்குப் பிராணன் திரும்பி வரும் என்று நம்பிக்கை  கொடுக்கவில்லை! ஜலஜாவுக்குத் துணையாகப் பிற பெண்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லி விட்டு ஆண்கள் மட்டும் மருத்துவ மனையிலேயே இரவு முழுவதையும் கழித்தார்கள். தெரிந்தவர் ஒருவர் வீட்டில் அவ்வப்போது ஜலஜாவுக்கு போன் வரும், பாட்டிக்கு நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்று. ஒவ்வொரு முறையும் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடுவாள்!

கோமுப்பாட்டியின் உடல் மறுநாள் விடிந்ததும் ஆம்புலன்சில் வந்தது. பேத்தி அரற்றிய கொடுமையை யாருமே பார்க்கக் கூடாது. பெரியவர் ஒருவர் கிசுகிசுத்தார் “பாட்டி ஆஸ்பத்திரில கொண்டு போய்ச் சேர்த்ததுமே போய் விட்டாள்! இந்தப் பேத்தி ஒண்ணு இங்க இருக்கே, கிழவி மேல உசிரையே வச்சுண்டு, இதுக்காகத்தான் சளைக்காமல் பொய் சொன்னோம்". மதியம் பாட்டி எரியூட்டப் பட்டாள்!

சினிமா விரும்பி

Monday, June 5, 2017

ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மிகப் பெரிய நடிகர்களுடன் முதன்முறையாக நடிக்க வாய்ப்புக் கிடைத்த நடிகர் நடிகைகளுக்கான ரெடிமேட் டெம்ப்ளேட்!


ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற மிகப் பெரிய நடிகர்களுடன் முதன்முறையாக நடிக்க வாய்ப்புக் கிடைத்த நடிகர் நடிகைகளுக்காகவே இந்த ரெடிமேட் டெம்ப்ளேட் உருவாக்கப் பட்டுள்ளது. எந்த ஒரு பத்திரிக்கை அல்லது  தொலைகாட்சி நேர்காணலுக்கு வேண்டுமானாலும் இந்த டெம்ப்ளேட்டை  தாராளமாகவும் உடனடியாகவும் உபயோகப் படுத்திப் பயனடையலாம்!

நிருபர் கேள்வி : இத்தனை பெரிய நடிகருடன் ஒரு நாள் நடிப்போம் என்று என்றாவது நினைத்ததுண்டா?

நடிகர்/நடிகை பதில்: "மை காட்! சிறு வயதிலிருந்து அவருடைய பரம  ரசிகன்/ ரசிகை ஆன எனக்கு இப்படி ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் கனவு கூடக் கண்டதில்லை! இன் பாக்ட், போனை என் தம்பிதான் எடுத்தான். விஷயத்தை அவன் என்னிடம் சொன்ன போது கூட " நக்கல் பண்றியாடா?" என்றேன். அவன் " சத்தியமா" என்றதும் மேகத்தில் பறக்க ஆரம்பித்து விட்டேன்! ஒரு வாரம் ஆன பிறகும் தரைக்கு வரவில்லை!"

நிருபர்: முதல் நாள் பெரிய நடிகருடன் நடிக்கும் போது எப்படி இருந்தது?

நடிகர்/நடிகை: "ஷூட்டிங் அன்றுதான் அவரை முதலில் பார்த்தேன். பயத்தில் நாக்கு மேலே ஒட்டிக் கொண்டு விட்டது. உதவி இயக்குனர் சொல்லிக் கொடுத்த எல்லா வசனமும் மறந்தே போச்! இயக்குநர் "ஸ்டார்ட் கேமரா ஆக்-ஷன்" சொன்ன பிறகும் அப்படியே ஷாக் அடித்தது போல் நின்று கொண்டிருந்தேன்! "கட்! கட்!" என்றார் கோபத்துக்குப் பெயர் போன டைரக்டர். அவர் திட்ட ஆரம்பிப்பதற்குள் பெரிய நடிகர் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டுத் தட்டிக் கொடுத்தார். " நான் என்ன பூதமா? பிசாசா? உன்னைப் பிடித்து சாப்பிடவா போகிறேன்? பயத்தைத் தூக்கிக் கடாசி விட்டு சகஜமாகப் பேசி நடி! ஆல் தி பெஸ்ட்!" என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.  இவ்வளவு பெரிய நடிகர் என் லெவலுக்கு இறங்கி வருகிறாரே?! என்று எனக்கு ஒரே ஆச்சரியம். இவர் நம்பிக்கையைக் கெடுத்து விட்டால் நான் இந்த பீல்டுக்கே லாயக்கில்லை என்ற உண்மை பொட்டில் அறைந்தது. அப்படியே மூச்சைப் பிடித்துக் கொண்டு நடித்துக் கொடுத்தேன். மொத்த யூனிட்டும் எழுந்து கை தட்டிய போதுதான் தெரிந்தது ஒரே டேக்கில் முடிந்து விட்டது என்று!   இது வரை வந்த எல்லாப் புதுமுகங்களும் சாருடன்  நடிக்கும் போது பத்து டேக் வாங்காமல் விட்டதில்லை என்று அவர்கள் சொன்ன போது " அப்பாடா! இனிமேல் எப்படியும் ஒப்பேற்றி விடலாம் என்ற தைரியம் வந்தது! ஹீ இஸ் ரியலி கிரேட்!“ என்று உற்சாகத்துடன் பேட்டியை முடித்துக் கொண்டார்!

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...