Monday, August 14, 2017

கோமுப்பாட்டி



கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆண்டுகள் முன்பே விதவையானவர். அந்நாளைய வழக்கப்படி மொட்டை அடித்து, பிரவுன் கலர் சேலையால் தலையை மூடி இருப்பார் (தசாவதாரம் கிருஷ்ணவேணிப் பாட்டி போல!) பாட்டியின் மகள் வயிற்றுப்  பேத்தி ஜலஜா.  சிறு வயதிலேயே தாயை இழந்து, தகப்பனும் பொறுப்பில்லாமல் இருக்கவே பாட்டியுடனும் தாய் மாமன் (ஜலஜாவின் அம்மாவுக்குத் தம்பி), மாமியுடனும் இருக்கத் தொடங்கியவள்.  பாட்டிக்கும் பேத்திக்கும் அவ்வளவு ஓட்டுதல்! மாமாவும் பாசக்காரர். ஜலஜாவுக்குக் கல்யாணத்துக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சரியாக அமையவில்லை. "எல்லாத்துக்கும் நேரம்னு ஒண்ணு வர வேண்டாமா?" என்பாள் பாட்டி.

ஒரு நாள் மாம்பலத்திலிருந்து ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு என்று கொஞ்சம் ஷாப்பிங், கொஞ்சம் விண்டோ ஷாப்பிங் செய்யப் போனார்கள் பாட்டியும் ஜலஜாவும். உஸ்மான் ரோடைக் கடக்கும் போது, பின்னாலிருந்து வேகமாக வந்த ஒரு சைக்கிள்காரன் பாட்டியின் மீது மோதி விட்டான்.  கீழே விழுந்து பாட்டிக்கு  மண்டையில் அடிபட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. திராணியற்ற பாட்டி மயங்கி விட்டாள். கூட்டம் கூடி சைக்கிள்காரனை நையப் புடைத்தது. கையெடுத்துக் கும்பிட்ட சைக்கிள்காரன் பாட்டியையும் பேத்தியையும் ஒரு சைக்கிள் ரிக்-ஷாவில் ஏற்றி விட்டுத் தான் பின்னாலேயே வீடு வரை வருவதாய் சத்தியம் செய்ததும் கூட்டம் விலகிற்று.


ஐந்து நிமிடத்துக்குள் சாமர்த்தியமாக அல்வா கொடுத்து விட்டான் சைக்கிள்காரன். ஏற்கனவே வெகுளி! பதட்டத்திலும் இருந்ததால் வீடு வரும் வரை ஜலஜாவுக்கு இது தெரியவில்லை. அந்தக் கால வழக்கப்படி பாட்டியை  ஜி. ஹெச் சில் சேர்த்தார்கள். மருத்துவர்கள் பிராணவாயு  கொடுத்தார்கள்.  ஆனால் பாட்டிக்குப் பிராணன் திரும்பி வரும் என்று நம்பிக்கை  கொடுக்கவில்லை! ஜலஜாவுக்குத் துணையாகப் பிற பெண்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லி விட்டு ஆண்கள் மட்டும் மருத்துவ மனையிலேயே இரவு முழுவதையும் கழித்தார்கள். தெரிந்தவர் ஒருவர் வீட்டில் அவ்வப்போது ஜலஜாவுக்கு போன் வரும், பாட்டிக்கு நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்று. ஒவ்வொரு முறையும் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடுவாள்!

கோமுப்பாட்டியின் உடல் மறுநாள் விடிந்ததும் ஆம்புலன்சில் வந்தது. பேத்தி அரற்றிய கொடுமையை யாருமே பார்க்கக் கூடாது. பெரியவர் ஒருவர் கிசுகிசுத்தார் “பாட்டி ஆஸ்பத்திரில கொண்டு போய்ச் சேர்த்ததுமே போய் விட்டாள்! இந்தப் பேத்தி ஒண்ணு இங்க இருக்கே, கிழவி மேல உசிரையே வச்சுண்டு, இதுக்காகத்தான் சளைக்காமல் பொய் சொன்னோம்". மதியம் பாட்டி எரியூட்டப் பட்டாள்!

சினிமா விரும்பி

1 comment:

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...