Wednesday, August 12, 2009

‘Love Aajkal’ பட விமர்சனம்


பத்தாவது படிக்கும் என் மகளின் தொந்தரவு தாங்காமல் ஒரு மல்டிப்ளெக்ஸில் போய்ப் பார்த்த படம். 2007 இல் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் 'Jab We Met' கொடுத்த இயக்குனர் இம்தியாஸ் , இசை அமைப்பாளர் ப்ரீத்தம், ஒளிப்பதிவாளர் நடராஜன் சுப்ரமணியம் (அட! நம்ப ஆளுய்யா!) ஆகியோரின் கூட்டணி மீண்டும் கிட்டத்தட்ட அதே போல் ஒரு முயற்சி செய்துள்ளனர். முடிவு வெற்றியா? நீங்களேதான் பார்த்து சொல்ல வேண்டும்!

லண்டனில் தன்னுடைய Girl friend தீபிகாவுடன் மகிழ்ச்சியாகப் பிரிகிறார் ஸைப் அலி கான். நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்து விட்டுப் பிரிகிறார்கள். கேட்டால் இருவருக்கும் Career முக்கியமாம்!. ஸைப் போக விரும்புவது சான் பிரான்சிஸ்கோ, தீபிகாவுக்கு இந்தியாவில் பழைய நினைவுச் சின்னங்களைப் புதுப்பிக்கும் தொழிலில் ஆர்வம். பிரிந்த பின்னும் முன்பை விட அதிகமாக தினமும் மொபைல் மற்றும் இன்டர்நெட் மூலம் Chat செய்கிறார்கள். இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்று புரிந்து கொள்ள லண்டன் ஹோட்டல் முதலாளியான, சற்றே வயதான சர்தார்ஜி (ரிஷி கபூர்) ஆர்வம் காட்டுகிறார். 'என்னப்பா, சொதப்பல் காரணமா இருக்கே!' என்கிறார். 'காதல்னா தெரியுமா உனக்கு? ' என்று தன் காதல் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக Flash back இல் ஸைப் இடம் சொல்கிறார். ( சிவாஜி, விஜய்யின் ' ஒன்ஸ் மோர்' ஞாபகம் வருதா ?!)

இளம் வயது ரிஷி கபூராக ஸைப் அலி கானே சர்தார்ஜியாக நடிப்பது இயக்குனரின் நல்ல கற்பனை வளம்! அவருக்கு ஜோடியாக ஹர்லீன் கௌர் என்ற சர்தாரிணி பாத்திரத்துக்கு கிஸெல் மொண்டேய்ரோ என்ற ஒரு பிரேசில் இறக்குமதி மாடலை நடிக்க விட்டிருக்கிறார்கள் . பலரும் மெச்சிக் கொள்கிறார்கள். ஆனால் பாந்தமாக இல்லை, செயற்கை என்பது என் கருத்து. கடைசிக் காட்சியில் ஒரு இன்ப அதிர்ச்சி! இதே பாத்திரம் வயதான பின் யாரென்று பார்த்தால்..... அட நம்ப நீத்து சிங்!

பீரியட் படம் என்ற பெயரில் Train, Platform எல்லாம் ஒரே அரதப் பழசாய்க் காட்டி இருக்கிறார்கள். ஆனால் அந்தக் காட்சிகள்தான் படத்தில் ஜீவனுடன் உள்ளன. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றன. லண்டன், சான் பிரான்சிஸ்கோ எல்லாம் picture perfect ஆக இருந்தாலும் அந்தக் கதையுடன் ஒட்ட முடியவில்லை! சொன்னால் எனக்கு வயதாகி விட்டது என்பீர்கள்!

கதையை விட்டு விட்டோமே! இந்தியா வரும் தீபிகாவிடம் அவரது பாஸ் ராகுல் கன்னா (வினோத் கன்னாவின் இன்னொரு- MTV புகழ் மகன்) propose செய்யக் கிட்டத்தட்ட திருமணம் வரை போய் விடுகிறது. ஒரு விளையாட்டாய் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஸைப்புக்கும் (அவ்வப்போது இந்தியா வந்து போகிறார், ஒரு புது வெள்ளைக்காரக் காதலியுடன்) தீபிகாவுக்கும் இதன் விபரீதம் மெதுவாகப் புரிய ஆரம்பிக்கிறது. அதாவது, தீபிகாவுக்குத் தானே அனுபவிக்கும் மரண அவஸ்தை மூலம் புரிகிறது . ஸைப்புக்கு ரிஷி கபூரின் கதையைக் கேட்கக் கேட்கக் காதலின் மகத்துவம் புரிகிறது. கடைசியில் எப்படி 'The End' கார்டு போட்டார்கள் என்பதை வெள்ளித் திரையில் காணவும்! ('நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'மௌன ராகம்' , 'Hum Dil De Chuke Hain Sanam' எல்லாம் நினைவுக்கு வராவிட்டால் நீங்கள் சினிமாவில் LKG யைத் தாண்டவில்லை என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்வேன்!)

ப்ரீதமின் இசையோ, பாடல்கள் படமாக்கப் பட்ட விதமோ 'Jab We Met' க்கு உறை போடக் காணாது! படம் முடியும் போது 'Jab We Met' டைப் போலவே ( நினைவிருக்கிறதா? துள்ளலான Maujjaa hi Maujja) ஒரு அட்டகாசமான பாடலைப் போட முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு Large பாப் கார்ன் சாப்பிட்டு முடிக்கும் முன்பே இன்டர்வெல் வந்து விடுகிறது! அது வரை ஒரே ஒரு பாடல்தான்! மற்ற ஐந்தாறு பாடல்கள் இரண்டாம் பகுதியில்தான்! நடு நடுவே காதலைப் பற்றி முனைவர் பட்டம் பெறப் போகிறாரா இயக்குனர் என்பது போல் வசனங்களில் ஒரே தியரி மயம் !

தீபிகா எதோ காலேஜ் டிராமாவில் நடிப்பது போல் உயரமாய் வந்து போகிறார். ஹிந்தி பேசும்போது ஹேமமாலினி காதில் கேட்கிறார்! ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம் என்று கடைசிப் பாடலில் glamour கொஞ்சம தாராளம்தான் !

ஒன்றிரண்டு பாடல்கள், நடனங்கள் (உதாரணம்: We Twist, We Twist), இளைய மற்றும் வயதான சர்தார்ஜிகளான ஸைப் மற்றும் ரிஷி கபூரின் ஆழமான நடிப்பு , நெஞ்சைப் பிராண்டும் ஒரு அழுத்தத்துடன் 'காதல் உன்னதமானது. எல்லாத் தலைமுறைக்கும் பொதுவானது' என்று நெத்தியடியாய் சொன்ன விதம் இவற்றுக்காகக் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்!

சினிமா விரும்பி

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...