புது தில்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் நகரம் மிகவும் தொலைவாக இருந்ததால் தில்லியின் ஓக்லா தொழிற்பேட்டைக்கு அருகே நொய்டா (New Okhla Industrial Development Authority-Noida) என்ற ஒரு இடத்தை எண்பதுகளின் ஆரம்பத்தில் துவங்கினார்கள். தொழிற்பேட்டை மற்றும் வீட்டு வசதி வாரியம் போன்ற ஒரு அமைப்பு. தமிழில் நாய்டா என்றோ அல்லது நோய்டா என்றோ எழுதினால் விபரீதமாக அர்த்தம் வருவதால் நொய்டா என்று தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதுவது வழக்கமாகி விட்டது! ஒரு காலத்தில் ஓக்லாவின் அருகில் உ.பி.யின் சில பசும் வயல்வெளி கொண்ட கிராமங்களில் இருந்து உருவாக்கப் பட்ட நொய்டா இன்று சூரஜ்பூர் வரை நொய்டா மற்றும் கிரேடர் நொய்டா என்று பல்கிப் பெருகி விட்டது! இவற்றை காஸியாபாத் மாவட்டத்தில் இருந்து வெட்டி எடுத்து கௌதம் புத்(தா) நகர் என்று ஒரு புது மாவட்டத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் தாண்டினால் புலந்த் ஷஹர் மாவட்டமே வந்து விடுகிறது!
இன்று எப்படியோ, ஆரம்ப காலத்தில் மிகவும் திட்டமிட்டுக் கட்டப் பட்ட ஒரு துணைக்கோள் நகரம் நொய்டா. நகருக்குள்ளே கிட்டத்தட்ட எல்லா சாலைகளுமே ஒன்றுக்கொன்று இணையானவை அல்லது செங்குத்தானவை (Grid அமைப்பு). எனவே, போக வேண்டிய இடத்துக்குக் குறுக்கு வழியில் சீக்கிரம் போய்ச் சேருவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை! காஸியாபாதை ஒப்பிடும்போது இங்கு போலீசார் கண்காணிப்பு அதிகம், குற்றங்கள் குறைவு என்பார்கள். ஆனால் இன்றைய தேதியில் கிரைம் ரேட்டில் இரண்டுமே சமமாகத்தான் உள்ளன. விலைவாசியோ தில்லியை விட ஒரு மாற்று அதிகம்! ஒரு முறை முலாயம் சிங்க் யாதவ் மற்றும் ஷீலா தீட்சித் அரசுகளுக்கிடையே கடும் மோதல் ஏற்பட, பல மாதங்கள் தில்லியின் DTC பஸ்கள் நொய்டாவுக்கு உள்ளேயே தலை காட்ட முடியவில்லை! இப்போது DTC யின் பச்சை நிறத் தாழ் தள சொகுசுப் பேருந்துகளும் காமன்வெல்த்துக்குப் பின் வந்த சிவப்பு நிற அதி சொகுசுப் பேருந்துகளும் நொய்டாவெங்கும் விரவிக் கிடக்கின்றன.
குற்றங்களைப் பற்றி எழுதும் போது, குற்றங்களில் மெகா குற்றங்கள் இரண்டு நொய்டாவில்தான் நடந்தன என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டே ஆக வேண்டும். நான்காண்டுகளுக்கு முன், ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் வீட்டு சொந்தக்காரரும் பணியாளனும் சேர்ந்து வீட்டு வேலைக்காக வந்த பல சிறுமிகளையும் இளம் பெண்களையும் பாலியல் கொடுமைக்குப் பின் கொலையும் செய்து கூலாகப் பாதாள சாக்கடையில் தள்ளியதாகக் குற்றம் சாட்டப் பட்ட நிடாரி என்னும் இடம் நொய்டாவின் மத்தியில் உள்ளது. தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் வந்து கொண்டே இருந்ததை டிவியில் பார்த்திருப்பீர்கள். தவிர, இன்று வரை சிபிஐக்கே சவால் விடும் வழக்கான பதினான்கு வயது ஆருஷி என்ற பள்ளிச் சிறுமி கொலை வழக்கு. அதிகாலையில் தன் வீட்டிலேயே இந்தச் சிறுமி கொலையுண்டு கிடந்தது, கூடவே ஹேம்ராஜ் என்ற வீட்டுப் பணியாளும் கொலையுண்டு கிடந்தது என்று சிக்கல்கள் பல நிறைந்த இந்த வழக்கு குற்றவியல் வல்லுநர்களையே ஸ்தம்பிக்க வைக்கிறது.
நொய்டாவின் தண்ணீர் மிகவும் புகழ் வாய்ந்தது! வெவ்வேறு செக்டரில் வெவ்வேறு சுவை தரும் நிலத்தடி நீர்தான் நொய்டாவின் மொத்த நீராதாரம். இந்தக் கிணறுகளுக்கு 'ரேனே வெல்' என்று பெயர் (யாராவது அர்த்தம் தெரிந்தால் சொல்லுங்கள்!).எவர்சில்வர் பாத்திரம் கூட சட்டென்று ஓட்டை விழும் அளவுக்கு ஆபத்தான நீர்! இதில் துணி துவைப்பதை மறந்து விடுங்கள் ! கடந்த ஐந்து வருடங்களாக கங்கை நீர் பைப்லைன் மூலம் கொண்டு வரப் பட்டு இந்த லோக்கல் நீரோடு கலக்கப் பட்டு விநியோகிக்கப் படுவதால் நிலைமை சற்றே மேம்பட்டது. 'தினமும் கங்கா ஸ்நானம் செய்வதனால் புதிது புதிதாய் தினமும் பாவம் செய்கிறாயா?' என்று நண்பன் கிண்டலடிப்பான்! இதைத்தவிர இண்டேன், பாரத் கேஸ் போன்ற நிறுவனங்கள் வழங்கும் சிலிண்டர்களுக்கு மாற்றாக 'இந்திரபிரஸ்தா கேஸ்' நிறுவனம் குழாய் மூலம் உங்கள் சமையலறைக்குள்ளேயே கொண்டு வந்து தரும் சமையல் எரிவாயுவும் உண்டு. பல செக்டர்களில் பரந்து கிடக்கும் தொழிற்பேட்டைப் பகுதியில் பார்த்தால், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக HCL போன்ற சில தனியார் நிறுவனங்கள் நொய்டாவில் அலுவலகங்கள் அமைப்பதில் முழு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒரு காலத்தில் நம்ப ஊர் மேற்கு மாம்பலம் 'நேஷனல்' தியேட்டர் போன்ற 'அல்கா சினிமா' மற்றும் சற்றே பெரிய 'தரம் பேலஸ்' என்ற இரண்டே திரையரங்குகள் மட்டுமே இருந்த நொய்டாவில் இன்று பற்பல 'மால்'கள் (சிறப்பு அங்காடி என்பது சரியான தமிழ்தானா?!). ஒவ்வொரு மாலிலும் 'ஸ்பைஸ்', 'பிக் சினிமா', 'வேவ்' என்று மல்டிப்ளெக்ஸ்கள்! 'தில்லித் தமிழ்ச் சங்கம்' மிகவும் தொலைவாக இருப்பதால் இங்கேயே 'அவ்வை தமிழ்ச் சங்கம்' என்ற பெயரில் முனைப்புடன் நடத்தி வருகிறார்கள். 'தி கிரேட் இந்தியா பிளேஸ்' என்ற சிறப்பு அங்காடியில் இவர்கள் அவ்வப்போது நடத்தும் நிகழ்ச்சிகள் பிரபலமானவை.
'தில்லி மெட்ரோ' நொய்டாவுக்கும் வரப் போகிறது என்று பத்திரிகையில் படித்த போது 'வரும்..... ஆனா வராது!' என்று வடிவேலு- 'என்னத்த' கன்னையா போல் இழுத்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் பிரமிக்கத்தக்க வேகத்தில் மெட்ரோ நொய்டாவுக்கு வந்தே விட்டது. செக்டர் 15, 16, 18, பொடானிகல் கார்டன், கோல்ப் கோர்ஸ் , செக்டர் 32 என்று ஆறு ஸ்டேஷன்கள் . தினமும் தில்லி சென்று வரும் அரசு மற்றும் தனியார் அலுவலர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, மெட்ரோ ஒரு வரப்ரசாதம். முதல் பெட்டியைப் பெண்களுக்கென்றே ஒதுக்கி விட்டார்கள். ஒரு சிக்கலான பார்முலாவை உபயோகித்து தில்லி மெட்ரோவும் நொய்டா நிர்வாகமும் வருமானத்தைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். (நான் போன முதல் ட்ரிப்பிலேயே மொபைல் போன் சுலபமாகப் பிக்பாக்கெட் ஆனது வேறு கதை!). இன்றைய தேதியில் நொய்டாவின் ஓரங்களில் வீட்டு மனை / அபார்ட்மென்ட் விற்கும் எல்லா வீட்டுத் தரகரும் தலையிலடித்துச் செய்யும் சத்தியம் ' அடுத்ததாக மெட்ரோ இந்த வழியாகத்தான் போகப் போகுது; ரேட்டு எகிறிடும் பாருங்க!'. சமீபத்தில் நொய்டா எக்ஸ்டென்ஷன் என்னும் பகுதியில் குறைந்த விலையில் கிடைக்கும் குடியிருப்புகளை நம்பி மத்திய வர்க்கத்தினர் பலரும் பெரும் தொகை முன் பணம் கட்டி இருந்தனர். நில ஆர்ஜிதம் பற்றிய விவசாயிகள் போராட்டமும் அதைத் தொடர்ந்து வந்த நீதி மன்ற உத்தரவுகளும் இவர்களின் மூலதனத்தைக் கேள்விக் குறியாக்கி விட்டன . இவர்கள் எல்லோரும் இப்போது கிரேடர் நொய்டா நிர்வாகம் முத்தரப்புக்கும் (நுகர்வோர், பில்டர் மற்றும் விவசாயிகள்) ஒரு சுமுகமான தீர்வு கொடுக்குமா என்று கவலையுடன் காத்திருக்கிறார்கள். கிரேடர் நொய்டாவின் மற்றொரு கோடியில் பட்டா பர்சோல் என்ற கிராமத்தில் இதே போன்ற விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் திக்விஜய் சிங்கும் களமிறங்கத் தேர்தல் அரசியல் உடனே சூடு பிடித்து விட்டது!
சாலை வழியாக தில்லி ஆஸ்ரமிலிருந்து DND என்று செல்லமாக அழைக்கப் படும் டெல்லி- நொய்டா-டைரக்ட் வளைவுப் பாலத்தைப் பிடித்தால் பத்தே நிமிடத்தில் நொய்டாவைத் தொட்டு விடுவீர்கள்! கிரேடர் நொய்டா இதை விட ஹை டெக்! நம்ப ஊர் சோழவரத்தைத் தூக்கிச் சாப்பிடும் பார்முலா ஒன் ட்ராக் (இதற்கும் புத்தர் பெயர்தான்!), இருபத்தைந்து கிலோமீட்டர் 'எக்ஸ்ப்ரெஸ் வே' என்று அதகளம்தான்!
சமீபத்தில் பெஹன் (சகோதரி) மாயாவதி அரசினால் பாபா சாஹேப் அம்பேத்கர் பெயரில் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் 'தலித் பிரேரணா ஸ்தல் அண்ட் கிரீன் கார்டன் ' ('தலித் எழுச்சி இடம்' என்று பொருள் கொள்ளலாம்) ஆகியவை திறக்கப் பட்டன. விசித்திரம் என்னவென்றால் சொல்லி வைத்தாற் போல் நொய்டா மற்றும் தில்லிக்காரர்கள் யாரும் அந்தப் பசுமைப் பூங்காவிற்கு வருகை தருவதாகத் தெரியவில்லை! வாரக் கடைசியில் வரும் எல்லாக் கூட்டமும் வெளியூர்க் கூட்டம்தான்! உள்ளே அண்ணல் அம்பேத்கர், சமூக சீர்திருத்தச் செம்மல்களான சாஹுஜி மகாராஜ், நாராயண குரு, மகாத்மா ஜ்யோதிபா புலே மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் மறைந்த திரு. கான்ஷிராம் ஆகியோரின் சிலைகள் உண்டு. முதல்வர் மாயாவதியின் சிலைகளும் ஏராளமான சிறிய, பெரிய யானை சிலைகளும் இப்போது தேர்தல் கமிஷன் உத்தரவினால் ஊதா நிறப் பாலிதீன் துணியால் மூடப் பட்டுள்ளன. துணியால் போர்த்தினாலும் வளைந்த தும்பிக்கையைப் பார்த்தாலே தெரிந்து விடுகிறது, இது யானை என்று! இந்தத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் உயிருள்ள யானை தெருவில் நடந்து போனால் என்ன செய்வார்களோ! பூங்கா எப்படியோ, மருத்துவமனை உணமையிலேயே உ.பி. யின் பல மாவட்டங்களில் இருந்து வரும் ஏழை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று. இதைத் தவிர, நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காகக் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேரை சட்ட பூர்வமாகக் குடியேறியவர்கள்தானா என்று சரிபார்க்கும் இமாலயப் பொறுப்பும் நொய்டா போலீஸின் தலையில் விழுந்துள்ளது!
மொத்தத்தில் காஸியாபாத் , பரீதாபாத் போன்று தூரமும் இல்லாமல், குர்கானைப் போல் மத்திய வர்க்கத்துக்கு எட்டாக் கனியாகவும் இல்லாமல் தில்லிக்கருகில் கச்சிதமான ஒரு துணைக்கோள் நகரம் நொய்டா. நொய்டாவாசிகள் எவரிடமாவது பேசிப் பாருங்கள் , சளைக்காமல் வர்ணிப்பார்கள் அதன் அருமை பெருமைகளை!
சினிமா விரும்பி
('வடக்கு வாசல்' பிப்ரவரி 2012 இதழில் சிற்சில மாற்றங்களுடன் வெளியானது)
Tamil gossip assured! May stumble upon some quality writing occasionally! ஊர் வம்பு நிச்சயம் உண்டு! சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு!
Wednesday, February 22, 2012
Monday, February 6, 2012
இந்த வார அலப்பரை 5- 'கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா மொழிபெயர்ப்பை!'
சமீபத்தில் சென்னை சென்று வர நேர்ந்தது. விமான நிலையத்தில் ' மெய்ப் புல அறைகூவலர் ' என்று ஒரு அறிவிப்புப் பலகை மிரட்டியது! தலைகால் புரியவில்லை! பிறகுதான் புரிந்தது, 'Physically Challenged' என்பதைத்தான் யாரோ ஆர்வக் கோளாறில் இவ்வாறு மொழி பெயர்த்துத் தள்ளி விட்டார்கள்! அதாவது, மாற்றுத் திறனாளியின் மெய் மற்றும் புலன்களை, அவற்றின் செயல்பாட்டைக் கடவுள் (அல்லது சமூகம்) சோதித்து விட்டாராம், 'சமாளி, பார்க்கலாம்' என்று அறைகூவல் (சவால்) விட்டு விட்டாராம். அப்படியே இருந்தாலும் அடுத்தவர் விட்ட அறைகூவலை ஏற்றுக் கொண்டவர் அல்லவா இவர், இவரை எப்படி அறைகூவலர் என்று அழைக்க முடியும்? வேண்டுமானால் 'உடல்/ மன ரீதியாக சவாலை எதிர் கொள்வோர்' என்று மொழி பெயர்க்கலாம். ஓரளவு சரியாக இருக்கும்.
கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா மொழிபெயர்ப்பை!
சினிமா விரும்பி
கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா மொழிபெயர்ப்பை!
சினிமா விரும்பி
Subscribe to:
Posts (Atom)
கோமுப்பாட்டி
கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...
-
"நான் ஒரு விளையாட்டு பொம்மையா?" 1985-87 இல் நான் பரீதாபாதில் பணியில் இருந்த போது மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தன...
-
சாமர்த்தியமாக, மிக சாமர்த்தியமாக ஒரு பெரிய கூட்டமே மகாத்மா காந்தியைக் குறைத்து மதிப்பிடவோ அல்லது வாய் கூசாமல் இழிவு செய்யவோ காத்திருக்கிறது!...
-
கடந்த மூன்றாண்டுகளில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதிலும் , இந்த BPO எனப்படும் கால் சென்டர் விஷயத்தில் மத்திய சுகாதார ...