Friday, April 3, 2009

' பாரதி என்றொரு கவிஞன் '
சமீபத்தில் ஒரு இணையதளத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரைப் பற்றி சில விமரிசனங்கள் எழுதப் பட்டிருந்தன. நான் எழுதிய பதில்கள் அதே தளத்தில் உடனே வெளியிடப்பட்டன. அவை இதோ கீழே:

பாரதி என்ற ஈடிணையற்ற கவிஞன் ஆங்கிலேயரை எதிர்க்காமல் சுக வாழ்வு கண்டிருக்கலாம். ராவ் பஹதூர் பட்டத்தை வாங்கிக் கொண்டு பங்களா, கார் என்று இக பர சுகங்களையெல்லாம் அனுபவித்திருக்கலாம். வாழ்நாள் முழுக்க பிடுங்கித் தின்ற வறுமையையும் இறுதி ஊர்வலத்தில் இருபது பேருக்கும் குறைவாய் இருந்த அவலத்தையும் தவிர்த்திருக்கலாம். ஏன், நல்ல மருத்துவம் பார்த்து அந்தப் பாழாய்ப் போன மரணத்தையே கூட இன்னும் சில பத்தாண்டுகள் தள்ளிப் போட்டிருக்கலாம். தன் ஒரே பெண் குழந்தையின் திருமணத்துக்குக் கூட சேகரித்து வைக்காத பிழைக்கத் தெரியாத மூடனாய் இருந்திருக்க வேண்டாம்! யாராவது கேட்டால் எனக்கு தேச சுதந்திரம் முக்கியமல்ல! அதை விட முக்கியம் சமுதாய மறுமலர்ச்சி அதற்காகப் போராடுகிறேன் என்று சொல்லி ஆங்கிலேயரிடமிருந்து சாமர்த்தியமாகத் தப்பியிருக்கலாம். சுதந்திரம் கிடைத்த பிறகும் தன் கவித்திறனைக் கொண்டு ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கலாம். பழைய ஆவணங்களைத் தோண்டி எடுக்க ஆரம்பித்தால் எந்த வரலாற்று நாயகனும் அப்பழுக்கற்று வெளி வருவது கடினம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து தப்பி ஒருவர் பாண்டிச்சேரிக்குச் செல்வதை ஒரு யுத்த தந்திரமாகத்தான் கொள்ள வேண்டும். அனைவருமே சிறை சென்று மடிந்து இயக்கமும் மண்ணாய்ப் போக வேண்டுமென்ற அவசியமில்லை. மகா கவிஞன் மீது சுலபமாக சுட்டு விரலை நீட்டுவோர் தானோ தன் மூதாதையரோ சுதந்திர வேள்வியில் என்ன பங்கேற்றோம் என்று சற்றே சிந்திக்கட்டும்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க , பாரதியின் பாடல்களில் உள்ள விடுதலை வேட்கையையோ அவை தமிழரிடம் ஏற்படுத்திய யுகப் புரட்சியையோ இந்த ஆவணங்கள் எள்ளளவும் குறைக்கப் போவதில்லையே!

**************************************************************************

நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாரதியின் வகுப்பினரிடம் இயல்பாகவே இருந்த வடமொழி வாஞ்சை பாரதியிடமும் இருந்திருந்தால் அது பஞ்சமா பாதகம் இல்லை! அது தமிழுக்கு அவர் செய்த துரோகமும் இல்லை! மேலும் , பாரதி போன்ற ஒரு கவிஞனுக்குத் தாய்மொழி தவிர நான்கைந்து மொழிகளில் பரிச்சயமும் புலமையும் இருப்பது சகஜம்தான். அப்படி இல்லையென்றால்தான் அது அதிசயம்! பாரதி வாரணாசி, பாண்டிச்சேரி போன்ற பல இடங்களில் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ’ என்று ஆணித்தரமாக உரைத்திருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

*************************************************************************
நான் முன்பே சொன்னது போல் நிஜ மாந்தர்கள் சற்றே ஏறக்குறையத்தான் இருப்பார்கள். நாம் விரும்பும் சகல விதமான கல்யாண குணங்களும் ஒருங்கே அமைந்த ஒரு கவிஞன் வேண்டுமென்றால் அது கற்பனையில் மட்டுமே சாத்தியம்!

**************************************************************************

ஜஸ்டிஸ் கட்சியோ அல்லது அதற்கு முந்தைய பிராமணரல்லாதார் பிரகடனமோ முதல் முதல் துவங்கப்பட்ட போது அதே இயக்கம் பின்னாளில் திராவிட இயக்கமாகப் பரிணாம வளர்ச்சியுற்று சமுதாய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இவ்வளவு மகத்தான வெற்றிகளைப் பெறும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, பாரதியைப் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஆங்கிலேயரை ஆதரிக்கும் இந்த இயக்கம் விரைவில் மங்கி விடும் என்றும் சுதந்திரப் போராட்டம்தான் நிலைத்து நிற்கும் என்றும் மனப்பூர்வமாக நம்பினார்கள். அன்றைய சூழ்நிலையில் அது அவர்களின் கணிப்பு . அவ்வளவுதான்! கணிப்புகள் தவறாகலாம்! இதில் பாரதியை மட்டும் தனிமைப் படுத்தி அவர் தலையை மட்டும் ஏன் ஐயா உருட்டுகிறீர்கள்?!

**************************************************************************

பாரதி போன்ற உணர்ச்சிப் பிழம்பான படைப்பாளிகள் பல விஷயங்களில் எஃகு போன்ற உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதில்லை! குறிப்பாக இந்தப் பெண்ணியம் சார்ந்த சிக்கலான விஷயங்களில் பாரதி ஒரு கால கட்டத்தில் மிகவும் புரட்சிகரமாகவும் பின்னாளில் சற்றே நடைமுறைக்குகந்த மாதிரியும் சிந்தித்திருப்பார் போல் உங்கள் கட்டுரையிலிருந்து தெரிகிறது. முழுக்க முழுக்க முரண்படாத வரையில், என்னைப் பொறுத்தவரை இது மன்னிக்கக் கூடிய சிறு குறைபாடுதான். அந்த நாளிலேயே ஒரு தமிழ்க் கவிஞன் பெண் விடுதலையின் பல்வேறு பரிமாணங்களை இவ்வளவு ஆழமாக ஆராய்ந்திருக்கின்றானே என்ற பிரமிப்புதான் எனக்கு ஏற்படுகிறது! அதை விடுத்து ‘ஆஹா பார்த்தீர்களா பாரதியின் போலித்தனத்தை?’ என்பது போன்ற தலைப்பும் வெறுப்பைக் கக்கும் சொற்பிரயோகங்களும் கட்டுரையின் நம்பகத்தன்மையைக் கணிசமாகக் குறைக்கின்றன.

சினிமா விரும்பி

2 comments:

Anonymous said...

Ur comment is Good..

Where did u see the original post?

Cinema Virumbi said...

Around 1 1/2 years back, in a series of articles on Bharathi, written in

http://www.keetru.com/

nanRi!

Cinema Virumbi

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...