Saturday, November 7, 2009

தென் கொரியா , ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 1)

வேலை நிமித்தம் ஆறு நாட்கள் தென் கொரியா ( சியோல் மற்றும் செங்க்வான் ) செல்ல நேர்ந்தது. முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே செல்கிறேன். 'ஐயையோ, டின்னர்ல நாய்க்கறி கொடுத்துடப் போறாண்டா' என்று பயமுறுத்திய பங்காளிகள் உண்டு! வழியில் பாங்காக்கில் இறங்கி காய்கறி விற்கும் படகில் தலைவரைப் போல் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்று பாடப் போகிறாயா என்று கிண்டலடித்த புண்ணியவான்களும் உண்டு. நேர்மையாக சாப்பாடு மற்றும் உடைகளைப் பற்றி அறிவுரை கொடுத்தவர்களும் உண்டு. (இது மிக உதவியாய் இருந்த கதை பின்னால்)

பாஸ்போர்ட்டில் ஒரு சர்தார்ஜியிடம் முதல் முறையாக ' Departed Delhi' என்ற முத்திரையை வாங்கிக் கொண்டு பாங்காக் செல்லும் தாய் விமானத்தில் அமர்ந்தேன். இந்தியன் வெஜிடேரியன் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததால் சுமாரான சாப்பாடு கிடைத்தது. (மற்ற பிளைட்களில் அப்படிக் குறிப்பிடாமல் போனதால் வேக வைத்த பீன்ஸையும் முட்டைக் கோசையும் தொண்டையில் திணித்தது தனிக்கதை ! )

பாங்காக் ஏர்போர்ட். திறந்து மூன்றே வருடங்கள் ஆன , உலகின் மிகப் பெரிய ஏர்போர்ட்களில் ஒன்று. 'சுவர்ணபூமி' என்ற சௌந்தர்யமான பெயருக்கேற்ப மிக அழகாகப் பராமரிக்கப் படுகிறது. தூரம் அதிகமென்பதால் லக்கேஜைத் தள்ளிக் கொண்டு நடக்க வசதியாக Travelator எனப்படும் படுக்கப் போட்ட எஸ்கலேட்டர் எக்கச்சக்கமாகப் பரப்பி வைத்திருக்கிறார்கள். சிலர் அதில் நிற்காமல் நடந்து செல்லும்போது சினிமாவில் ட்ராலி ஷாட் போல் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது!

நம்ப ஊர் தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்த பிரம்மாண்டமான சிற்பம் ஒன்று இருக்கிறது . வாசுகி என்ற பாம்பு, மேரு மலை எல்லாமே தத்ரூபம்! . மலையின் மேல் தாய்லாந்து கிரீடத்துடன் சிவபெருமான் போல மீசையுடன் ஒருவர்; . ஆனால் நான்கு கைகளில்தான் திரிசூலம் , சங்கு , சக்கரம் , வஜ்ராயுதம் எல்லாம் இருக்கின்றன ! கொஞ்சம் தள்ளி நம் கருடாழ்வார் போல ஒரு மிகப் பெரும் துவாரபாலகன் சிற்பம் கொள்ளை அழகு ! பாங்காக்கில் 'Visa on entry' எளிதில் கிடைக்குமென்றாலும் வெளியே போய் விட்டுத் திரும்ப நேரம் மிகக் குறைவாக இருந்ததால் வெளியே போகவில்லை.

டில்லியில் தாய் விமானத்தில் நமஸ்தே போட்டு வரவேற்றார்கள். சரி இந்தியா என்பதால் செய்கிறார்கள் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அவர்களும் உலகமெங்கும் ஏர் இந்தியா போல் வணக்கம்தான் போடுகிறார்கள் என்று!

பாங்காக்கிலிருந்து சியோல் போன கதை அடுத்த பகுதியில். கொஞ்சம் காத்திருக்கவும்.

சினிமா விரும்பி

No comments:

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...