Wednesday, October 6, 2010

'எந்திரன்' திரை விமர்சனம்வலை உலகில் பலரும் முதல் இரண்டு நாட்களிலேயே விமர்சனம் எழுதித் தள்ளி விட்டார்கள். நானும் படம் பார்த்து விட்டு வந்து பதிவு எழுதாமல் விட்டால் ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவன் போல் என்னைப் பார்ப்பார்கள் என்பதால் இந்தப் பதிவு!

ரோபோ (அது ரோபோ அல்ல ரோபோட் என்று எனக்கு லயோலாக் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் சொல்லித் தந்தது வேறு விஷயம்!) பற்றிய படம் என்றதும் 'என்னடா, கான்செப்ட் ரொம்பப் பழசாகிப் போச்சே, எங்கே ஸ்கூல் பசங்க டிராமா போடுவது போல் கையையும் காலையும் 'விசுக் விசுக்'கென்று ஆட்டிக் கொண்டு நடந்து சொதப்பி விடுவார்களோ' என்று பயந்தேன். நல்ல வேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை! ரோபோவின் நடை,உடை ,பாவனை,பேச்சு மிகவும் அருமையாக வந்திருக்கிறது. படம் பார்க்கும் முன் நான் மொத்தம் இரண்டு ரஜினி (ஒன்று விஞ்ஞானி வசீகரன் , மற்றொன்று சிட்டி ரோபோ ) என்றுதான் நினைத்திருந்தேன் .பிறகுதான் தெரிந்தது , மூன்றாவதாக ஒரு வில்லன் ரோபோ ( சிட்டி வெர்ஷன் 2.0)வும் உண்டு என்று . ஒரிஜினல் சிட்டி cute என்றால் சிட்டி 2.0 deadly! அடேங்கப்பா ! என்னா வில்லத்தனம் ?! வாயைக் கோணிக்கொண்டு 'ரோபோ' என்று அவர் (அது?) சொல்லும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது. சண்டைக் காட்சிகளில் இப்படி ஒரு அனல் பறப்பதைத் தமிழ் சினிமா இது வரை கண்டதில்லை.Yuen Woo Ping க்கும் பீட்டர் ஹெயினுக்கும் கொடுங்கப்பா ஆளுக்கு ஒரு பாட்டில் ஒயின்!

வசீகரனின் காதலி சனாவாக ஐஸ்வர்யா ராய் . மெதுவா, மிக மெதுவா, வயதாகிக் கொண்டிருக்கும் ஒரு பேரிளம்பெண்! சந்தானம் மற்றும் கருணாஸின் காமெடி எடுபடவில்லை என்றால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? சிட்டி செய்யும் குறும்புகளே போதும் என்று இயக்குனர் விட்டு விட்டார் போல. ஆனால் உதவாக்கரை எடுபிடிகளாக இருக்கும் அவர்களிருவரும் திடீரென்று விஞ்ஞானி ரஜினிக்கு துரோகம் செய்வதை ஏற்க முடியவில்லை.

பச்சைமுத்து கேரக்டரில் பத்தே நிமிடம் வரும் கலாபவன் மணி தமிழர்களை மிகவும் இழிவு படுத்தும் வசனம் ஒன்றைப் பேசுகிறார். கண்டிப்பாகக் கண்டிக்கப்பட வேண்டிய இந்த வசனத்தைப் பற்றி இதுவரையில் யாரும் பெரிதாகக் கண்டனம் எழுப்பியதாகத் தெரியவில்லை

இடைவேளைக்குப் பின் இரண்டு மூன்று முறை ரோபோவும் சனாவும் டூயட் பாடுகிறார்கள். சற்றே அலுப்புத் தட்டுகிறது. விஞ்ஞானி வசீகரன் பாடும் பெருவில் படமாக்கப் பட்ட 'கிளிமாஞ்சாரோ' பாடல் ஒரு விஷுவல் ட்ரீட். தாளம் போடவும் வைக்கிறது.இந்தப் பாடலில் பா. விஜயின் வரிகள் சற்றே offbeat! அதே போல் இன்னொரு பாட்டு அந்த ரஜினியையே பாட வைத்திருக்கலாம். பாடல்களில் 'கிளிமாஞ்சாரோ'வுக்கு அடுத்ததாக 'அரிமா அரிமா'வைச் சொல்லலாம். மற்றதெல்லாம் OK ரகம்.


இயக்குனர் ஷங்கருக்கு ட்ராபிக் போலீசைக் கண்டால் என்ன கோபமோ தெரியவில்லை!
'இந்தியன்' முதல் ஒவ்வொரு படத்திலும் அவர்களைக் கலாய்க்கிறார். எந்திரனில் கான்ஸ்டபிளாக வருவது மறைந்த கொச்சி ஹனீபா. கொஞ்ச நேரமே வந்தாலும் ரகளை!

என்னதான் ரோபோடிக்ஸ் பற்றிய படம் என்றாலும் நாம் பார்ப்பது முழுக்க முழுக்கப் பொழுது போக்குக்காக ஒரு தமிழ்ப்படம், அதுவும் ரஜினி படம் என்பதை சில இடங்களில் மறந்து விட்டார்கள். வழக்கமாக ரஜினிக்குக் கொடுக்கும் grand entry இல்லாதது, விவேக்கோ அல்லது வடிவேலுவோ செய்யும் காமெடி ரகளை இல்லாதது, ரஜினி கலாபவனுடன் சண்டை போடாமல் தலை தெறிக்க ஓடுவது போன்றவற்றை ஏற்கவே முடியவில்லை. பட வசனங்களில் ஆங்கில நெடி அதிகம். சனாவிடம் சிட்டி ரஜினி சொல்கிறார் " நான் 72 language இல் lullaby பாடித் தூங்க வைப்பேன்". இதையே 'நான் 72 மொழிகளில் தாலாட்டுப் பாடுவேன் ' என்று சொல்ல முடியாதா ?

ரோபோவின் திறமைகளைக் காட்டச் சின்னச் சின்னதாகப் பல காட்சிகளைச் செதுக்கியிருப்பதை ரசிக்க முடிகிறது. சிட்டி ரோபோ அசுர வேகத்தில் பல பெண்களுக்குக் கையில் மெஹந்தி வரைந்து விடுவது, மிகப் பெரிய ஒரு ப்ரைம் நம்பரைத் திரையில் எழுதிக் காட்டி விட்டு 'இதை சரி பார்க்க விஞ்ஞானிகளுக்கு ஏழு வருஷம் ஆகும்' என்பது, சதுரமாக ஆம்லெட் போடுவது, நிச்சயதார்த்தத்தின் போது சளைக்காமல் jugglery செய்வது, கெட்ட ரோபோ குண்டடி பட்ட தன் இடது கண்ணிலிருந்து குண்டை எடுத்தெறிந்து விட்டுத் தானே கண்ணை ரிப்பேர் செய்து மீண்டும் மாட்டிக் கொள்வது மற்றும் பல. ஹிந்தி 'Three Idiots ' பாணியில் ரோபோ பிரசவம் பார்க்கும் காட்சி ஒன்று உள்ளது. ஒரிஜினலைப் பார்த்தவர்களுக்கு இதில் சுவாரஸ்யம் கம்மிதான். ஒரு காட்சியில் MBBS படிக்கும் ஐஸ்வர்யா சிட்டியின் உதவியுடன் பரீட்சையில் ஹைடெக்காக பிட் அடிக்கிறார் என்பதும் நெருடுகிறது.

இடைவேளைக்குப் பின் நாம் எதிர்பார்க்கும் முன்பே க்ளைமாக்ஸ் தொடங்கி விடுகிறது.ரொம்ப நீளமான க்ளைமாக்ஸ் என்றாலும் ஒரு நொடி கூடத் தொய்வு இல்லை. Nail biting finish!! தமிழில் இது வரை வந்த பிரம்மாண்டங்களை எல்லாம் 'ஜுஜுபி'ஆக்கி விடுகிறது இந்த அண்ட பிரம்மாண்டம்! ஏற்கனவே பலரும் எழுதியது போல் ரத்னவேலு கேமரா, ஆண்டனி கோன்சால்விஸ் படத்தொகுப்பு சாபு சிரிலின் கலை எல்லாமே கன கச்சிதம். போயும் போயும் மும்பையின் பழைய டேனி டென்சோங்பாவை விட்டால் வேறு புது வில்லனே இவர்களுக்குக் கிடைக்கவில்லையா?! கடைசியில் திரையில் 15 நிமிடம் கிரெடிட்ஸ் ஓடும் போது ' அடேங்கப்பா! கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துறையில் இத்தனை தமிழர்களா ! 'என்ற பிரமிப்பு ஏற்படுகிறது.

படம் முழுக்க மறைந்த எழுத்தாளர் சுஜாதா விரவிக் கிடக்கிறார் என்றால் அது மிகையில்லை . 'ஐயோ! இப்படி ஒரு கெட்ட ரோபோட்டின் கையில் உலகம் சிக்கி விடக் கூடாதே!' என்று நாம் மனம் பதைக்கும் போதே படம் முழு வெற்றி அடைந்து விடுகிறது! பாலிவுட் பாஷையில் சொல்வதென்றால் 'பைசா வசூல்!'

எந்திரன்- 2010 இன் எம்.ஜி.ராமச்சந்திரன்

சினிமா விரும்பி

6 comments:

Anonymous said...

//படம் முழுக்க மறைந்த எழுத்தாளர் சுஜாதா விரவிக் கிடக்கிறார் என்றால் அது மிகையில்லை//

Well said sir..Good review.

Cinema Virumbi said...

nanRi Chandramohan!

Cinema Virumbi

sabari said...

sir good commend.

Cinema Virumbi said...

நன்றி சபரி!

சினிமா விரும்பி

SatheeshKrishnamurthy said...

Please write a lot more. You write so well.

Cinema Virumbi said...

Thanx Satheesh sir!

Cinema Virumbi

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...