Tuesday, November 17, 2009

தென் கொரியா, ஆறு நாட்கள் மற்றும் நான் (பகுதி 3)

லிமோசின் எனப்படும் சொகுசு பஸ்ஸில் டிரைவர், கண்டக்டர், லக்கேஜை டிக்கியில் எடுத்து வைப்பது எல்லாம் ஒரே ஆள்தான்! பஸ் கிளம்பும்போது கைடு போல் நம்மை வரவேற்கவும் செய்கிறார்! Hyundai, Daewoo, Samsung, LG என்ற நமக்குப் பரிச்சயமான கொரிய பெயர்கள் எங்கெங்கும் காணக் கிடைக்கின்றன . சென்னையில் உள்ள பச்சை நிறத் தாழ் தள சொகுசுப் பேருந்து பச்சை மற்றும் நீல நிறங்களில் சியோல் நகரெங்கும் பரவிக் கிடக்கிறது.

சாப்பாட்டைப் பொறுத்த வரை சில அனுபவஸ்தர்கள் சொல்லி அனுப்பினார்கள். ஹோட்டலில் பிரேக்பாஸ்ட் , லஞ்ச் , டின்னர் எதுவாக இருந்தாலும் தலையில் தொப்பி போட்டுக் கொண்டு கையில் frying pan உடன் நிற்கும் குக்கிடம் நேராகப் போய் விடு; உனக்கு வேண்டுகின்ற ரைஸ், நூடுல்ஸ் மற்றும் காய்கறி ஐட்டங்களை எல்லாம் கையால் காண்பித்து ' No Meat' என்று தெளிவாகச் சொல்லிவிட்டு பிரை செய்து கொடுக்கச் சொல்லு; உன் பிரச்னை தீர்ந்தது என்றார்கள். இந்த அறிவுரையை காலை ஆம்லெட் முதல் கடைப் பிடித்தேன். மற்றவர்களை விட எனக்கு ஐந்து நிமிடம் அதிகமாகியதே தவிர மற்றபடி உணவு சுடச் சுடக் கிடைத்தது. மிகவும் உபயோகமான அறிவுரை. வாழ்க அந்த நண்பர்கள்! 'உலகம் சுற்றும் வாலிபனில்' நாகேஷ் திணறுவதைப் போல் மூங்கில் குச்சிகளோடு மல்லுக் கட்டாமல் போர்க், ஸ்பூன் உபயோகப் படுத்தியே சாப்பிட்டேன்!

Pepsi, Coke fountain களைப் போலவே சின்னச் சின்ன ஹோட்டலில் கூட Cass, Hite என்னும் கொரிய பியர் வகைகளுக்கும் fountain உள்ளது. ஒரு ஹோட்டலில் 'கிம்' எனப்படும் ஐட்டம் சைடு டிஷ்ஷாக வைக்கப் பட்டது. அது என்ன என்று சர்வரிடம் கேட்டுப் புரிந்து கொள்வதற்குள் தாவு தீர்ந்து விட்டது. Sea, Sea என்று அந்த ஆள் சொல்ல Seafood ஆ ? என்று நான் திரும்பத் திரும்பக் கேட்கக் கடைசியில் அந்தப் பேக்கட்டே எனக்குக் காட்டப் பட்டது. அதில் Sea Weed என்று எழுதி இருப்பதைப் பார்த்ததும் சாப்பிட ஆரம்பித்தேன். கடுகெண்ணையில் வதக்கிய கருவேப்பிலை வடாம் போல் இருந்தது அந்தக் கடல் பாசி! வீட்டுக்கு இரண்டு சின்ன பேக்கட் வாங்கி வந்து விட்டேன்!

உலக மயமாக்கலின் வீச்சையும் தாக்கத்தையும் முழுமையாக உணர்ந்து கொண்ட அரசு , மக்கள். நான் போன எல்லா கவுண்டர்களிலும் response time மின்னல் வேகத்தில் பிரமிக்க வைத்தது. என்னைத் தேடி வந்து பேசிய ஒரு பேராசிரியர் 'எங்கள் மாணவர்கள் படித்து முடித்து இந்தியாவில் இந்தியக் கம்பெனிகளில் வேலைக்குச் சேர முடியுமா ?' என்று கேட்டார் . 'யோவ்! எங்க பசங்க வயத்துல அடிக்காதய்யா!' என்று சொல்லத் தோன்றியது. 'இந்தியாவிலேயே கொரிய கம்பெனிகள் பல உள்ளனவே, அவற்றில் சேரலாமே' என்று சொல்லி சமாளித்தேன் !

ஆங்கிலமே தெரியாமல் தன் துறையில் சிறந்து விளங்குபவர்களைப் பார்த்த போது எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. 30 - 40 வருடம் முன்னால் யாரோ ஒரு சிலர் பொறியியல் , மருத்துவம் மற்றும் பல துறைப் பாடப் புத்தகங்களையும் ஆங்கிலத்திலிருந்து கொரியனுக்கு மொழி பெயர்க்கும் கடினமான வேலையைச் செய்து முடித்திருக்க வேண்டும் . அப்போதுதான் இது சாத்தியமாகும் .தாய்நாடு மற்றும் தாய்மொழி மீது இவர்களுக்கு இருக்கும் அதீதப் பற்று நம்மவர்களுக்கு (தமிழராகட்டும், ஹிந்திக்காரர்களோ அல்லது மற்றவரோ ஆகட்டும் ) உண்டா என்றால் பதில் சொல்லத் திணற வேண்டியிருக்கும்.

பாங்காக்கில் நான் Transit இல் இருந்த போது எல்லாப் பத்திரிகைகளிலும் ஒரே தலைப்புச் செய்திதான். ராகேஷ் சக்ஸேனா என்ற இந்தியாவில் பிறந்த தொழிலதிபர் 1995 இல் ஒரு பெரிய வங்கி ஊழலில் சிக்கி, கனடாவுக்குச் சென்று அங்கே 13 வருடங்களாக வீட்டுக் காவலில் வைக்கப் பட, நீண்ட போராட்டத்துக்குப் பின் வெற்றிகரமாக அவரை தாய்லாந்துக்கு அன்றுதான் extradition செய்திருந்தார்கள். அவரும் நம்ப ஊர் போல் லேசாக ஜெயிலில் தலை காட்டி விட்டு நேரே மருத்துவமனைககுத்தான் சென்றார்!

பாங்காக்கிலிருந்து தில்லி வரும்போது பிளைட்டில் பெருமளவு இந்தியர்கள்தான். வசதியாக சீட் கிடைத்ததென்று நான்கு பேர் 'Taash khelenge!' என்று சத்தம் போட்டு சீட்டாட ஆரம்பித்து விட்டார்கள். சூழ்நிலை நாசமாக்கப் பட்டதால் (நம் ஆட்கள்தான் இதில் உஸ்தாது ஆயிற்றே!) தாய் விமானப் பணியாளர்களும் இவர்களுக்கு இது போதுமென்று எதுவுமே serve செய்யாமல் விட்டு விட்டார்கள்! ஒரு கிளாஸ் தண்ணீர் கூடக் கேட்டு வாங்க வேண்டி இருந்தது.

Cliche ஆக இருந்தாலும் சொல்கிறேன். அமரர் மணியன் முதல் இன்று வரை எல்லோரும் சொன்னதுதான் . அங்கு எல்லாவற்றிலும் தென்படும் ஒழுங்கும் நேர்த்தியும் நம் நாட்டில் என்றாவது ஒரு நாள் வருமா என்றால் சந்தேகம்தான்.

சினிமா விரும்பி

2 comments:

Ravi Swaminathan said...

கொரியா அனுபவம் சரியாகவே இருக்கு..!

//தாய்நாடு மற்றும் தாய்மொழி மீது இவர்களுக்கு இருக்கும் அதீதப் பற்று நம்மவர்களுக்கு (தமிழராகட்டும், ஹிந்திக்காரர்களோ அல்லது மற்றவரோ ஆகட்டும் ) உண்டா என்றால் பதில் சொல்லத் திணற வேண்டியிருக்கும்.//

கொரியா மட்டும் அல்ல.. உலகில் உள்ள முக்கால்வாசி நாடுகளில் அடிப்படை கல்வி தாய்மொழியில்தான்...

Cinema Virumbi said...

கொரியா அனுபவம்
சரியா இருக்கு..! would have qualified as Puthuk Kavithai!


nanRi Ravi!

Cinema Virumbi

கோமுப்பாட்டி

கோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...